Published:Updated:

`அதிகரிக்கும் காட்டுமாடு மனித எதிர்கொள்ளல்கள்' - செய்வதறியாது திணறும் வனத்துறை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பேரை காட்டுமாடு தாக்கியுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Indian Gaur
Indian Gaur

நீலகிரி மாவட்டத்தில் காடிழந்த யானை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உலவுகின்றன. குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் காட்டு மாடுகள் பகல் நேரத்திலே நடமாடுகின்றன .இதனால் மனித காட்டு மாடு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டுமாடு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு பெண் காயமடைந்தார்.

Indian Gaur Attack
Indian Gaur Attack

இன்று அதிகாலை குன்னூர் அருகில் உள்ள உலிக்கல் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரவு காவலராக இருந்துவந்த சின்னவெள்ளயன் என்ற 70 வயதான ராமையாவை காட்டுமாடு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை பரிசோதனைக்காகக் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

14-ம் தேதி குன்னூர் அருகில் உள்ள பிளேக் பிரிட்ஜ் போஸ்டல் குடியிருப்பைச் சேர்ந்த 87 வயதான சைமன் என்ற முதியவர் பிளேக் பிரிட்ஜ் வெலிங்டன் சாலையில் நடந்து சென்றவரை காட்டுமாடு தாக்கியதில் உயிரிழந்தார்.

Indian Gaur Attack
Indian Gaur Attack

இதே தினத்தன்று குந்தா அருகில் உள்ள மைனலா மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான லட்சுமி என்பவரை காட்டுமாடு தாக்கியது. அருகில் இலை பறித்துக்கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டு காட்டு மாட்டை விரட்டி இவரை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கட்டுமாடுகளும் திறந்த நிலை கிணற்றில் விழுந்து உயிரிழக்கின்றன. மேலும், பன்றி வெடி மற்றும் சுருக்கு வலைக் கம்பிகளில் சிக்கி காயமடைகின்றன. காட்டுமாடுகளிடமிருந்து மக்களையும் மக்களிடமிருந்து காட்டு மாடுகளையும் பாதுகாக்க வனத்துறை திணறி வருகிறது. இன்றும் ஊட்டி அருகில் உள்ள கல்லட்டி பகுதியில் சேற்றில் சிக்கி காட்டுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

Indian Gaur
Indian Gaur

காட்டுமாடுகள் குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வயது முதிர்ந்த கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்ட ஆண் காட்டுமாடுகளே பெரும்பாலும் நகர பகுதிகளில் உலவுகின்றன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உலவும் காட்டுமாடுகளைப் பிடித்து அடர் வனத்துக்குள் விட உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். நகரில் உலவும் காட்டுமாடுகள் கணக்கெடுக்கப்பட்டு பிடிக்கப்படும்" என்றார்.

இது குறித்து காட்டுயிர் ஆர்வலர் மூலிகை சுரேஷ் கூறுகையில், "மனித காட்டுமாடு எதிர்கொள்ளல்களைத் தடுக்க கூடுதலான நடவடிக்கை தேவைப்படுகிறது. அதேபோல் காட்டுமாடுகள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வனப்பகுதியையொட்டிய இடங்களில் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க உடனடி நடவடிக்கைத் தேவை" என்றார்.