Published:Updated:

`சிலிண்டர் கேட்டோம்.. சமையலறையே கட்டிக் கொடுத்தாங்க!’- வனத்துறையால் நெகிழும் நீலகிரி பழங்குடி மக்கள்

மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்களைத் தவிர்க்கும் வகையில் நீலகிரி மாவட்டம் நெடுகல்கம்பை பழங்குடியினர் கிராமத்துக்கு வனத்துறை சார்பில் சமையலறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

Tribal village
Tribal village ( Arun.K )

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நெடுகல் கம்பை பழங்குடியினர் கிராமம். வனம் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Tribal village
Tribal village

இவர்களுக்குக் கடந்த 2006ஆம் ஆண்டு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. இந்தப் பகுதி மக்கள் சமையலுக்கு விறகு அடுப்புகளை மட்டுமே சார்ந்துள்ளனர். எனவே விறகு தேவைக்காக அருகில் உள்ள வனப் பகுதிகளுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் செல்கின்றனர்.

சமீபகாலமாக கரடி, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனங்களை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களில் உலவுகின்றன. எனவே விறகு சேகரிக்கச் செல்கையில் மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நடைபெற்று வந்தன.

Tribal village
Tribal village

இதைத் தடுக்கும் வகையில் சமையல் எரிவாயு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வனத்துறை சார்பில் அனைவருக்கும் சமையல் எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் போதிய இடவசதி இல்லாமலிருந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் முதல் கட்டமாக 30 குடும்பங்களுக்குச் சமையல் அறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெடுகல்கம்பை ஊர் தலைவர் ராமன், ``இப்போதெல்லாம் முன்ன மாதிரி எங்களால காட்டுக்குள்ள போக முடியவில்லை. காட்டுமாடு, கரடி எல்லாம் டீ எஸ்டேட்டிலேயே வந்து நிக்குது. சமையலுக்கு விறகு சேகரிக்கிறது பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. எங்க கிராமத்தில் ஒரு வீட்டிலும் சமையல் எரிவாயு கிடையாது. அரசாங்கம் கட்டிக்கொடுத்த ஒரு ரூம்லதான் இருக்கோம்‌. வனத்துறை சார்பா கேஸ் சிலிண்டர் தரேன்னு சொன்னாங்க. ஆனா அதை வைத்துப் பயன்படுத்த எங்ககிட்ட இடவசதி இல்லை. பின்னர் அவங்களே சமையலறையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்" என்றார்.

Raman
Raman

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் விறகு சேகரிக்க வனப்பகுதிக்குள் செல்கின்றனர். இதனால் வன விலங்குகளால் தாக்கப்படும் அபாயம் இருந்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டு தற்போது இவர்களுக்கு சமையல் எரிவாயு வழங்கப்பட உள்ளது" என்றனர்.