Published:Updated:

நர்மதாவில் ஒரு நாள்! #MyVikatan

நர்மதா
நர்மதா

சில இடங்களில் பரந்து விரிந்திருந்த ஓடை சில இடங்களில் குறுகி இருந்தது. தெளிவான நீர். சுவையாகவும் இருந்தது.

ஞாயிறு காலைப் பொழுது எனக்கே எனக்கானது. மற்ற நாள்களை விட அன்று மிகச் சீக்கிரம் எழுந்துவிடுவேன். கடந்த இரண்டு மாதங்களாக நல்ல மழை. இயற்கை எனக்காகவே ஞாயிறு காலைப் பொழுதுகளில் மழையை நிறுத்திவைத்திருக்கும். இன்றும் அப்படித்தான். ஒரு கறுப்பு காபி குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம். நிறைய காடுகள், ஓடைகள் நிறைந்த ஒரு பகுதி. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் எனது இயற்கைத் தேடலுக்கு நல்ல தீனி கிடைக்கும் பகுதி. இதனாலேயே இடமாற்றம் வந்தும் வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.

நர்மதா
நர்மதா

எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வர அதுவும் ஒரு காரணி. வருடத்தில் இரண்டு முதல் மூன்று மாதம் மழை பெய்யும். காடுகள் நிறைந்த பகுதி என்பதால் மழை ஆக்ரோஷமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் காரில் அந்த ஓடையைக் கடக்கும்பொழுது நினைப்பது உண்டு, இது எங்கிருந்து உருவாகிறது? பாதை எவ்வாறு இருக்கும்? ஒரு நாள் சென்று பார்க்க வேண்டும்.

ஒரு முறை குடும்பத்துடன் சென்று அந்த ஓடையில் குளித்து மகிழ்ந்தோம். சில இடங்களில் முழங்கால் அளவுதான் நீர் இருக்கும். ஆனால், விசை ஆதிகம். முகநூலில் பதிவு செய்த அனைத்துப் படங்களுக்கும் நல்ல வரவேற்பு. இதோ, இன்று கிளம்பிவிட்டேன். என்னுடைய வீட்டிலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர். என்னுடைய இரு சக்கர வாகனத்தை அந்த ஓடையின் கரையில் நிறுத்திவிட்டு நடக்க ஆரம்பித்தேன். பல்வேறு நிறங்களில் கற்கள்.

சில இடங்களில் பரந்து விரிந்திருந்த ஓடை சில இடங்களில் குறுகி இருந்தது. தெளிவான நீர். சுவையாகவும் இருந்தது. இரு பக்கமும் காடு. தெளிவான வானம். மக்கள் நடமாட்டம் அறவே இல்லை. எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று தெரியாது. அடிக்கடி மொபைலில் நேரத்தைப் பார்த்துக்கொண்டேன். சிறிது நேரம் நடந்த பிறகு ஒருவித கெட்ட நாற்றத்தை உணர்ந்தேன். கரை ஓரமாய் ஓர் எருமையின் அழுகிய உடல்.

நர்மதா
நர்மதா

சமீபத்திய வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்ததாக இருக்க வேண்டும். சொல்ல மறந்துவிட்டேன் பத்து நாள்களுக்கு முன் இந்த ஓடையில் நல்ல வெள்ளம். அப்பொழுது இறந்திருக்கலாம். திடீர் என்று ஓர் எண்ணம். இப்பொழுது வெள்ளம் வந்துவிட்டால் என்ன செய்வது. இரு பக்கமும் கரையைப் பார்த்தேன். மிக அருகில்தான் இருந்தது. தைரியமாக நடந்தேன். மொபைலில் நிறைய படங்கள் எடுத்துக்கொண்டேன். சிறிது தூரம் சென்றபொழுது ஓடை இரண்டு பிரிவாகப் பிரிந்தது. சிறு குழப்பம். வலது பக்கம் சென்றேன். நல்லவேளை பிரிந்த அந்த இடது பக்க ஓடையும் சிறிது தூரத்தில் இணைந்துவிட்டது. இந்த இடத்தில் கரை ஓரங்களில் வயல்வெளிகள் சில இருந்தன. மக்கள் நடமாட்டம் இருந்தது. ஓடையும் நல்ல அகலமாக இருந்தது.

Statue of Unity
Statue of Unity

மறுபடியும் நேரத்தைப் பார்த்துக்கொண்டேன். நேரம் இன்னும் இருக்கிறது. நீரோட்டம் மிக வேகமாக இருந்தது. நம்பிக்கை வந்துவிட்டது. இந்த ஓடையின் ஆரம்பத்தைக் காண முடியும். சிறிது தூரத்தில் அந்தத் தடுப்பு அணையைக் கண்டேன். அருமையான காட்சி. கிட்டத்தட்ட ஒரு மணி நேர நடைப் பயணத்தின் களைப்பு மறைந்துவிட்டது. மனைவியுடன் ஒரு வீடியோ கால். பிறகு அப்பா, அம்மா, அக்கா அனைவருடனும் வீடியோ கால். நிறைய படங்கள் எடுத்துக்கொண்டேன். மனம் இல்லை. அடுத்த வாரம் குடும்பத்தோடு வர வேண்டும். திரும்பும்போது அந்தக் கிராமம் வழியே மெயின் ரோட்டை அடைந்தேன். நிறைவான பயணம்.

-விவேகானந்தன் ராமணன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க...

https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு