Published:Updated:

`அமேசான் உலகின் நுரையீரல் என்பது சரியா?' அமேசான் காடுகளின் ஆய்வாளர் பதில்

"அமேசானில், கடந்த 10 ஆண்டுகளில் தீப்பற்றும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது உண்மை. இதை நாம் கண்டிக்க வேண்டியதும் நிறுத்தச் செயல்படுவதும் அவசியம். அமேசான் காடுகளால் ஆக்சிஜன் இழப்பு என்பது பெரும் பிரச்னையின் சிறு பகுதி மட்டுமே!"

Amazon forest fire taken 20 years ago
Amazon forest fire taken 20 years ago ( BellaLack / Twitter )

கடந்த ஒரு வாரமாக, சர்வதேச ஊடகங்கள், உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடுகள் முதல் டீக்கடை பெஞ்ச் வரை 'அமேசான் காட்டை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்' என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அமேசான் காடுகளின் முக்கியத்துவம் முதல் அமேசான் காட்டில் தீ பரவுவதன் காரணம் வரை அனைத்தும் அலசி ஆராய்ந்தாகிவிட்டது. அமேசானுக்கு உதவி செய்த ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவை மனதார பாராட்டிவிட்டு, அமேசான் தீயை அணைக்க சரியாகச் செயல்படவில்லை என்று பிரேசில் அதிபர் பொல்சொனேரோவை கோபம்தீர திட்டிவிட்டு, அமேசானைக் காப்பாற்று கடவுளே என்று ஸ்டேட்டஸ் தட்டிவிட்டு, மீண்டும் அவரவர் வேலைக்குத் திரும்பிவிட்டோம்.

Amazon Fires
Amazon Fires
AP

ஆனால், தீ பரவிக்கொண்டே இருக்கிறது. அமேசான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளிலும் வளர்ச்சியின் பெயரால் சூழல் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு பிரேசில் மட்டும் விதிவிலக்கல்ல. அமேசான் குறித்து உலகின் அனைத்து ஊடகங்களும் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றன. உலக நாடுகள், இருவேறு நிலைப்பாடுகளை எடுக்கிறது. இந்நிலையில், "உலகில் ஆக்சிஜன் உற்பத்தியில் மொத்தம் 20 சதவிகிதம் பங்கு வகிப்பது அமேசான் மழைக்காடுகளே. அதனால்தான் அமேசானை ‘உலகின் நுரையீரல்’ என்கிறார்கள் சூழலியலாளர்கள்" என்ற கருத்து அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அமேசான் காடுகள் பற்றி ஆராய்ச்சி வல்லுநர் டான் நெப்ஸ்டெட், 'போர்ப்ஸ்' பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில், "இந்த வாதம் மிகவும் முட்டாள்தனமானது" என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.

பத்திரிகையாளர் மைக்கேல் செல்லேன்பேர்கிற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், "அமேசான், உலகின் நுரையீரல் என்பது மிகவும் முட்டாள்தனமான நம்பிக்கை. இதற்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. ஆமேசான் காடுகள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுவது போலவே, சுவாசித்தலின்போது ஆக்சிஜனை உள்ளிழுத்து, கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகிறது. அமேசான், வெளியிடும் அளவு ஆக்சிஜனை உட்கொள்ளவும் செய்கிறது என்பதே உண்மை" என்று தெரிவித்துள்ளார்.

Amazon Fire
Amazon Fire
AP

ஐ.நா-வால் அமைக்கப்பட்ட ஐ.பி.சி.சி என்று அழைக்கப்படும் காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசாங்கக் குழுவின் (The Intergovernmental Panel on Climate Change) அறிக்கையை எழுதிய முக்கிய நபர்களுள் ஒருவரான நெப்ஸ்டெட்டிடம், "அதிகப்படியான மழைக்காடுகள் அழிந்து, பெரும் மரங்களற்ற சவன்னா காடுகளாக மாறினால், உலகின் ஆக்சிஜன் இருப்பு குறையுமா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "நிச்சயமாகக் கிடையாது. அமேசான் அளிக்கும் அதே அளவு ஆக்சிஜனை, பிரேசிலில் அதிகம் பயிரிடப்படும் சோயா விளைச்சல் நிலங்களும், மேய்ச்சல் நிலங்களும் வெளியிடுகின்றன" என்று பதிலளித்திருக்கிறார்.

அதேசமயம், "அமேசானில், கடந்த 10 ஆண்டுகளில் தீப்பற்றும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது உண்மை. இதை நாம் கண்டிக்க வேண்டியதும் நிறுத்தச் செயல்படுவதும் அவசியம். அமேசான் காடுகளால் ஆக்சிஜன் இழப்பு என்பது பெரும் பிரச்னையின் சிறு பகுதி மட்டுமே" என்று கூறியிருக்கிறார்.

Brazil
Brazil
Wikimedia

மேலும், "அங்கு தீ பரவுவது உண்மைதான். ஆனால், அதில் பெரும்பகுதி காட்டுத்தீ அல்ல. விளைச்சல் நிலங்களுக்காக விவசாயிகளால் எரிக்கப்படும் பகுதிகளே, சமயங்களில் இது காடுகளுக்குப் பரவுகிறது. காலநிலை மாற்றம், அதிக வறட்சியை ஏற்படுத்துவதால்தான், இந்தத் தீ பெருமளவில் பரவுகிறது. மாறாக, காலநிலை மாற்றத்தால் தானாக தீ பிடிக்காது" என்கிறார் நெப்ஸ்டெட்.

பிரேசிலின் அமேசான் பகுதியில் பணியாற்றும் பிரபல பத்திரிகையாளர் குடின்ஹோ, "அமேசானில் தீ பரவுவது இது முதல்முறை அல்ல. உலகமே பதற்றம் கொள்ளுமளவுக்கு இது பெரும் தீயும் அல்ல. இதைவிடவும் அதிக அழிவு, அமேசான் பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள், இந்தத் தீயைக் குறித்துவைக்கும் பெரும்பான்மை கருத்துகள் தவறாகவே இருக்கின்றன. இது, பிரேசில் அதிபர்மீது அழுத்தம் கொடுத்து, தேவையற்ற முடிவுகளை எடுக்க அவரை உந்துகிறது. உலகத்தின் அமேசான் மீதான தற்போதைய நிலைப்பாடு, அமேசானுக்கு கூடுதல் ஆபத்தையே வரவழைக்கும். முக்கியமாக ஊடகங்கள், இன்னும் தெளிவாக இந்த விஷயத்தைக் கையாளவேண்டியது அவசியம்" என்று கூறியிருக்கிறார்.

Amazon Fire
Amazon Fire

இந்நிலையில்... பிரபலங்களால், உலகத் தலைவர்களால், ஊடகங்களால் அமேசான் தீ பரவுவதுபோல பகிரப்படும் ஒரு பிரபல புகைப்படமும் அமேசான் காடுகளுடையது கிடையாது. தவிர, அவை 20 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும் சாட்சிகளோடு நிரூபித்திருக்கிறது, 'போர்ப்ஸ்' பத்திரிகை. அமேசான் தீ என்று பரவிவரும் புகைப்படங்களில் பெரும்பாலானவை, அமேசானில் எடுக்கப்பட்டதல்ல. இந்தியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது. அவற்றில் பல, இருபது முப்பது ஆண்டுகள் பழைமையானதும்கூட என்பதே உண்மை.

அதே தவறு, அதே முடிவு... அமேசான் எதிர்கொள்ளும் `வளர்ச்சி' பிரச்னை!

சமயங்களில், ஒரு வதந்தி அல்லது ஓர் ஆதாரமற்ற தகவல், முக்கியப் பிரச்னைகளிலிருந்து உலகத்தின் கவனத்தை மற்றொரு பக்கம் திசைதிருப்பக்கூடியது. இவர்கள் எல்லாம் சொல்வதைப் பார்த்தால், அமேசான் விஷயத்தில்கூட உலக சக்திகள் எல்லாம் மக்களை திசை திருப்புவதாகக் கருத முடியும். நினைவில்கொள்க... 'கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்' என்பது தமிழ் கூறும் நன்மொழி. தீர விசாரிப்போம்.