Published:Updated:

`அந்தப் பறவைகள் கொடுக்குற நிம்மதி, வருமானத்தைவிடப் பெருசு!' அடர்வனம் உருவாக்கிய கிருஷ்ணவேணி

`காக்கை, குருவிகள் எங்கள் சாதி' என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்கி, அங்கே பறவைகள் தின்றதுபோக மீதமிருக்கும் பழங்களை மட்டுமே தனது பயன்பாட்டுக்கு பறித்து பயன்படுத்துகிறார்.

அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
அடர்வனத்தில் கிருஷ்ணவேணி ( நா.ராஜமுருகன் )

சுவற்றில் அடித்த பந்து நம்மிடமே திரும்பி வருவதைபோல, இயற்கையை நாம் வகைதொகையில்லாமல் அழித்ததன் விளைவாக, இன்று நாம் அதே இயற்கையிடம் இருந்து புயல், வறட்சி, வெள்ளம் என தொடர்ந்து வாங்கி கட்டிக்கொள்கிறோம். அதிலிருந்து படிப்பினைகளைக் கற்று, இயற்கையை காக்க, கட்டமைக்க முனைபவர்கள் சிலர்தாம். அந்தச் சிலரில் ஒருவர்தான், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.

அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
நா.ராஜமுருகன்

தனது ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில் இயற்கையாக அடர்வனத்தை வளர்த்து, அசத்தி இருக்கிறார். `காக்கை, குருவிகள் எங்கள் சாதி' என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்கி, அங்கே பறவைகள் தின்றதுபோக மீதமிருக்கும் பழங்களை மட்டுமே தனது பயன்பாட்டுக்குப் பறித்து, பயன்படுத்துகிறார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரிய வரப்பாளையம்தான் கிருஷ்ணவேணியின் ஊர். அங்கே இருக்கும் இவரது தோட்டத்தில் தென்னை, மலைவேம்பு, வேம்பு, கொய்யா, அத்தி, மாமரங்கள் என்று 20 வகையான மரங்களை வளர்த்து அடர்வனமாக்கி இருக்கிறார்.

அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
நா.ராஜமுருகன்

அவற்றுக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால், எண்ணற்ற பறவைகளும், பூச்சிகளும், தட்டான்களும், முயல் உள்ளிட்ட உயிரினங்களும் சர்வசாதாரணமாக வளையவருகின்றன. எங்கு தோண்டினாலும், மண்புழு ஊர்வதை காணமுடிகிறது. அந்த அடர்வனம் நம் மனதுக்கும், உடலுக்கும் அவ்வளவு சுகாபனுவத்தை தருகிறது.

ஆச்சர்யம் விலகாமல், அங்கே வேலையாக இருந்த கிருஷ்ணவேணியிடம் பேசினோம்.

``24 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் ஆச்சு. கணவர் கருப்பண்ணன், சொந்தமா தொழில் பண்ணுகிறார். எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைங்க. நான் டீச்சர் டிரைனிங் படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு, கணவர் என்னை வேலைக்கு அனுப்பலை. அதனால், ஆறு வருஷம் வீட்டுல சும்மா இருந்தேன். சிறையில் அடைஞ்சு கிடந்தாப்புல இருந்துச்சு. அதனால, பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி, இந்த தோட்டத்துக்கு வந்தேன். அப்போ, தென்னைக் கன்றுகள் வச்சிருந்தாங்க. இடையில் ஊடுபயிரா கரும்பு, மஞ்சள்னு பயிர் செஞ்சிருந்தாங்க.

 கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி
நா.ராஜமுருகன்

ஆனா, நான் இந்த இடத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். தொடர்ந்து ஆறு வருஷம் கரும்பு, மஞ்சள், சோளம்னு மாத்தி மாத்தி பயிர்செஞ்சேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில் வெள்ளாமை செஞ்சேன். பெரிய அளவுல வருமானம் இல்லை. ஆனா, மனசுக்கு நிறைவா இருந்துச்சு. 'விவசாயம் சம்பந்தமா படிப்போம்'னு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்துல, 2011-ம் ஆண்டு இளநிலை பண்ணை தொழில்நுட்பம்ங்கிற மூணுவருட படிப்பை படிச்சு முடிச்சேன். தொடர்ந்து இயற்கை முறையில் விவசாயம் பார்த்தேன்.

Vikatan

ஆனா, எங்க ஊர்க்காரங்க, `பைத்தியக்காரி'னு பட்டம் கொடுத்தாங்க. நான் கண்டுக்கலை. ஆனா, வேளாண்மைத்துறை அதிகாரிகள் என்னை ஊக்குவிச்சாங்க. அப்போ அதிகாரியா இருந்த ஜெயந்தி மேடம், என் தோட்டத்தில் வேளாண்மை சார்ந்த விஷயங்களை செயல்முறைப்படுத்தி பார்த்தாங்க. விவசாயம் சார்ந்த கூட்டங்களை என் தோட்டத்துலதான் போடுவாங்க. இதற்கிடையில், தென்னைக்கு ஊடாக கொகோ செடிகளை நட்டேன்.

அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
நா.ராஜமுருகன்

அந்தப் பழங்களை சாப்பிட குருவி, மயில், காக்கா, தவுட்டுக்குருவினு பல பறவைகள் வந்துச்சு. அவை போட்ட எச்சத்தின் வாயிலாக விதைகள் தூவப்பட்டு, கொய்யா, பப்பாளி, சீத்தா, அத்தி, மலைவேம்பு, சப்போட்டா, மூங்கில், வாழை, நவாமரம், சக்கரைக்கட்டி மரம், நெல்லினு பல செடிகள் முளைக்க ஆரம்பிச்சுச்சு. அதுக்கு, ஜீவாமிர்தம், மண்புழு உரம், பஞ்சகவ்யா, கடலைப்புண்ணாக்கு தண்ணினு பல இயற்கை உரங்களை வாங்கி, தெளிக்க ஆரம்பிச்சேன்.

தினமும் காலையில் வந்து, ஒவ்வொரு மரத்துக்கிட்டயும் பேசுவேன். இங்கே பழம் திங்க வரும் பறவைகள்கிட்டயும் மனசால பேசுவேன். அது அவ்வளவு இன்பத்தைத் தரும்.
கிருஷ்ணவேணி

`இயற்கையாக முளைச்சு வளர்ந்த எந்த மரத்தையும் வெட்டுவதில்லை; அதில் பழங்களை சாப்பிட வரும் பறவைகளை விரட்டுவதில்லை'னு சபதம் எடுத்துக்கிட்டேன். இதனால், ஒண்ணேகால் ஏக்கர் நிலம் முழுவதும் மரங்கள் வளர ஆரம்பிச்சுச்சு. இதனால், கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, கனகாம்பரம், கருணைக்கிழங்கு, பாகை, கறிவேப்பிலை, கேசவர்த்தினினு பல செடிகளும் வளர ஆரம்பிச்சுச்சு. இதனால், இவற்றுக்கு இயற்கை உரங்களான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மண்புழு உரங்களை நானே தயாரிக்க ஆரம்பிச்சேன். தென்னை, கனகாம்பரம், பப்பாளி மூலமா கிடைக்கும் மகசூல்தான் எனக்கு வருமானம். மாசம் 5,000 ரூபாய் கிடைக்கும்.

மண்புழு உரத்தோடு கிருஷ்ணவேணி
மண்புழு உரத்தோடு கிருஷ்ணவேணி
நா.ராஜமுருகன்

ஆனா, நான் வருமானத்துக்காக இந்த அடர்வனத்தை உருவாக்கலை. `இயற்கையை விட்டு விலகி, இயற்கையை அழித்து, செயற்கைக்கு மாறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு என் அடர்வனம் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்'னு நினைச்சேன். இதனால், பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் இங்கே பார்வையிட வர்றாங்க. அதேபோல், ஆரம்பத்தில் என்னை `பைத்தியக்காரி'னு தூற்றிப்பேசிய ஊர்க்காரங்க பலரும், `என்னதான் இருக்கு கிருஷ்ணவேணி தோட்டத்துல'னு இப்போ பார்க்க வர்றாங்க. அதுல 20-க்கும் மேற்பட்டவர்கள், என்னைப்போல இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டாங்க.

அவங்களும் இப்போ, மரங்களுக்கு நான் போடுற மாதிரி, இலை, சருகு, தென்னைமட்டைகளை கொண்டு மூடாக்குப் போடுறாங்க. இன்னும் பலர், `நானும் இயற்கை விவசாயத்துக்கு மாறலாம்னு இருக்கேன்'னு இந்த அடர்வனத்தை சுத்திப்பார்க்க வர்றாங்க. தினமும் என்ன வேலை இருந்தாலும், உடம்புக்கு முடியாத சூழல்லயும் இந்த வனத்தை பார்க்க வந்துடுவேன். இங்க வந்து வடக்கே இருந்து, தெற்கேவரை காலாற நடந்தாலே, எனக்கு எல்லா நோயும் தீர்ந்துடும்; மனசை அரிக்கும் கவலைகளும் நீங்கிடும். இங்கே எறும்புகள், சூவைனு இருக்கு. அதுங்க வனத்தில் நடக்கும்போது கடிக்கும். அதைக் கொல்ல மருந்து தெளிக்கச் சொல்வாங்க. ஆனா, 'அதுங்களை கொல்ல நமக்கு உரிமை இல்லை'னு மறுத்துடுவேன். தினமும் காலையில் வந்து, ஒவ்வொரு மரத்துகிட்டயும் பேசுவேன். இங்கே பழம் திங்க வரும் பறவைகள்கிட்டயும் மனசால பேசுவேன். அதுங்க தர்ற நிம்மதி வருமானத்தையெல்லாம் விட பெருசு.

அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
அடர்வனத்தில் கிருஷ்ணவேணி
நா.ராஜமுருகன்

அது அவ்வளவு இன்பத்தைத் தரும். எனது இயற்கை விவசாய ஆர்வத்தை ஊக்குவிக்கும்விதமா, குளித்தலைப் பக்கமுள்ள புழுதேரி வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல இருந்து விருது கொடுத்தாங்க. கரூர் மாவட்ட நிர்வாகமும், `சிறந்த இயற்கை விவசாயி'ங்கிற விருதைக் கொடுத்துச்சு. இங்கே இன்னும் இயற்கையா பறவைகள் மூலமா விழும் விதைகளை முளைக்கவச்சு, இன்னும் அடர்வனமாக்குவேன். இந்தப் பகுதி முழுக்க உள்ள விவசாயிகளை இதன்மூலம் இயற்கை விவசாயத்துக்கு திருப்புவேன். என் உயிர் இந்த அடர்வனத்துலதான் பிரியணும்" என்றார் அழுத்தமாக!

அப்போது, அங்கே சன்னமாக ஒலியெழுப்பிய ஒரு பறவையின் குரல், கிருஷ்ணவேணியின் ஆசைக்கு கட்டியம் கூறும்விதமாக இருக்கிறது.