Published:Updated:

`எங்க கிராமம் திரும்பவும் பசுமையாகும்!' திண்டுக்கல் கிராமத்தை மீட்டெடுக்கும் 2 ஆசிரியர்கள்

இழந்த ஊரின் பசுமையை மீட்க தீவிரமாகக் களமிறங்கி செயல்பட்டு வருகின்றனர், இந்த ஊர் இளைஞர்கள்.

மரம் நடும் பணியில் இளைஞர்கள்
மரம் நடும் பணியில் இளைஞர்கள்
நாங்கள் விடமாட்டோம். காடு எங்கள் தாய். குருவிகள் எங்கள் பிள்ளைகள்.
காசி ஆனந்தன்

இதோ இங்குமொரு இளைஞர் கூட்டம் நகர்மயமாக்கலால் துகிலுரியப்படும் இயற்கை அன்னையின் மரகதப் புடவையை மீட்க, மண்வெட்டியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மேற்குத் திசையில் சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, செட்டிநாயகக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சென்னமநாயக்கன்பட்டி என்கிற குக்கிராமம்.

சுமார் 3000 மக்கள்தொகையைக் கொண்ட இக்கிராமத்தில் படித்தோர் எண்ணிக்கை 800. முதன்மைத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், நிலக்கடலை, காய்கறிகள் மற்றும் பெருமளவில் கால்நடைத் தீவனப் பயிர்களென பலவும் கலந்துகட்டி விளையும் பன்முகத்தன்மை கொண்ட மண்.

இந்தக் கிராமத்தைச் சார்ந்த விஜய், செம்பட்டி அருகேயுள்ள காமுபிள்ளைச் சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக செயல்பட்டுவருகிறது 10 இளைஞர்களைக்கொண்ட 'சுவாமி விவேகானந்தர் இளைஞர் இயக்கம்'. ஆசிரியர் விஜய் மட்டுமன்றி, இந்தக் குழுவை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கும் இன்னொரு நபர், ஓவிய ஆசிரியர் யுவராஜன். இந்தக் குழு, பல்வேறு தளங்களில் இயங்கிவந்தாலும் கடந்த 9 மாதங்களாக அதிகம் கவனம் செலுத்துவது மரம் நடுதலில்தான்.

மரம் நடுவதற்கான பணிகளில்
மரம் நடுவதற்கான பணிகளில்

கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட்ட இக்குழுவின் பசுஞ்சேவை, பல்வேறு பொருளாதார மற்றும் சமூக விரோதிகளால் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையேயும் தொய்வின்றித் தொடர்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில், இந்த இளைஞர் குழுவால் நடப்பட்ட மரக்கன்றுகளின் எண்ணிக்கை 50 ஆகும். மரம் நடுவதோடு மட்டும் கடமை முடிந்ததென்று நினைக்காமல், அக்கன்றுகள் பாதுகாப்பாக வளர்வதற்கு ஏதுவாக சுமார் 10 முதல் 12 அடி வரையிலான உயரமுள்ள கன்றுகளையே தேர்ந்தெடுத்து நடுகின்றனர்.

ஊரிலுள்ள சேவை மனப்பான்மையுடைய பெரியோர்களிடம் பொருளுதவி பெற்று, கன்றுகளுக்கு வேலி அமைத்திருக்கின்றனர். கன்றுகளைப் பேணுவதில் தாங்கள் எதிர்கொண்ட சிரமங்களை ஓவிய ஆசிரியர் யுவராஜன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

பனை
பனை

"நாங்க எதிர்பார்த்த மாதிரி ஆடு, மாடுகளால செடிக்கு எந்தப் பாதிப்பும் வரல. சில சமூக விரோதிகள்தான் செடிய வேணும்னே முறிச்சுப் போட்டுருக்காங்க. செய்தி கேட்டு உடனே போய்ப் பார்த்ததும் நெலகொலஞ்சு போய்ட்டேன். கொஞ்சநாள் கழிச்சு திரும்பவும் முறிஞ்ச கன்னு துளிர்க்க ஆரம்பிச்சுச்சு. எனக்குள்ள ஒரு நம்பிக்கை வந்துச்சு. அப்போ முடிவுபண்ணோம், என்ன நடந்தாலும் செடிக்கு தண்ணி ஊத்துறத மட்டும் நிறுத்திடக் கூடாதுன்னு. நான் கொண்டயம்பட்டி அரசுப் பள்ளியில பகுதிநேர ஓவிய ஆசிரியரா வேலை செய்றேன். என்னோட பெரும்பாலான நேரத்த இதுக்குத்தான் செலவுபண்றேன். ஆனா, எவ்ளோ சிரமப்பட்டாலும் நம்ம கையால நட்ட கன்னு தழஞ்சு மேல வர்றத பாக்குறப்போ இருக்கிற குளுமை இருக்கே... அது தனி சுகம். உலகத்துல அதக் காட்டிலும் சந்தோஷம் வேற ஒண்ணுமில்லேங்க!" என்று விழி விரிகிறார் யுவராஜன்.

மட்டைக் கம்பெனி உரிமையாளரான பிரவீன் என்பவர், தேங்காய் மஞ்சு இலவசமாய் வழங்குகிறார். தேங்காய் மஞ்சு இடுவதால் செடியில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். சண்முகமுத்து என்பவர், ஒரு டேங்கர் மூலம் நீரூற்றுவதற்கான உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார். இப்படி பிரவீன், சண்முகமுத்து போன்ற மனிதர்கள்தான் இந்த கிராமத்தின் காற்றில் ஈரப்பதத்தை மிஞ்சவைத்துக்கொண்டிருக்கிறார்கள். புங்கம், வாதம், இலுப்பை, மகாகனி போன்ற பறவைகளின் பசியாற்றக்கூடிய கனி மரங்களையே தேர்ந்து நடுகிறார்கள். சமூக விரோதிகள் மற்றும் இயற்கை அழிவுகளால் சேதப்படுத்தப்பட்ட 8 கன்றுகளைத் தவிர, ஏறக்குறைய 40 கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்துவருகின்றன. மழைக்காலங்களில் கன்றுகளை நடுவதால், கன்றுகளும் அடர்ந்து செழிக்கின்றன. மூன்று மாதத்திற்கு நீரூற்றும் வேலையும் மிச்சமாகிறது.

கடந்த 2008, 2009-ம் ஆண்டுகளில், இந்த ஊரின் பனைமரச் சாலையிலிருந்த பல மரங்கள் சமூக விரோதிகளால் வெட்டப்பட்டன. ஒவ்வொன்றும் 60,70 வயதுடைய பழைமையான மரங்கள். எனவே, அதனால் மனமுடைந்த இந்த இளைஞர் குழு பனை விதை நடும் பணியையும் கடந்த மாதம் முதல் செய்து வருகிறார்கள்.

பணியில் இளைஞர்கள்
பணியில் இளைஞர்கள்

ஒரு வாரத்திற்குள்ளாகவே, சுமார் 300 பனை விதைகளை சென்னமநாயக்கன்பட்டி தாவாரங்குட்டை என்கிற குளம் மற்றும் பனைமரச் சாலை பகுதிகளில் விதைத்திருக்கின்றனர்.

இன்னும் ஐம்பது விதைகளை கொண்டயம்பட்டி அரசுப் பள்ளியில் நடவும் திட்டமிருக்கின்றனர். தற்போது, இவர்களின் கைவசம் 672 பனை விதைகள் உள்ளன. மாநில மரம் அழிந்துவரும் நிலையில் அதைக் காக்கவேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ள மாநில அரசு, சிந்தித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற நற்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உதவ வேண்டும். இப்பணிக்கு வரும் இடையூறுகளைக் களைய உதவ வேண்டும்.

பனை விதைகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடி... இழந்த நீர்வளத்தை மீட்டெடுப்பாரா எடப்பாடி?!

" சரிங்க, நீங்க கவனமா கெளம்புங்க. வண்டி வந்துக்கிட்டிருக்காம். நாம் போயி செடிகளுக்கு தண்ணி ஊத்தணும். மனுசனுக்கு வேளா வேளைக்கி பசியெடுக்கிற மாதிரி தான செடிகளுக்கும்..." என்று என்னிடம் சொல்லிவிட்டு நகர்ந்த ஆசிரியர் யுவராஜன் நின்றிருந்த இடத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத குட்டிச் சோலையும் பனைமரச் சாலையுமாக என் மேல் நிழலைக் கவிழ்த்துவிட்டு காற்றின் திசையில் அசைந்து கொண்டிருந்தன.

சிறுமலைப் பள்ளத்தாக்கில் சூரியன் மெல்ல இறங்கிய அந்த பிற்பகல் பொழுதின் வெளியில் அந்த பட்டாம்பூச்சிக் கவிஞனின் திரைப்பாடல் வரி சூரியக் கதிராய் என் மனத்தில் மின்னி மறைந்தது.

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுவதும் அழகு!
நா.முத்துக் குமார்.