Published:Updated:

`களைகட்டத் தொடங்கியது வேடந்தாங்கல் சீஸன்!' - தற்போதைய நிலவரம் இதுதான்

வேடந்தாங்கல் ஏரியில் நீர் நிறைந்து வருவதால் பறவைகள் வரத் தொடங்கிவிட்டன. இதையடுத்து வேடந்தாங்கலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

வேடந்தாங்கல்
வேடந்தாங்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுமார் 400 வருடங்களுக்கும் மேலான பாரம்பர்யம் கொண்டது. இங்குள்ள சரணாலயத்தில் சுமார் 30 வகையான 40,000 பறவையினங்கள் ஆண்டுதோறும் வந்து இனப்பெருக்கம் செய்து திரும்பும். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் தண்ணீர் இல்லாமல் அருகில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்தன. மாவட்டம் முழுக்கவே வறட்சி நிலவியதால் பெரும்பாலான பறவைகள் இனப்பெருக்கம் செய்யாமலேயே திரும்பிச் சென்றன.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

இந்த வருடமும் பருவமழை தாமதமாகப் பெய்யத் தொடங்கியது. வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லாததால் பறவைகள் மேல்மருவத்தூர் போன்ற ஏரிகளில் தஞ்சம் அடைந்தன. வழகிழக்குப் பருவமழை ஓரளவு பெய்யத் தொடங்கியதையடுத்து, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஓரளவுக்குத் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. மதுராந்தகம் ஏரியும் முழு கொள்ளவை எட்டியிருக்கிறது. வேடந்தாங்கல் ஏரியின் 17 அடி கொள்ளளவில் 12 அடிக்கு மேல் நீர் தேங்கியுள்ளது. இதனால் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அங்கு தங்கத் தொடங்கியுள்ளன. நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட பறவைகள் வேடந்தாங்கலில் தங்கத் தொடங்கிவிட்டன.

`பறவைகள் இல்லை; இருந்தாலும் சுற்றுலாவாசிகளை அனுமதிக்கிறோம்'- வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்த சோதனை

இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரகர் சுப்பையா, ``வேடந்தாங்கல் ஏரியில் 12 அடி அளவுக்குத் தண்ணீர் இருப்பதால் தற்போது பறவைகள் அங்கு வரத் தொடங்கிவிட்டன. சுமார் 4,000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருக்கின்றன. வெளியில் தங்கி இருக்கும் பறவைகள் கூடுகட்டாமல் இருந்தால், அந்தப் பறவைகளும் இங்கே வந்து தங்கிவிடும். வர்ணநாரை வரும் சீஸன் தொடங்கி இருக்கிறது. இதனால், பெரும்பாலான பறவைகள் ஓரிரு நாளில் வந்துவிடும் என நினைக்கிறோம். பறவைகளைப் பார்க்க சுற்றுலாப் பயணிகளும் வரத்தொடங்கிவிட்டார்கள்” என்கிறார்.

வேடந்தாங்கல் பறவைகள்
வேடந்தாங்கல் பறவைகள்

வேடந்தாங்கல் வருபவர்கள் காலை அல்லது மாலை நேரத்தில் வரும்போதுதான் அதிக அளவிலான பறவைகளைப் பார்க்க முடியும். சில பறவைகள் அதிகாலையிலேயே சென்றுவிடும். மாலை நேரத்தில் அவை கூட்டுக்குத் திரும்பும். அருகில் ஹோட்டல்கள், ஏ.டி.எம் மையங்கள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையாக வருவது நல்லது.