Published:Updated:

`யானை வழித்தடம் போல புலிகளுக்கும் வேண்டும்!” - விலங்கு நல ஆர்வலர்கள் #InternationalTigerDay

முதுமலை புலிகள் காப்பகம்
முதுமலை புலிகள் காப்பகம் ( கே.அருண் )

வங்கப்புலிகளின் வாழிடங்களில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நீலகிரி உயிர்ச்சூழ் மண்டலத்திலும் அத்துமீறல்கள் தொடர்வதால், புலிகளின் இறப்பு அதிகரித்தவண்ணமே உள்ளது.

புலிகள் பாதுகாப்பின் அவசியம் மற்றும் புலிகளின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 29-ம் தேதி, உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் பட்டியலில் உள்ள தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க, இந்தியாவில் 48 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

முதுமலை புலிகள் காப்பகம்
முதுமலை புலிகள் காப்பகம்
கே.அருண்

20 -ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான புலிகள் இருந்தன. அடுத்த 100 ஆண்டுகளுக்குள், புலிகளின் எண்ணிக்கை வெறும் இரண்டாயிரமாகக் குறைந்தது. இந்தியாவில், புலிகளைப் பாதுகாக்கும்பொருட்டு புராஜெக்ட் டைகா் (புலிகள் பாதுகாப்புத் திட்டம்) திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, உலகில் உள்ள மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. புலிகளின் தாயகமாக இந்தியா விளங்கிவருகிறது.

நீலகிரி உயிர்சூழல் மண்டலம், மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நாகர்ஹோலே, பந்திப்பூர், முதுமலை பிளிகிரிரங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள், வயநாடு வனச் சரணாலயம் ஆகிய பகுதிகள், ஆசியாவிலேயே அதிக புலிகளைக்கொண்ட நிலப்பரப்பாக உள்ளன.

கல்லட்டி சரிவு பகுதி
கல்லட்டி சரிவு பகுதி
கே.அருண்

புலிகளின் வாழிடங்களில் மிக முக்கியப் பகுதியாகக் கருதப்படும் நீலகிரி உயிர்ச்சூழ் மண்டலத்திலும் வனங்களை ஒட்டிய பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மனிதத் தவறுகளால் புலிகளின் இறப்பு வீதம் அதிகரிப்பதாக, காட்டுயிர் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் .

இதுகுறித்து சூழலியலாளர் சிவதாஸ் கூறுகையில், “ புலிகள் வாழ ஏற்ற சூழல் நிலவும் நீலகிரியில், வேட்டை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புலிகளுக்கு அச்சுறுத்தல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. முதுமலை புலிகள் காப்பக எல்லை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்ட நிலையிலும் இறப்புகள் அதிகரித்தவண்ணமே உள்ளது. புலிகளின் பாதுகாப்பில், ஒரு ஜான் முன்னேறினால் முழம் சறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரியில், கடந்த 5 ஆண்டுகளில் 3 புலிகள் ஆட்கொல்லி என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டன. கீழ் கோத்தகிரி மற்றும் ஊட்டி சுற்றுவடாரப் பகுதிகளில் 3 புலிகள் மர்மான முறையில் இறந்தன. தற்போது, பார்சன்ஸ் வேலி பகுதியில் இறந்த புலியின் வயிற்றில் பிளேடு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வாகனம் மோதி ஆண் புலி ஒன்று பரிதாபமாகப் பலியானது. புலிகளின் உயிரிழப்பு சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. எனவே, புலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்” என்றார்.

ஊட்டி அரசு கலை கல்லூரி வன விலங்கு உயிரியல்த்துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன்
ஊட்டி அரசு கலை கல்லூரி வன விலங்கு உயிரியல்த்துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன்
கே.அருண்

ஊட்டி அரசு கலைக் கல்லூரி வன விலங்கு உயிரியல்துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “வனங்களில் புலிகள் எண்ணிக்கை சீராக இருந்தால்,தான் வனங்களில் பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தக்கவைக்க முடியும். புலிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே காட்டின் வளம் நிர்ணயிக்கப்படுகிறது. புலிகளைப் பாதுகாப்பதன்மூலம் அதனுடைய இரை விலங்குகளான மான்கள், காட்டெருது, பன்றி போன்றவை பாதுகாக்கப்படுகின்றன. அவை சாப்பிடக்கூடிய வனப் பரப்பும் பாதுகாக்கப்படுகிறது. தொடா் கண்காணிப்பு காரணமாக, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 2014 கணக்கெடுப்பின்படி 2,226 புலிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எதிர்காலத்தில், புலிகளைப் பாதுகாக்க யானைகள் வழித்தடம் போல புலிகளுக்கான காரிடர் (வழித்தடம்) குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், “ முதுமலை புலிகள் காப்பகம், 321 சதுர கி.மீ பரப்பளவிலிருந்து, கடந்த ஆண்டு, நீலகிரி வடக்கு வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான 347 சதுர கி.மீ பரப்பளவை இணைத்து, தற்போது 668 ச. கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம்
முதுமலை புலிகள் காப்பகம்
கே.அருண்

இதன்மூலம், புலிகளின் வாழிடம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு