Published:Updated:

`100 டீ வேணும்னாலும் பாத்திரம் இருக்கு!' -பிளாஸ்டிக் ஒழிப்பில் அசத்தும் நாகை டீக்கடைக்காரர்

டீக்கடை தண்டபாணி
டீக்கடை தண்டபாணி

`எனக்கு நாலு டீ ', `எனக்கு இருபது டீ' என்று கேட்டு வந்துகொண்டே இருப்பவர்களுக்கு, அதற்குப் பொருத்தமான பாத்திரங்களில் கொதிக்கக் கொதிக்க டீயை ஊற்றி தந்துகொண்டிருக்கிறார், தண்டபாணி.

காலை எழுந்ததுமே டீக்கடைக்கு வரும் பழக்கம் உள்ளவர்கள் டெல்டா பகுதி மக்கள். டீக்கடைக்கு வந்துதான் முகம் கழுவி, டீ குடிப்பார்கள். அதன் பின்னர் வீட்டில் உள்ள மனைவி, குழந்தைகளுக்காக பாலித்தீன் கவர்களில் பார்சல் டீயும் வாங்கிச் செல்வார்கள். வியாபாரம் கருதி கடைக்காரர்களும் பாலித்தீன் கவர்களில் டீயைத் தருவது வழக்கம்.

ஆனால், மண்ணை நாசமாக்கும் பிளாஸ்டிக்கை தொடவே மாட்டேன் என்று தீர்க்கமாக இருககிறார் ஒரு டீக்கடைக்காரர்.

டீக்கடை
டீக்கடை

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில், ‘ஸ்ரீ முருகன் டீ & காபி பார்’ என்ற பெயரில் டீக்கடை நடத்திவருகிறார் தண்டபாணி. வைத்தீஸ்வரன் கோயிலைச் சுற்றி விவசாய கிராமங்கள் அதிகம். அதனால் கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளும் அதிகம். எப்போதும் வயல்களில் வேலை நடந்து கொண்டே இருக்கும். அங்கு வேலை செய்பவர்கள், டீ மற்றும் பலகாரங்களை பார்சல் வாங்கிச் சென்று சாப்பிடுவார்கள். அதேபோல கட்டுமான வேலைகள் நடக்கும் இடங்களுக்கும் பார்சல் வாங்கிச் செல்வார்கள்.

திடீரென பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கப்பட்டதால், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவர், தாமே பாத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு, அதில் பார்சல் டீயை கொடுத்து அனுப்பலாம் என்று முடிவெடுத்தார். அன்றைக்கு ஆரம்பித்த இவரது பாதுகாப்பான வழிமுறை, இந்த கொரோனா காலத்தில் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது. `எனக்கு நாலு டீ ', `எனக்கு இருபது டீ' என்று கேட்டு வந்துகொண்டே இருப்பவர்களுக்கு, அதற்குப் பொருத்தமான பாத்திரங்களில் கொதிக்கக் கொதிக்க டீயை ஊற்றித் தந்துகொண்டிருக்கிறார் தண்டபாணி. பலகாரங்களை துணிப்பையில் வைத்துக் கொடுக்கப்படுகிறது.

டீக்கடை தண்டபாணி
டீக்கடை தண்டபாணி

தண்டபாணியிடம் பேசினோம். " இந்த மண்ணையும், நிலத்தடி நீரையும் காக்க, நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்த போதுதான் எனக்கு பாத்திரம் வாங்கிவைக்கும் எண்ணம் வந்தது. ஒரு டீயில் ஆரம்பித்து 100 டீ வரைக்கும் பார்சல் கொடுத்து அனுப்பத் தேவையான பாத்திரங்கள் என்னிடம் இருக்கின்றன.

20 ஃப்ளாஸ்க், 30 வாளி, 10 டீ கேன்கள் கைவசம் இருக்கு. விவசாய நிலத்தில் பிளாஸ்டிக்கை அப்படியே போடும்போது நிலம் பாழ்படுவதோடு மட்டுமல்லாமல், நிலத்துக்குள்ளும் நீர் போகாமல் தடுத்துவிடும். ஒரு வயலில் சுமார் 50 பேர் வேலை செய்தால் எவ்வளவு பிளாஸ்டிக் அங்கு கொட்டப்படும் என்று பாருங்கள்.

எனது இந்த முயற்சியால், முடிந்தவரை மண்ணில் விஷத்தைக் கலப்பது தவிர்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல், பார்சல் வாங்கும்போது அவர்களுக்கு பணமும் மிச்சமாகும். பத்து பேர் இருக்கும் இடத்தில் ஐந்து டீ வாங்கினால் போதும். எல்லோரும் குடித்துவிடலாம்" என்கிறார் தண்டபாணி.

"எல்லாம் சரிதான், பார்சல் டீ கொடுத்து அனுப்பும் பாத்திரங்கள் சரியாகத் திரும்பி வந்துவிடுமா?" என்றபோது, "இது கிராமம். இங்க எல்லாரும் தெரிஞ்சவங்கதான். கொத்தனாருங்க அன்னிக்கு சாயங்காலம் வேலை முடிஞ்சு போறப்ப திருப்பக் கொண்டு வந்துடுவாங்க. விவசாய வேலைகளுக்கு வாங்கிட்டுப் போறவங்க. மறுநாள் காலைல கொண்டாந்து கொடுத்துட்டு, அன்னிக்கு எத்தனை பேருக்குத் தேவைன்னு சொல்லிட்டுப் போவாங்க. பணமும் பாத்திரமும் பத்திரமா வந்திடும்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு