Published:Updated:

தண்ணீரை பல வடிவங்களில் சேமிக்கும் முன்மாதிரி வீடு! மதுரை `நன்னீர்' கார்த்திகேயனின் ஆரோக்கிய முயற்சி

கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் அக்கம்பக்கத்தினர் அவதிப்பட்டாலும், என் வீட்டில் மட்டும் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. இதைப் பார்த்து அருகிலுள்ள நபர்களும் மழைநீரைச் சேமிக்கத் தொடங்கியது என் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

நன்னீர்
நன்னீர்

``மனிதர்கள் மட்டுமல்லாது உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது தண்ணீர்தான்.

முன்பெல்லாம் கோடைக்காலத்தில் மட்டும்தான் தண்ணீர்ப் பற்றாக்குறை பிரச்னை வரும். ஆனால், இப்போதோ எல்லாக் காலநிலையிலும் தண்ணீர் தட்டுப்பாடாகத்தான் இருக்கிறது. எப்போதாவதுதான் மழை வரும். அந்த மழையாலும் பயன் இருக்காது. காரணம் மழைநீர், சாக்கடையிலோ, சுகாதாரமற்ற நீர்நிலைகளிலோ கலந்து வீணாகிறது. வீணாவது மழை நீர் மட்டுமல்ல, நம் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையும்தான். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற வகையில் நம்ம ஊரில் எப்போதாவதுதான் மழை பெய்கிறது; அந்த நீரை வீணாக்காமல் சேகரித்து வைத்தாலே தண்ணீர்த் தட்டுப்பாடு வராது" என்கிறார் `நன்னீர்' திட்டத்தின் இயக்குநர் கார்த்திகேயன்.

இவர் மக்களிடையே மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பதற்காக வீட்டில் கிணறு, தொட்டி, வீட்டில் பயன்படுத்தப்பட்ட நீரைச் சேகரிக்க தனி குழாய், செடிகளுக்கு கழிவுநீரை விடுவதற்கான அமைப்பு, நீரூட்டல் குழி போன்றவற்றைச் சிறப்புற அமைத்திருக்கிறார். இதன்மூலம், முதலில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது சிறுவர்கள்தாம்.

மழைநீர்
மழைநீர்

தனியார் கம்பெனி ஒன்றில் நிறைவான சம்பளத்தில் பணிபுரிந்த கார்த்திகேயன், சமூகத்தில் சிறு மாற்றத்தையாவது கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய பின்பு உருவானதே இந்த `நன்னீர்' திட்டம். திட்டத்தை 2018-ம் ஆண்டு தொடங்கியுள்ளார். இத்திட்டத்தைப் பற்றி கேட்டது உற்சாகமாகப் பேசினார்.

``கார்ப்பரேட் கம்பெனிகளில் பணிபுரிந்து வந்ததால் வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தேன். சொந்த ஊர் மதுரை என்றாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான், 2012-ல் மதுரைக்கு வந்தடைந்தேன். அந்த ஆண்டு மதுரையில் மிகுந்த தண்ணீர்த் தட்டுப்பாடு. எனவே, குடிக்க தண்ணீர் வேண்டுமே என்பதற்காக தண்ணீரை விலை கொடுத்து வாங்கினோம். ஆனால், என் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. இப்போது தண்ணீரை விலைகொடுத்து வாங்கிவிட்டோம். வருங்காலங்களில் என்ன செய்வது. நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன்.

தண்ணீரைச் சேமிப்பது குறித்த புத்தகங்களை வாசித்தும் மழைநீரைச் சேமிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்களிடம் தொடர்புகொண்டும் விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். அதன்மூலம் தெளிவான வழி கிடைத்தது. மழை நீரை சேமிப்பதைவிட சிறந்த முறை வேறெதுவுமில்லை என உணர்ந்தேன். அதனால், என் வீட்டில் விழும் மழைநீரை நிலத்தடி நீராக மாற்றும் வகையில் வடிவமைத்தேன்.

என் வீடு மட்டுமல்லாது என் வீட்டின் அருகில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் வீணாகாமல் என் வீட்டின் தொட்டியில் தேங்கும் வகையில் என் வீட்டை வடிவமைத்தேன். கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் அக்கம்பக்கத்தினர் அவதிப்பட்டாலும், என் வீட்டில் மட்டும் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. இதைப் பார்த்து அருகிலுள்ள நபர்களும் மழைநீரைச் சேமிக்கத் தொடங்கியது என் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அனைவரின் மனதிலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே நன்னீர் திட்டம்.

மழை நீர்
மழை நீர்

மதுரையில் உள்ள அப்பன் திருப்பதி என்ற இடத்தில், ஒரு `மாதிரி' மழைநீர் சேமிப்புத் தொட்டிகளும் கிணறும் அமைந்துள்ள ஒரு வீட்டைக் கட்டினேன். குழந்தைகளிடமிருந்து மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தேன். எனவே, பள்ளி மாணவர்களுக்கு மழைநீரைச் சேமிப்பது குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறேன். பள்ளிக்குச் சென்று வெறும்பேச்சாக அவர்களிடம் இதைப் பற்றி பேசினால் அவர்களுக்குப் புரியப்போவதில்லை. இந்த வீட்டுக்கு, ஆசிரியர்களின் மூலம் மாணவர்களை அழைத்து வரச்சொல்லி, மாதிரிகளைக் காட்டி அவர்களுக்குத் தெளிவாக விளக்குவேன். மழைநீரை சேமிப்பது எப்படி என்றும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது எப்படி என்றும் தொடர்ந்து அவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறேன்.

மாணவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி வீட்டில் பெற்றோர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது நோக்கம். மேலை நாடுகளில் தண்ணீரைச் சேமிப்பது குறித்து தனி பாடப்பிரிவை நடத்திவருகிறார்கள். நம்மிடையே இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாததே தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்குக் காரணம். என் வீட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டேன். இப்படி மதுரையில் உள்ள அனைவரின் வீட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே நன்னீர் திட்டத்தின் குறிக்கோளாகும். மழைநீரைச் சேமிப்பது மற்றும் இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து மக்களிடையே ஏற்படுத்துவேன். எதுவரை என்றால், மாற்றத்தைக் காணும்வரை. அதுவரை நான் சோர்வடையப்போவதில்லைை" என்றார்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

உலகம் உருவானபோது எவ்வளவு தண்ணீர் இருந்ததோ அதே அளவுதான் இப்போதும் இருக்கிறது. தண்ணீரின் அளவு மாறவில்லை; அதன் நிலைதான் மாறியுள்ளது. காற்றிலும் கடலிலும், ஆவியாகவும் மேகத்திலும் நீர் தன் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதை நன்னீராக மாற்றி, எல்லோரும் பயன்படுத்துவது மனிதனின் கைகளில்தான் உள்ளது. கார்த்திகேயன் தனது சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி நல்ல மாற்றத்தை உருவாக்கி முன்மாதிரியாக விளங்குகிறார். அனைவரும் அந்த மாற்றத்தை பெற வேண்டும் என்ற வகையில் அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மிகவும் ஆரோக்கியமானது. அவரின் எண்ணம் நிறைவேறட்டும்.