Published:Updated:

உலகத்தரத்தில் ``தேசிய தொல்லுயிர் படிம அருங்காட்சியகம்’’ தமிழகத்தில் அமைய வேண்டும்... ஏன்?

தொல்லுயிர் படிமங்கள்

ஆச்சரியம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் சுமார் கோடியாண்டு பழமையான டைனோசரின் எலும்பு ஒளிரும் தன்மையுள்ள அமுதக்கல்லாக (Opal) மாறிய நிலையில் கிடைத்துள்ளது. அமுதக்கல் என்பது மண்ணின் மறுவடிவமே ஆகும். இந்த அமுதக்கல்லும் குறைந்தவிலை ஆபரணக்கல்தான்.

உலகத்தரத்தில் ``தேசிய தொல்லுயிர் படிம அருங்காட்சியகம்’’ தமிழகத்தில் அமைய வேண்டும்... ஏன்?

ஆச்சரியம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் சுமார் கோடியாண்டு பழமையான டைனோசரின் எலும்பு ஒளிரும் தன்மையுள்ள அமுதக்கல்லாக (Opal) மாறிய நிலையில் கிடைத்துள்ளது. அமுதக்கல் என்பது மண்ணின் மறுவடிவமே ஆகும். இந்த அமுதக்கல்லும் குறைந்தவிலை ஆபரணக்கல்தான்.

Published:Updated:
தொல்லுயிர் படிமங்கள்

அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முறையே ஒரு அருங்காட்சியகம் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு தொல்லியல் படிம அருங்காட்சியகங்கள் உள்ளது. தொல்லுயிர் படிமங்களை ஏன் பாதுகாக்க வேண்டும், அதன் அவசியம் என்ன என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இனி தமிழகத்தில் மற்ற இடங்களில் கிடைக்கும் தொல்லுயிர் படிமங்களை பார்ப்போம்.

இரண்டாவது அருங்காட்சியகமாக, சாத்தனூரில் 2 கோடி ஆண்டுகள் பழமையான ஒரு கல் மரபூங்கா உள்ளது. பெரம்பலூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் இந்த இடம் உள்ளது. இந்த தொல்லுயிர் படிமத்தைச் சுற்றி, வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதை டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் கண்டுபிடித்தார். இந்த கல் மரம் சுமார் 30 அடி நீளமுடையது. இங்கே 150 தொல்லியல் படிமங்கள் இருக்கிறது. இவற்றை விரிவாக விளக்க முதுகலை பட்டதாரி ஒருவரையும் நியமித்துள்ளனர். இதனை மேம்படுத்தியதும் பெரம்பலூர் ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப் பிரியா தான்!

பெரம்பலூர் ஆட்சியர்  வெங்கடப்பிரியாவிடம்  தொல்லுயிர் படிமம் ஒன்றை கொடுத்த போது.
பெரம்பலூர் ஆட்சியர் வெங்கடப்பிரியாவிடம் தொல்லுயிர் படிமம் ஒன்றை கொடுத்த போது.

மூன்றாவதாக விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே திருவக்கரை என்ற சிற்றூரில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இந்த ஊர் சங்கராபரணி என்னும் ஆற்றங்கரையில் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட கல்லாய் மாறிய மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவை. இங்கு இந்த தொல்லுயிர் படிம மரங்களின் பெயரும் அறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கே இருக்கும் போது கால சக்கரத்தில் பயணித்து இரண்டு கோடி வருடங்களுக்கு முந்தியக் காலத்திற்குப் பயணித்தது போல் ஓர் உணர்வு கிடைத்தது. குழந்தைகளும் இவற்றைப் பார்த்து மகிழ்ந்தனர். மக்கள் பல நாடுகளிலிருந்து வந்து இந்த பூங்காவைப் பார்த்து வியந்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டவர்கள் அவர்கள் நாட்டிற்கு இந்த பூங்காவிலிருந்து இரண்டு மரபுதைப்படிவங்களை நன்கொடையாக வாங்கிச் சென்றுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவற்றை அங்கே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்! நம்மில் எத்தனை பேருக்கு இப்படி ஒரு கல்மரப்பூங்கா இருப்பது தெரியும்?

நான்காவதாக அரியலூர் திருச்சி நெடுஞ்சாலையிலும் ஒரு தொல்லுயிர் படிம அருங்காட்சியகம் உள்ளது. இங்கும் நூற்றுக்கணக்கான தொல்லுயிர் படிமங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகங்கள் புவியியல், தாவரவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிக்கும் மாணவர்களின் அறிவுப் பசிக்குச் சிறந்த தீனி. இந்த நான்கு அருங்காட்சியகங்களும் அளவில் மிகச்சிறியது. மேலும்இந்த அருங்காட்சியகங்கள் போதுமானதில்லை.

தொல்லுயிர் படிமங்கள்
தொல்லுயிர் படிமங்கள்

இந்தியாவில் கிடைக்கும் தொல்லுயிர் படிமங்கள் ஏராளம் ஏராளம். தமிழகத்தில் உலகத்தரத்தில் 30 கோடி மதிப்புள்ள மிகப் பெரிய தேசிய தொல்லூயிர் படிம அருங்காட்சியகம் அவசியம் அமைய வேண்டும் எனக் கருதுகிறேன்.

சுமார் 20 கோடி செலவில் கட்டடமும், 5 கோடியில் உள்ள கட்டமைப்பும், 5 கோடி சேமிப்பு நிதியாகவும் கொண்ட ஒரு அருங்காட்சியகத்தை பெரம்பலூர் அல்லது அரியலூரில் அமைத்தால் இந்த பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

தமிழகமெங்கும் வகை வகையாகப் பல்லாயிரக்கணக்கான தொல்லுயிர் படிமங்களைச் சேகரிக்க முடியும். கன்னியாகுமரியிலிருந்தே இந்த தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டிலும் இவை நிறைய கிடைக்கிறது. தூத்துக்குடியிலும், அதன் அருகே உள்ள கோரம்பள்ளம் என்ற கிராமத்திலும், திருச்செந்தூரிலும், அதன் அருகே உள்ள குரும்பூர் மற்றும் ஆத்தூரிலும், இங்கு உள்ள சோமநாதர் கோயில் கல்தூண்களிலும் நிறைய படிமங்கள் காணப்படுகின்றன.

இருப்பினும் அரியலூர், பெரம்பலூர் மற்றும் விழுப்புரத்திலிருந்து வடசென்னை வரையிலான பகுதிதான் மிகப்பழமையான தொல்லுயிர் படிமங்கள் கிடைக்கும் இடமாகும். மேலும் நர்மதா நதிக்கு வடக்கே ஆரம்பித்து இமயமலை வரையிலான பகுதிகளிலும் தொல்லுயிர் படிமங்கள் கிடைக்கிறது. குஜராத் பகுதி மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் நிறைய டைனோசர் படிமங்களும் கிடைக்கிறது. ஆனால் இந்திய மண்ணில் அதிகம் அறியப்படாதது தொல்லுயிர் படிமங்கள்தான் என நான் கருதுகிறேன். இந்திய மண்ணில் கிடைக்கும் தொல்லுயிர் படிமங்களை ஒன்று சேர்த்தால் உலகில் பெரிய அருங்காட்சியகம் அமைக்க முடியும்.

 நத்தையின் தொல்லுயிர்படிம
நத்தையின் தொல்லுயிர்படிம

திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியிலும், சென்னை ப்ரெசிடென்சி கல்லூரியிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறையிலும், தஞ்சை கலைக் கல்லூரியிலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் உள்ள உயிர் தொழில்நுட்பத் துறையிலும் பல்வேறு தொல்லுயிர் படிமங்கள் சேகரித்துப் பாதுகாத்து வருகின்றனர். இது தவிரப் பல மாநில GSI களிலும் (Geogrphycal Society of India) நிறைய தொல்லுயிர் படிமங்கள் சேகரித்து பாதுகாக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாட்டில் ஒரு அருங்கட்சியகத்தில் பணியாற்றும் நிர்மல் ராஜாவிடம் நிறைய படிமங்கள் உள்ளன. இவர் பல அழகான கண்ணைக்கவரும் அம்மோனைட் படிமங்களை பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். மேலும் அஸ்வேதா என்ற 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடமும் நிறைய தொல்லுயிர் படிமங்கள் உள்ளது. எனக்குத் தெரியக் கேரளாவில் ஒரு நண்பரும் கும்பகோணத்தில் இருவரும் நிறைய தொல்லுயிர் படிமங்களைச் சேகரித்து சேர்த்து வைத்துள்ளனர்.

முத்து கண்ணைக் கவரும்படி ஒளிர்வதற்கு காரணம் அதன் மேல் இருக்கும்அரகோனைட் (aragonite) என்ற பொருளாகும். இதுமாதிரி ஒளிரும் தன்மை கொண்ட ஒரு அமோனைட் ஒன்றை குன்னம் அருகே வயற்காட்டின் வரப்பில் கண்டெடுத்தோம். அங்கு எங்களைப் பார்த்த ஒரு பெரியவர் என்னிடம் கொஞ்சம் தொல்லுயிர் படிமங்கள் இருக்கிறது. வாருங்கள் தருகிறேன் ‌என அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் வீட்டில் சில கருங்கல்லாய் மாறிய சில சிப்பியினங்களையும் பல அமோனைட்டுகளையும் காட்டினார்.

உடைந்த பாகத்தில் அழகாக தெரியும் பச்சை நிறம்.
உடைந்த பாகத்தில் அழகாக தெரியும் பச்சை நிறம்.

அந்த சிப்பிகளில் ஒன்று கை தவறி கிழே விழ உடைந்த பாகத்தில் கண்ணை பறிக்கும் அழகான பச்சை நிறம் தெரிய ஆரம்பித்தது. விலை உயர்ந்த கற்கள் போன்றுள்ள இது என்ன எனக் கேட்டார். அந்த ஒளிரும் கற்கள் நொறுங்கிய அரிசி போல் இருந்தது. இவை அரகோனைட் (Aragonite) மற்றும் கல்சைட் (Calcite) போன்ற பொருட்கள்.

அமோனைட்டுல் இருந்து அமொலைட் (Ammolite) என்ற ஆபரணக்கல் கிடைக்கிறது. இதனை உலக அணிகலன்கள் கூட்டமைப்பு 2007ல் ( World Jewelry Confederation) ஆபரணமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த அமொலைட் முத்தில் காணப்படும் பளபளப்பான அரகோனைட் என்ற பொருளால் ஆனதுதான். இது நத்தை மற்றும் சிப்பிகளில் காணப்படும் ஒரு வேதிப் பொருளாகும். ஜப்பான் மக்கள் இதனை விரும்பி வாங்கி அணிந்து கொள்கின்றனர்.

கல்சைட் கல்லாய் மாறிய பவளப்பாறைகளில் அதிக அளவில் காணப்படுகிறது. காலம் பல கோடி வருடங்கள் என உருண்டோட அமொலைட்டும் கல்சைட்டாக மாறிவிடுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இவை பார்க்க விலை உயர்ந்த கற்கள் போன்று தோன்றினாலும் இவற்றைப் பட்டைத்தீட்ட முடியாது. அதனால் விலை போகாது என கூறினேன். அதே சமயத்தில் உடையாமல் ஒரே கல்லாக இவை கிடைத்தால் கம்மலிலோ அல்லது கழுத்தில் அணியும் மாலையில் பதக்கமாகவோ பதித்துக் கொள்ளலாம். ஆனால் இது எளிதில் உடைந்துவிடும் !

ஆச்சரியம் என்னவென்றால் ஆஸ்திரேலியாவில் சுமார் கோடியாண்டு பழமையான டைனோசரின் எலும்பு ஒளிரும் தன்மையுள்ள அமுதக்கல்லாக (Opal) மாறிய நிலையில் கிடைத்துள்ளது. அமுதக்கல் என்பது மண்ணின் மறுவடிவமே ஆகும். இந்த அமுதக்கல்லும் குறைந்தவிலை ஆபரணக்கல்தான். இந்த டைனோசர் குதிரை போன்ற முகத்தையும் கங்காரு போன்ற உடலமைப்பையும் கொண்டது!! கங்காரு என்றால் "தெரியாது எனப் பொருள்". ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்த ஆங்கிலேயர்கள் இந்த விலங்கின் பெயர் என்ன எனக் கங்காருவைப் பார்த்துக் கேட்க, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள்‌ தெரியாது எனச் சொல்ல, அது புரியாமல் கங்காரு என அழைக்க ஆரம்பித்துவிட்டனர் !

இந்த கல்லாய் மாறிய தொல்லுயிர் படிமங்களின் ஒளிரும் தன்மைக்கான காரணங்கள் மற்றும் அதன் மதிப்பை எல்லாம் விளக்கினாலும் அந்த கிராம மக்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை.‌ இறுதியாகக் கருங்கல்லாக மாறிய ஒரு அமோடைட்டைத் தந்தனர். அவர்கள் வீட்டில் ஒரு மிகப் பெரிய அமோடைட்டை பாதுகாத்து வைத்திருந்தனர். காரணம் உள்ளே வைரம் இருப்பதாக அவர்களின் நம்பிக்கை !

தொல்லுயிர் படிமங்கள்
தொல்லுயிர் படிமங்கள்

தமிழ்நாட்டில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில்தான் நிறைய சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருளே இந்த மாவட்டங்களில் உள்ள சுண்ணாம்பு பாறைகளும், வெள்ளைக் களிமண் தாதுகளும் அதனுள் நிறைந்திருக்கும் எண்ணற்ற தொல்லுயிர் படிமங்களும்தான். இந்த தொழில் சாலைகள் இங்கு சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. இவை அரைத்து சிமெண்டாக்கிய தொல்லுயிர் படிமங்கள் எண்ணிலடங்காதவை.

ஒருவழியில் பார்த்தால் நம் எல்லோர் வீடுகளிலும் நம்மைச்சுற்றி எது இருக்கிறதோ இல்லையோ நிச்சயமாக தொல்லுயிர் படிமங்கள் இருக்கிறது. ஆனால் அவை அரைத்து தயாரித்த சிமெண்ட் வடிவில் உள்ளது ! இப்போது அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொல்லுயிர் படிமங்கள் நிறைந்த சுண்ணாம்பு பாறைகளையும், வெள்ளைக்களிமண் தாதுக்களை வெட்டி எடுக்க இடமில்லை. பெரும்பாலான இடங்களில் தோண்டி எடுத்து சிமெண்ட் தயாரித்தாகி விட்டது. இப்போது இந்த தொழிற்சாலைகளுக்குத் தேவையான சுண்ணாம்பு பாறைகளைத் தமிழகத்தின் வேறு இடங்களிலிருந்தும் எடுத்துக் கொண்டுவந்து சிமெண்ட் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர் !!

தொல்லியல் படிமங்களுக்காக சிமெண்ட் தொழிற்சாலைகளை மூடத்தேவையில்லை. இந்த தொழிற்சாலைகள்தான் இவ்விரு மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாகும். ஆனால் அந்த தொல்லுயிர் படிமங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் சுரங்கங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், JCP இயக்குனர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை இப்போது ஏற்படுத்தினால் கூட போதுமானது. மேலும் தொழிற்சாலைகள் ஒருவரை நியமித்து தொல்லுயிர் படிமங்களைச் சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கலாம். இதனால் நிறைய தொல்லுயிர் படிமங்களை விரைவில் சேகரிக்க முடியும். ஒன்றுமில்லை அனைவருக்கும் சற்று சமூக அக்கறை வேண்டும். அவ்வளவுதான்.