Published:Updated:

`நீலகிரியின் பெருமை நீல குறிஞ்சி, இனி உங்கள் வீடுகளிலும் மலரும்..!’- தோட்டக்கலையின் புதுப் பிளான்

குறிஞ்சி மலர்களை, வீடுகளில் வளர்க்க ஆர்வம் காட்டும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு நாற்று, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறிஞ்சி
குறிஞ்சி

கோடை வாசஸ்தலமான நீலகிரியில் ஏராளமான பூங்காக்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. பெரும்பாலும் அரசின் தோட்டக்கலை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் பல ஆயிரக்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வண்ணவண்ண மலர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பராமரிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கல்லட்டி ராமர் மலையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துள்ள குறிஞ்சி மலர்கள்... அருண்.கே
நீலகிரி மாவட்டம் கல்லட்டி ராமர் மலையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துள்ள குறிஞ்சி மலர்கள்... அருண்.கே
Arun.K

இதேபோல் மலர் நாற்றுகளை வாங்கிச் செல்லவும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதால் பூங்காக்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்' வகை குறிஞ்சி மலர் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரியில் 17 வகை குறிஞ்சிகள் பூப்பது கண்டறியப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, `ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்' என்ற வகை குறிஞ்சி முதல், ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்' வரை உள்ளன.

குறிஞ்சி
குறிஞ்சி

இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், ``குன்னுார் சிம்ஸ் பூங்கா நர்சரியில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பூக்கும், `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்' தாவர வகை வீரிய ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீலக் குறிஞ்சிகள் மலர்ந்துள்ளன. வீடுகளில் வளர்க்க விரும்புவோருக்கும் நாற்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிஞ்சி மலர்களை வீடுகளில் வளர்க்க ஆர்வம் காட்டும் உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஒரு நாற்று, 10 ரூபாய்க்கு வாங்கிச் செல்லலாம்" என்கின்றனர்.

குறிஞ்சி
குறிஞ்சி

சூழலியலாளர்கள் இதுகுறித்து கூறுகையில், ``குறிஞ்சி மலர்கள், நீலகிரியின் பெருமைக்கு அடையாளமாக உள்ளது. குறிஞ்சி அதிக பனியை தாங்கும் சக்தி கொண்டவை. இலைகள் அடர்த்தியாக உள்ளதால், வீடுகளைச் சுற்றிலும் வேலி போன்றும் வளர்க்கலாம். தேன் சேகரிக்கும் பூச்சி இனங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இதன் நாற்றுகளை, தோட்டக்கலைத் துறை உற்பத்தி செய்வது சிறந்த நடவடிக்கை'' என்கின்றனர்.