Published:Updated:

நீலக்குறிஞ்சியை விழுங்கும் ஆபத்தான களைச்செடி... ஆபத்தில் நீலகிரியின் பூர்வீகப் பூச்செடி!

குறிஞ்சி
குறிஞ்சி

ஆரஞ்சு ஜேஸ்மின் என வர்ணிக்கப்படும் தென் அமெரிக்கத் தாவரம் அசுர வேகத்தில் நீலகிரிக் காடுகளில் பரவி வருவதால் குறிஞ்சி உள்ளிட்ட மண்ணுக்குரிய தாவரங்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீண்டு கிடக்கும் இந்த மலைத்தொடர் முழுக்க நீல நிறத்திலான பூக்கள் (குறிஞ்சி) ஒருசேர ஒரே நேரத்தில் பூத்து, பசுமை போர்த்திய மலையையும் பள்ளத்தாக்கையும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீல நிறத்தில் மாற்றுவதாலேயே 'நீலகிரி' என்ற பெயரை இந்த மலை பெற்றிருப்பதாகச் சொல் வழக்கொன்று உண்டு.

செஸ்ட்ரம்
செஸ்ட்ரம்

குறிஞ்சி நிலமான நீலகிரியில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் மினியேச்சர் குறிஞ்சி முதல் 12 ஆண்டுகளுக்கும் அதைத் தாண்டியும் பூக்கக்கூடிய அரியவகை குறிஞ்சி வரை பல்வேறு வகையிலான குறிஞ்சிகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

நீலக் குறிஞ்சிகளுக்குப் பெயர்போன நீலகிரிக் காடுகள் கடந்த சில ஆண்டுகளாக அடையாளமான குறிஞ்சிப் புதர்களை இழந்து வருகிறது. அதிகரிக்கும் கட்டுமானம், விளை நில விரிவாக்கம், காடழிப்பு போன்ற பல காரணிகளால் குறிஞ்சி நிலம் குன்றினாலும், தற்போது ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேகமாகப் பரவிவரும் அந்நிய களைத் தாவரமான செஸ்ட்ரம் [cestrum aurantiacum] முக்கிய அச்சுறுத்தலாக மாறிவருவதாகச் சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிஞ்சி
குறிஞ்சி

சூழலியல் ஆர்வலர் ஹரிஹரன் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், "விறகு தேவைக்காகவும் அழகு தாவரமாகவும் நீலகிரிக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட சீகை மற்றும் தைல மரங்கள் பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அதேபோல் பார்த்தீனியம், லன்டனா [உண்ணிச்செடி] போன்ற அந்நிய களைத் தாவரங்களைக் காப்புக்காடுகளில் இருந்து அகற்ற முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கிடையே தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட செஸ்ட்ரம் தாவரம் புல்வெளிகளை ஆக்கிரமித்துள்ளது.

எத்தகைய கால நிலையையும் எதிர்த்து இவை வளர்வதால், குறுகிய காலத்தில் அளவுக்கு அதிகமாகப் பெருகுகின்றன. இந்தப் புதர்களுக்கு அடியில் வேறு எந்தத் தாவரமும் வளர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த மண்ணுக்கே உரித்தான பல தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குறிஞ்சியும் இடம் பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது. குறிஞ்சிச் செடிகள் வளரும் இடங்களில் இந்த செஸ்ட்ரம் வளர்வதால் குறிஞ்சிச் செடிகள் வளர முடியாத சூழல் ஏற்படுகிறது. இதேநிலை நீடித்தால் குறிஞ்சியை நீலகிரி இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்" என எச்சரிக்கிறார்.

வாசமல்லி
வாசமல்லி

செஸ்ட்ரம் தாவரத்தால் தங்களது மேய்ச்சல் நிலத்தை இழந்துவரும் தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாசமல்லி நம்மிடம் பேசுகையில், "எங்களோட பிறப்புல இருந்து இறப்பு வரைக்கும் எல்லா நல்லது கெட்டதுலயும் எங்களோட வளர்ப்பு எருமை இருக்கும். கடவுள் எங்களுக்குக் கொடுத்த வரம் இந்த தோடர் எருமை.

ஆனா, இதுங்க மேஞ்சி திரிஞ்ச புல்வெளியெல்லாம் கொஞ்ச கொஞ்சமா நஞ்சாகிட்டு இருக்கு. குறிஞ்சி பூக்குறத வச்சித்தான் நாங்க வருஷத்த கணக்குப் போடுவோம். குறிஞ்சி பூத்த காடெல்லாம் இப்போ இந்தக் களைச் செடியா வளர்ந்து நிக்கிறத பாத்தா வேதனையா இருக்கு" எனக் கவலையுடன் தெரிவிக்கிறார்.

சூழலியல் செயற்பாட்டளர் வழக்கறிஞர் விஜயன், "இந்தக் குறிஞ்சி நிலம் எக்காரணம் கொண்டும் தனது அடையாளமான குறிஞ்சிப் பூக்களை இழந்துவிடக் கூடாது. வன விலங்குகள் தவிர்க்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற இந்த செஸ்ட்ரம் களைத் தாவரத்தை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வேகமாக பரவும் செஸ்ட்ரம்
வேகமாக பரவும் செஸ்ட்ரம்

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஊட்டி மற்றும் கூடலூருக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்தத் தாவரம் வேகமாகப் பரவி வருகிறது. இவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஷூட்டிங் மட்டம் பகுதிகளில் தோடர் பழங்குடி மக்களின் ஒத்துழைப்புடன் இதை அகற்றி வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு