Published:Updated:

`தெங்குமரஹாடா முதல் பந்திப்பூர் வரை..!’ - `பாறு கழுகு’ பாதுகாப்பில் புது முயற்சி

அழிவின் விளிம்பில் உள்ள பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகள் தங்கி கூடமைக்கும் மரங்கள் கண்டறியப்பட்டு மாயாற்றின் கரைகளில் மரக்கன்றுகள் நாடும் பணிகள் நடைபெற்று வருகின்றன!

Save Vulture
Save Vulture ( Arun.K )

இயற்கையின் துப்புரவாளர்கள் என அழைக்கப்படும் பாறு கழுகுகள் (vulture) மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் பறவை இனங்களில் ஒன்றாக உள்ளது. கொள்ளை நோய்களிலிருந்து ஒட்டுமொத்த காட்டுயிர்களைக் காக்கும் இந்தப் பிணந்தின்னிகள் முழுக்க முழுக்க ரசாயன பயன்பாடுகளால் மட்டுமே அழிக்கப்பட்டன. தென்னிந்தியாவின் கடைசிப் புகலிடமாக முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா ஆகிய இந்த மூன்று வனப்பகுதிகள் மட்டுமே பாறு கழுகுகளுக்கு உள்ளன.

Save Vulture
Save Vulture

சமீபத்திய கணக்கெடுப்பின்படி பாறு கழுகுகளின் நான்கு இனங்களையும் சேர்த்தே மொத்தம் 300 கழுகுகள் மட்டுமே இருப்பதாகத் தெரியவந்தது. இது ஒட்டுமொத்த பறவையியல் ஆய்வாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. தெங்குமரஹாடா முதல் பந்திப்பூர் வரை உள்ள பாறு கழுகுகளைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வனத்துறை மற்றும் பாறு கழுகுகள் பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து தெங்குமரஹாடா முதல் பந்திப்பூர் வரை மாயாற்றின் கரைகளில் 1,500 மரங்களை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டு, மரக்கன்றுகளை நடவுசெய்து வருகின்றனர். பாறு கழுகுகள் தங்குகிற கூடமைக்கிற மரங்களான மருத, தாண்டி காட்டு மாவு ஆகிய மரங்களை (Terminalia arjuna, Terminalia bellerica) நடவு செய்து வருகின்றனர்.

Save Vulture
Save Vulture

இதன் மூலம் வருங்காலங்களில் பாறு கழுகுகளைப் பாதுகாக்க இந்த மரங்கள் ஏதுவாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கழுகு பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் அருளகம் பாரதிதாசன் பேசுகையில், ``வேறு எந்த விலங்குகளும் செய்யாத அற்புதத்தைப் பிணந்தின்னி எனப்படும் இந்தப் பாறு கழுகுகள் செய்கின்றன. ஒரு பாறு கழுகு ஒரு ஆண்டில் வனத்துக்குச் செய்யும் சேவையை நாம் செய்தால் ஏழு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காட்டு விலங்குகளையும் கொள்ளை நோயில் இருந்து பாதுகாக்கும் இந்தக் கழுகுகள் கண்முன்னே அழிந்து வருவது மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது. எனவே, இவற்றை மீட்டெடுக்கும் வகையில் தூய்மலையாளர் மகாத்மா காந்தியின் பெயரால் தெங்குமரஹாடா முதல் பந்திப்பூர் வரையில் மாய் ஆற்றின் கரைகளில் பருந்துகளால் பெரிதும் விரும்பப்படுகிற இந்த வகை மரங்களை நடவு செய்து வருகிறோம். வரும் காலங்களில் இந்த மரங்கள் அவற்றுக்கு உறுதுணையாக இருக்கும்" என்றார்.

Bharathithasan
Bharathithasan

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த பிப்ரவரி மாதம் முதுமலை மற்றும் பந்திப்பூர் வனப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு வனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. பல்லாயிரக்கணக்கான மரங்களும் எரிந்து சேதமடைந்தன. எனவே, இதுபோன்ற மரக்கன்றுகள் நடுவதன் மூலம் ஓரளவுக்கு வனங்களை மீட்பதற்கு ஏதுவாக இருக்கும்" என்றார்.