Published:Updated:

`திரும்பும் பக்கமெல்லாம் புதுப்புது அருவிகள்..!’ - பெருமழையால் புத்துயிர்பெற்ற நீலகிரி

நீலகிரியில் கொட்டித் தீர்த்த மழையால், மண்சரிவும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டாலும், மறுபுறம் புதிய புதிய நீரூற்றுகள், காட்டாறுகள் புத்துயிர் பெற்றுள்ளன.

water falls
water falls ( Arun.K )

மழை 6 மாதம், உறைபனி 3 மாதம், வெயில் 3 மாதம்... இதுதான் நீலமலையின் கணக்கு. ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா பகுதிகளுக்கு தென்மேற்குப் பருவமழையும், குன்னூர், கோத்தகிரி பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவமழையும் தவறாமல் பொழியும். காடழிப்பு, கட்டடப் பெருக்கம், காலநிலை மாற்றம் போன்ற கூட்டு காரணிகளால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை போக்குக் காட்டியே வந்தது.

இதனால் தென்னகத்தின் தண்ணீர்த் தொட்டிக்கு வறட்சி ஏற்பட்டு, ஒரு குடம் குடிநீர் 20 ரூபாய் வரை விற்கும் அவல நிலை ஏற்பட்டது. குடிநீர் ஆதாரமான ரேலியா அணை அதல பாதாளத்துக்குச் சென்று, எப்போதும் தரைதட்டியே காணப்பட்டது.

இதேபோல் எமரால்டு, போர்த்திமந்து ஆகிய மின்உற்பத்தி ஆதார அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, கிட்டத்தட்ட மின் உற்பத்தி பாதிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. எங்கு பார்த்தாலும் குடிநீர்ப் பஞ்சம், வறட்சி என்று இருந்த நிலையில் தான் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கொட்டித் தீர்த்தது பெருமழை. கடந்த நூறு ஆண்டுகளில் பெய்திராத இந்த பெருமழையில் அணைகள், ஏரிகள், குளங்கள், விளைநிலங்கள் என எல்லாம் வெள்ளக்காடாக மாறின.

water falls
water falls

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித் தவித்த நீர்நிலைகள் அனைத்தையும் பெருமழை மீட்டுக் கொடுத்துச் சென்றுவிட்டது. அதன்பின்னர், மூன்று மாதங்களாக அவ்வப்போது பெய்துவந்த மழையும் தற்போது தீவிரம் காட்டிய வடகிழக்குப் பருவமழையும் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என அனைத்தையும் உயிர்ப்பித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில், 10 -க்கும் அதிகமான முறை பெரும்பாலான அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போதும் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதுமட்டுமல்லாமல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் திரும்பும் பக்கமெல்லாம் புதிய புதிய அருவிகள் மலைகளிலும் காடுகளிலும் கொட்டுகின்றன. பைக்காரா, கேத்ரின், காட்டேரி, மாயார் போன்ற பெரிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றன. மலை ரயில் பாதைகளிலும் சாலையோரச் சரிவுகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் புதிய புதிய ஓடைகள் உருவாகி, நீர் நிறைந்து காணப்படுகின்றன.

புதிய அருவிகளைப் பார்க்கும் உள்ளூர் மக்கள், "கடந்த பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஓடையாகவும் அருவியாகவும் இருந்த இடங்கள் காணாமலே போய்விட்டன. தற்போது பெய்துள்ள இந்தப் பெருமழையில், அவையெல்லாம் புத்துயிர் பெற்று ஆர்ப்பரித்துக் கொட்டுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது" என்கின்றனர்.