Published:Updated:

`கிழக்குத் தொடர்ச்சி மலையில் முதல்முறை!’ - `நீலகிரி டிட்’ பட்டாம்பூச்சியால் ஆர்வலர்கள் உற்சாகம்!

பாறுக்கழுகு
பாறுக்கழுகு

மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்பட்ட அரிய வகையான `நீலகிரி டிட்’ பட்டாம்பூச்சி, முதல்முறையாக கிழக்கு தொடர்ச்சி மலையில் சிக்கியிருக்கிறது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள, சத்தியமங்கலம் வனப்பகுதியானது 2008-ல் வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, 2011-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1,408.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இது, தமிழகத்தின் மிகப்பெரிய வனச் சரணாலயமாகும். தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக 2013-ல் ‘சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்’ அறிவிக்கப்பட்டது.

இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய் போன்ற வன விலங்குகளும், எண்ணற்ற பறவையினங்களும் இருக்கின்றன. பல்வேறு வகையான உயிரினங்கள் வசிக்கும், ஓர் பல்லுயிர்க் காடாக இந்த சத்தியமங்கலம் வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியானது 25 சதவிகிதம் மேற்குத்தொடர்ச்சி மலையிலும் 75 சதவிகிதம் கிழக்குத் தொடர்ச்சி மலையிலும் இருக்கிறது.

கணக்கெடுக்கும் பணியில் இயற்கை ஆர்வலர்கள்
கணக்கெடுக்கும் பணியில் இயற்கை ஆர்வலர்கள்

இந்த வனப்பகுதியிலுள்ள சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டங்களில் 10 வனச்சரகங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் டிசம்பர் 14, 15 ஆகிய இரு நாள்களாகப் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணியானது நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் ஈரோடு மாவட்ட வனத்துறையினருடன், இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிகள் அமைப்பு (TNBS), கோயம்புத்தூர் இயற்கை சமூகம் (CNS), இந்தியா மற்றும் கழுகு பாதுகாப்பு மன்றம் (VCF) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உயிரியலாளர் சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோருடன் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான தன்னார்வலர்களும் பங்கேற்றனர். மொத்தம் 91 இயற்கை ஆர்வலர்கள் மற்றும் 150 வன களப்பணியாளர்கள் 20 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் இறங்கினர்.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்த 2 நாள் கணக்கெடுப்பில் 201 பறவையினங்களும் 157 வண்ணத்துப்பூச்சி இனங்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பிற இடங்களில் அரிதாகக் காணப்படும் `சிங்களீஸ் ஃபைவ் ரிங்க் பட்டாம்பூச்சி’ சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் முழுவதும் உள்ளது தெரியவந்திருக்கிறது.

சிங்களீஸ் ஃபைவ் ரிங்க் பட்டாம்பூச்சி
சிங்களீஸ் ஃபைவ் ரிங்க் பட்டாம்பூச்சி

மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்பட்ட அரிய வகையான நீலகிரி டிட் (ஹைபோலிகேனா நீலகிரிகா) பட்டாம்பூச்சி, முதல்முறையாக கிழக்குத் தொடர்ச்சி மலையில் சிக்கியிருக்கிறது. அதேபோல, `காமன் ஓனிக்ஸ்’ வகை பட்டாம்பூச்சியும் முதல் முறையாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் கண்டறியப்பட்டிருக்கிறது.

அதேபோல 28 நீர்வாழ் பறவைகள், 20 கழுகு இனங்கள், 10 ஆந்தைகள் மற்றும் பிற பறவையினங்களும் ஆரோக்கியமான எண்ணிக்கையைக் கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அழியும் தருவாயில் இருக்கும் வெண்முதுகுப் பாறுக்கழுகு, செந்தலைப் பாறுக்கழுகு, இந்திய பாறுக்கழுகு ஆகியவையும் கணிசமான எண்ணிக்கையில் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.

நீலகிரி டிட் பட்டாம்பூச்சி
நீலகிரி டிட் பட்டாம்பூச்சி

ஏற்கெனவே இருந்த தரவுகளோடு, தற்போதைய கணக்கெடுப்பையும் சேர்த்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் மொத்தம் 281 பறவையினங்களும் 184 பட்டாம்பூச்சி இனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கணக்கெடுப்பில் பங்கேற்ற உயிரியலாளர்கள் கூறுகையில், `சத்தியமங்கலம் புலி காப்பகமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையிலான பாலமாக இருப்பதால், அது பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டுள்ளது. மழைப்பொழிவு மற்றும் மேகமூட்டங்களுக்கு எனக் கடுமையான சூழல்களுக்கு இடையே கணக்கெடுப்பை நடத்தினோம்.

கணக்கெடுப்பில் பங்கேற்ற இயற்கை ஆர்வலர்கள்
கணக்கெடுப்பில் பங்கேற்ற இயற்கை ஆர்வலர்கள்

கணக்கெடுப்பில், ஆச்சர்யப்படும் வகையில் பல்வேறு பட்டாம்பூச்சிகள் முதல்முறையாக இந்த மலைப்பகுதியில் கண்டறியப்பட்டிருக்கின்றன. காட்டிலுள்ள பறவைகள் மற்றும் பூச்சிகளின் ஆரோக்கியமான எண்ணிக்கையில் இருப்பது, இந்த வனப்பகுதி எவ்வளவு செழிப்பாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு