Published:Updated:

`இனி இதன் வாழ்விடம் பாதுகாக்கப்பட்ட பகுதி!’ - அழிந்துவரும் கான மயில்களை மீட்க நடவடிக்கை

இந்திய வனவிலங்கு வாரிய அறிவிப்பின்படி இன்னும் 150 கான மயில்கள் மட்டும்தான் இந்தியாவில் வாழ்கின்றன. அதில் 90 சதவிகிதம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் வாழ்கின்றன.

கான மயில்
கான மயில் ( Mohib Uddin )

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அழிவின் விளிம்பிலுள்ள கான மயில் என்ற பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. மேலும், பறவைகள் வாழும் இடங்களில் உயர் மின்னழுத்தக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதால், அதில் சிக்கிப் பறவைகள் உயிரிழக்கின்றன. இதுகுறித்து மின்சார வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அமைச்சகத்தின்கீழ் நடந்த கூட்டத்தில், மின்னழுத்தக் கம்பிகள் இருப்பதைப் பறவைகள் தெரிந்துகொள்ளும் விதத்தில் பளபளவென பளிச்சிடும் பொருள்களை அமைக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தியது.

ஓர் ஆண்டுக்கு, உயர் மின்னழுத்தக் கம்பிகளில் சிக்கி 15 சதவிகித கான மயில்கள் உயிரிழக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 75 சதவிகிதம் கான மயில்கள் இதனால் உயிரிழந்துள்ளன.

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனத்தின் செயலாளரும் இந்தக் கூட்டம் நடக்கக் காரணமாக இருந்தவருமான சித்தாந்தா தாஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு அளித்த பேட்டியில், "மின்சார வாரியங்கள், கான மயில் வாழ்விடங்களில் எவ்விதமான உயர் மின்னழுத்தக் கம்பிகளைப் பொருத்துவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உயர்மின் அழுத்தக் கம்பிகளைப் பூமிக்கடியில் புதைக்கும் திட்டத்தைப் பற்றியும் பேசி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்திய வனவிலங்கு வாரிய அறிவிப்பின்படி, இன்னும் 150 கான மயில்கள் மட்டும்தான் இந்தியாவில் வாழ்கின்றன. அதில் 90 சதவிகிதம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் வாழ்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் இந்தப் பறவையைப் பற்றியும் அவற்றின் வாழ்விடங்கள் பற்றியும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தியபின் இந்த அறிக்கையை ஆராய்ச்சியாளர்கள் சமர்ப்பித்தனர்.

கான மயில்
கான மயில்
Mohib Uddin

அந்த ஆய்வில், "ஒரு ஆண்டுக்கு, உயர் மின்னழுத்தக் கம்பிகளில் சிக்கி 15 சதவிகித கான மயில்கள் உயிரிழந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் 75 சதவிகிதம் இக்காரணத்தாலே உயிரிழந்துள்ளன. இளம் கான மயில்கள் அதிகமாக இந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் சிக்கி இறக்கின்றன. மந்தமான பார்வைகொண்ட இவை, மின்னழுத்தக் கம்பிகளைக் கண்டறிய முடியாமல், அதில் சிக்கி உயிரிழக்கின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் வழக்குகள் குறித்து, கேள்வி எழுப்பும் அமைப்பின் பனு பன்சால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அளித்த புகாரின் பிறகு அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியது தேசிய பசுமை தீர்ப்பாயம். இந்தப் புகாருக்குப் பின், கான மயில் குறித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் விளைவாகவே அவற்றின் வாழ்விடங்களைக் காப்பகங்களாக அறிவிக்க வேண்டுமென்ற இந்த உத்தரவும் தற்போது வெளியாகியுள்ளது.