Published:Updated:

`குப்பைகளைத் தரம் பிரித்துத் தராவிட்டால்...!' - நீலகிரி ஆட்சியரின் அதிரடி உத்தரவு

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

வரும் 15-ம் தேதி முதல் மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாகப் பிரித்து வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Ooty
Ooty

மலை மாவட்டமான நீலகிரியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பிறப்பித்து வருகிறார். கிட்டத்தட்ட அனைத்துவகை பிளாஸ்டிக்கும் தடை செய்யப்பட்டுவிட்டன. மேலும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பாட்டில் குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள திண்பண்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் தானியங்கி தண்ணீர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது, பிளாஸ்டிக் பயன்பாட்டில் அபராதமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வீடுகள், வணிக நிறுவனங்கள் பிரித்து வழங்கவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Kandhal
Kandhal

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “ நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வன விலங்குகளின் உயிரினைக் கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கினை ஒழிக்கும் பொருட்டும், கிராமப் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொருட்டும் வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளைச் சேகரித்துக் குப்பைக் கிடங்கில் சேர்க்க தூய்மைக் காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அனைவரும் தங்களின் இருப்பிடத்தில் உள்ள குப்பைகளைச் சேகரிக்க வரும் உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து வழங்க வேண்டும். இந்த நடைமுறை செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.

இதை மாவட்டம் முழுவதும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் கட்டாயமாக அவர்களின் வணிக நிறுவனங்களின் வெளியில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைக்கென தனித்தனி குப்பைத்தொட்டி வைத்து, அதில் குப்பைகளை பிரித்துக் கொட்டி உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கும், மக்கா குப்பைகளைப் பிரித்து வழங்காமல் ஒரே இனமாக மூன்று முறைக்கு மேல் வழங்கப்பட்டால் அவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு ஆகியவை எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்படும். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்து நீலகிரி மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும்'' என்றார் உறுதியுடன்.

Innocent Divya
Innocent Divya

ஆட்சியரின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன், ``நீலகிரியில் பிளாஸ்டிக் தடை வரவேற்கத்தக்கது. ஆனால் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் தங்களின் குப்பைகளை முறையாக வழங்குவதில்லை. மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்கப் பலமுறை உத்தரவிட்டும் எந்தப் பயனும் இல்லை. வரும் 15-ம் தேதி முதல் குப்பைகளை பிரித்து தராத நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பெயரளவில் இல்லாமல் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.