Published:Updated:

`தேனாடு முதல் கொடநாடு வரை பற்றியெரிந்த காப்புக்காடு! - போராடிய நீலகிரி மாவட்ட வனத்துறை

forest fire
forest fire

கொடநாடு பள்ளத்தாக்கில் புற்கள் நன்கு காய்ந்து காணப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, மொத்தக் காடும் பற்றி எரிந்தது. தேனாடுக்கு உட்பட்ட பகுதி முதல் கொடநாடு பகுதிவரை தீ பரவிவருகிறது.

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகில் உள்ள வனப்பகுதிகளில் இரண்டாவது நாளாகப் பற்றி எரிந்த காட்டுத் தீயில், பல ஏக்கர் பரப்பளவிலான காப்புக் காடுகள் தீக்கிரையாகின.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் காட்டுத்தீ எண்ணிக்கை குறைவு என்றாலும், ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு, வனப்பகுதிகள் தீயில் கருகி வருகின்றன.

forest fire
forest fire

அவ்வப்போது பெய்துவரும் கோடை மழையாலும், ஊரடங்கால் வனங்கள் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், காட்டுத்தீ ஏற்படுவது கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகக் குறைந்திருந்தது.

இது சற்று ஆறுதலாக இருந்த நிலையில், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள காப்புக் காட்டில், கடந்த இரண்டு நாள்களாக இரவு பகலாக கொழுந்துவிட்டு எரியும் தீயில் பல ஏக்கர் பரப்பளவிலான சோலைமரக்காடுகள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகின.

காட்டுத்தீ குறித்து நம்மிடம் பேசிய கீழ் கோத்தகிரியைச் சேர்ந்த தினேஷ், ``மழை குறைவுப் பகுதியான கொடநாடு பள்ளத்தாக்கில் புற்கள் நன்கு காய்ந்து காணப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, மொத்தக் காடும் பற்றி எரிந்தது. தேனாடுக்கு உட்பட்ட பகுதி முதல் கொடநாடு பகுதிவரை தீ பரவிவருகிறது. இதில், சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவிலான வனம் எரிந்திருக்கக்கூடும். இரவில் கொழுந்துவிட்டு எரியும் இந்த காட்டுத்தீயால், பல கிலோமீட்டர் தொலைவு வரை வெளிச்சமாகக் காணப்படுகிறது. சாலை வசதிகள் இல்லாததால், வனத்துறையினர் அருகில் செல்லவே முடியாமல் திணறிவருகின்றனர். வன விலங்குகள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

forest fire
forest fire

காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர‌ பாடுபட்ட வனத்துறை ஊழியர் ஒருவர் பேசுகையில், "நள்ளிரவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. மறுநாள் காலை உள்ளூரைச் சேர்ந்த இருவருடன் வனத்துறையினர் 15 பேர், பல கிலோமீட்டர்கள் நடந்தே சென்றோம். இரண்டாள் உயரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சரிவுப் பகுதி என்பதால், நிற்கக்கூட முடியவில்லை. இலை தழைகளை வெட்டி ஒரு நாள் முழுக்க போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தோம். தீ ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு