ஒரே நாளில் 3... ஒரு வாரத்தில் 5... நீலகிரியில் கொத்து கொத்தாக மடியும் சிறுத்தைகள்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தைகள் இறப்பு தொடர்கதையாக உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 5 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சோகத்தொரை அருகில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் கடந்த 15-ம் தேதி ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஊர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்த வனத்துறையினர், இறந்த சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பந்தலூர் அருகில் உள்ள மேங்கோரேஞ் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோல் குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட அதிகரட்டி பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் அந்த சிறுத்தையின் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுருக்கு வலையில் சிக்கியே இந்தப் பெண் சிறுத்தை உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அடுத்தடுத்து நிகழ்ந்த சோகத்துக்கு இடையில், பந்தலூர் பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்ததைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். நீலகிரியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து சிறுத்தைகள் பரிதாபமாக மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
இது குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆர்வலர்கள், ``வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் மற்றும் கோழி போன்றவற்றை வேட்டையாடுவது எளிது என்பதால், சிறுத்தைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள வனங்களை வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இவை அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதால் சிறுத்தைகளிடமிருந்து இவற்றைப் பாதுகாக்க இறைச்சிகளில் விஷம் வைப்பது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன.

இதுதவிர காட்டுப்பன்றி, முயல், மான் போன்றவற்றை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக வைக்கப்படும் சுருக்குக் கம்பிகளில் சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் சிக்கி உயிரிழப்பதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எனவே, இவற்றைக் கண்காணிக்க தனிப்படை அமைப்பது அவசியம்" என்கின்றனர்.
சிறுத்தைகளின் தொடர் இறப்பு குறித்து பேசிய நீலகிரி வனத்துறையினர், ``இறந்த ஒவ்வொரு சிறுத்தையும் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. 5 சிறுத்தைகளின் உடலில் இருந்தும் ஆய்வுக்காக மாதிரிகளை சேகரித்துள்ளோம். கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.