Published:Updated:

`என்ன பண்றதுன்னு எங்களுக்கே தெரியல!' - 2 ஆண்டுகளாகத் தவிக்கும் காட்டுயானை; திணறும் வனத்துறை!

காயத்துடன் அவதிப்பட்டுவரும் காட்டுயானை
காயத்துடன் அவதிப்பட்டுவரும் காட்டுயானை

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காயத்துடன் அவதிப்பட்டுவரும் ஆண் காட்டுயானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண் காட்டுயானை ஒன்று பின்னங்காலில் காயத்துடன் உலவி வருவதாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்குத் தெரிவித்தனர். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட கூடலூர் வனத்துறையினர், காயத்துடன் தென்பட்ட அந்த யானையைக் கண்டறிந்து பழங்களில் மாத்திரைகளை வைத்துக் கொடுத்தனர்.

காயத்துடன் அவதிப்பட்டுவரும் காட்டுயானை
காயத்துடன் அவதிப்பட்டுவரும் காட்டுயானை

சிறிது காலம் யார் கண்ணுக்கும் தென்படாத அந்த யானை, அதே காயத்துடன் இருந்தது. வனத்துறையினர் அவ்வப்போது பழங்களில் மருந்து மாத்திரைகளை யானை நடமாடும் பகுதிகளில் வைத்துவிட்டு செல்வதை வழக்காமாகக் கொண்டிருந்தனர்.

இரண்டு ஆண்டுகளில் அந்தக் காயம் யானையின் பின் பகுதி முழுக்க புரையோடி புழு வைத்துள்ளது. கடுமையான இந்தக் காயத்துடன் உயிருக்குப் போராடி அவதிப்பட்டுவரும் இந்த யானைக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த யானைக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிப்பது எனத் தெரியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

காயத்துடன் அவதிப்பட்டுவரும் காட்டுயானை
காயத்துடன் அவதிப்பட்டுவரும் காட்டுயானை

யானையின் காயம் குறித்து வெளிப்படையாக நம்மிடம் பேசிய வனத்துறை பணியாளர் ஒருவர், ``ரொம்ப அழகான தந்தத்தோட வலிமையா இருந்த யானை இது. இதுக்கு 30 வயசு இருக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, பின் பகுதில காயம் இருந்தது. மேல் கூடலூர், கோக்கால், சில்வர் கிளவுட் ஏரியால இருக்கும். காட்டுயானைக்கூட சண்டை போட்டதுல இந்தக் காயம் ஆகியிருக்கலாம். சரியாகிடும்னு நினைச்சு மாத்திரை மட்டும் கொடுத்தோம். ஆனா, இந்த ரெண்டு வருஷத்துல ரொம்ப பெருசாச்சு. பின்னாடி, புழு வச்சிருச்சு. பழத்துல மாத்திரை கொடுத்தாலும் சரி ஆகாது. மருந்து எதும் போட்டாலும் மரத்துல தேச்சிக்குது. வலி தாங்க முடியாம தன்னிலை போய் நிக்குது.

இதைப் புடிச்சு சிகிச்சை குடுக்குறது ஒண்ணுதான் ஒரே வழி. ஆனா, அதுலயும் சிக்கல் இருக்கு. சிகிச்சைக்காகப் பிடிக்க மயக்க ஊசி போட்டா, யானையால தாங்க முடியாம இறந்துரும். அது எங்களுக்குத்தான் சிக்கல். வேற வழி இல்லாம தர்பூசணி, பலாப்பழத்துல மாத்திரை வச்சி கொடுக்குறோம். ஆனா, எந்த பலனும் இல்லை. என்ன பண்றதுனு எங்களுக்கே தெரியல" என வேதனையுடன் தெரிவித்தார்.

உணவில் மருந்து வைக்கும் அதிகாரிகள்
உணவில் மருந்து வைக்கும் அதிகாரிகள்

இந்த யானை குறித்து தெரிவிக்கும் வனவிலங்கு செயற்பாட்டாளர்கள், ``ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அளித்திருந்தால் இவ்வளவு மோசமாகியிருக்காது. இதை இப்போதாவது காப்பாற்ற வேறு வழி இருக்கிறதா என்பதை வனத்துறை முன்னெடுக்க வேண்டும். இதற்கு காயம் ஏற்பட்டதன் காரணத்தையும் கண்டறிய வேண்டும்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு