Published:Updated:

`நீலகிரியில் 4 லட்சம் மரக்கன்றுகள் நட உறுதுணையாக இருந்தவர்!' - விவேக்குக்கு மக்கள் புகழஞ்சலி

மரங்களை நடவு செய்த நடிகர் விவேக்
மரங்களை நடவு செய்த நடிகர் விவேக்

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய நடிகர் விவேக் உறுதுணையாக இருந்தார் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தன்னுடைய முகநூல் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் இந்த திடீர் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாத்துறையையும் தாண்டி சுற்றுச்சூழல், சமூக அக்கறை, மக்கள் சேவை என மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து செயலாற்றி வந்த இவர் குறித்து பல்வேறு தரப்பு மக்களும் நடிகர் விவேக்குடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மரங்களை நடவு செய்த நடிகர் விவேக்
மரங்களை நடவு செய்த நடிகர் விவேக்

சூழலியல், சுற்றுலா, ஷூட்டிங் ஸ்பாட் நிறைந்த நீலகிரிக்கு அடிக்கடி வருகை தந்த விவேக் ஒரு கட்டத்தில் இந்த மலையையும் மரங்களையும் நேசிக்கத் தொடங்கி, இயற்கையை மீட்டெடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உதவியுடன் லட்சக்கணக்கான மரங்களை நடவு செய்து பசுமை புரட்சியையே ஏற்படுத்தியுள்ளார். இவரது இந்தப் பசுமைப் புரட்சி குறித்து நீலகிரியைச் சேர்ந்த பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``அப்துல் கலாம் ஐயாவின் தீவிர பற்றாளரான விவேக் சூழலியல் மற்றும் நமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிந்திக்க வைத்துள்ளார்.

 நீலகிரி ஆட்சியரின் முகநூல் பதிவு
நீலகிரி ஆட்சியரின் முகநூல் பதிவு

பசுமையைக் காக்கும் வகையில் விழிப்புணர்வைப் பரப்புவதற்காக தனது பிரபல அந்தஸ்தைக் கொடுக்க எப்போதும் தயாராக இருக்கும் ஒரு இணக்கமான ஆளுமை. இவரது ஆதரவுடன் நீலகிரியில் 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிந்தது. நீலகிரி மக்கள் விவேக்கை அன்பாக நினைவில் கொள்வார்கள்" எனத் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு