Published:Updated:

`பறவைகள் இல்லை; இருந்தாலும் சுற்றுலாவாசிகளை அனுமதிக்கிறோம்'- வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்த சோதனை

ஏரியில் தண்ணீர் இல்லாததால் அந்தப் பறவைகள் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்கின்றன. மழை பெய்து நீர் நிறைந்தால் மட்டுமே வேடந்தாங்கலுக்கு அந்தப் பறவைகள் திரும்பும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

தமிழகத்தில் அதிக ஏரிகளைக் கொண்ட மாவட்டம் காஞ்சிபுரம். இதனாலேயே இந்த மாவட்டத்துக்கு ஏரிகள் மாவட்டம் என்ற சிறப்புப் பெயர் உண்டு. மாவட்டத்தில் எத்தனை ஏரிகள் இருந்தாலும் பறவைகளின் சொர்க்கம் வேடந்தாங்கல் ஏரிதான். வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர்கடம்பு மரங்கள்தான் பறவைகள் தங்குவதற்கேற்ப சூழலை அமைத்துக்கொடுக்கின்றன. மரங்கள் குட்டையாக இருக்கும். எளிதில் பறவைகள் கூடுகட்டுவதற்கேற்ப படர்ந்த நிலையில் இருக்கும். காற்று வீசினால் கிளைகள் வளைந்து கொடுக்கும். உடையாது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்துவரும் பறவைகள், இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் கிளம்பிவிடும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்.

செப்டம்பர் மாதத்தில் நத்தை கொத்தி நாரைதான் முதலில் வரத்தொடங்கும். அதைத்தொடர்ந்து குருட்டு கொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, பெலிகன் உள்ளிட்ட பறவைகள் வரும். அதற்குப்பின் புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், ஊசிவால் வாத்து உள்ளிட்ட வாத்து வகைகள் வரத்தொடங்கும். கடைசியாக டிசம்பர் மாதத்தில் வர்ண நாரைகள் வரத்தொடங்கும். கடந்த வருடம் பருவமழை பொய்த்துப் போனதால் வேடந்தாங்கலுக்கு வந்த பறவைகள் பெரும்பாலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளுக்குச் சென்றுவிட்டன. ஒரு சில பறவைகள் மட்டுமே வேடந்தாங்கல் சரணாலயத்தில் தங்கின.

இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை ஓரளவு பெய்தது என்றாலும் ஏரியில் பறவைகள் தங்கும் அளவுக்கு மழை இல்லை. தற்போது வடகிழக்குப் மழை தொடங்கியுள்ளது. ஆனால், சுமார் ஒரு அடி அளவுக்குதான் ஏரியில் தண்ணீர் இருக்கிறது. இது பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்வதற்குப் போதாது. நத்தை கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, குருட்டு கொக்கு உள்ளிட்ட பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்திருக்கின்றன. ஏரியில் தண்ணீர் இல்லாததால் அந்தப் பறவைகள் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்கின்றன. மழை பெய்து நீர் நிறைந்தால் மட்டுமே வேடந்தாங்கலுக்கு அந்தப் பறவைகள் திரும்பும். இல்லையென்றால் எங்கு தங்குவதற்கான சூழல் இருக்கிறதோ அங்கேயே தங்கிவிட்டு சொந்த நாட்டுக்குக் கிளம்பிவிடும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வரச்சரக அலுவலர் சுப்பையா, ``வேடந்தாங்கலுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் வழக்கம்போல வரத் தொடங்கிவிட்டன. ஆனால், அவை தங்குவதற்குத் தேவையான அளவு ஏரியில் தண்ணீர் இல்லை. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று தங்குவதற்கான சூழல் இருக்கிறதா என ஆய்வு செய்கின்றன. அருகில் உள்ள மதுராந்தகம் ஏரியில் கூட நீர் இல்லை. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் ஏரிக்கு ஓரளவுக்குத் தண்ணீர் வந்து, பறவைகள் வந்தால் திறப்பு விழா நடத்துவோம். அதன்பின்னரே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த வருடம் மழை பொய்த்துப் போனது. பறவைகள் இல்லை. ஆனாலும் பார்வையாளர்கள், `வெகுதொலைவில் இருந்து வந்திருக்கிறோம். எங்களை அனுமதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டனர். ஏமாற்றத்துடன் அனுப்பக் கூடாது என்ற அடிப்படையில் கட்டணம் செலுத்தியபிறகு அவர்களை அனுமதித்தோம். பறவைகள் இல்லாவிட்டாலும் சரணாலயத்தையாவது சுற்றிப்பார்க்க வேண்டும் என பார்வையாளர்கள் நினைப்பதால் இனி அனைத்து நாள்களிலும் வேடந்தாங்கல் சரணாலயம் திறந்தே இருக்கும்” என்கிறார்.