Published:Updated:

`புதைக்க, எரிக்க வேண்டாம்...!' -புதிய முறையில் பூமிக்கு உரமாக மாறும் மனித உடல்

உரமாக மாறும் உடல்
உரமாக மாறும் உடல் ( Freepik )

'இறந்த பிறகு, இத்தனை ஆண்டுகள் என்னைப் பாதுகாத்து எனக்கு ஆதரவளித்த பூமிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று நினைத்தேன்.

நாம் வாழும் பூமிப் பந்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்ற குரல், ஐ.நா தொடங்கி உலக நாடுகள்வரை ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அதற்காகப் பல்வேறு முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.

Dead body
Dead body
Pixabay

உயிரோடு வாழும்போதுதான் மனிதன் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறான் என்றால், இறந்த பிறகும் அது தொடர்கிறது. மனித உடலைத் தகனம் செய்யும்போது வெளியாகும் கார்பன், சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துகிறது. உடல்களைப் புதைப்பதால் இடமின்மை, உடலைக் கொண்டுசெல்லும் போக்குவரத்தால் ஏற்படும் சூழல் மாசுபாடு எனப் பல்வேறு வகையில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள ஒரு பண்ணையில், மனித உடல்களை உரமாக்கும் புதிய முயற்சி செயல்படுத்தப்பட்டது. முதலில், மாதிரித் திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது. அதில், இறந்த உடல்களில் இருக்கும் திசுக்கள் அனைத்தும் வெறும் 30 நாள்களில் உடைந்து உரமாக மாறின. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதே முறையில் உடல்களை உரமாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

Fertilizer
Fertilizer
Ferrpik

இது தொடர்பாகப் பேசியுள்ள இந்தத் திட்டத்தின் நிறுவனர் கத்ரீனா ஸ்பேட், "இறந்த உடலை ஒரு பெரிய கலனில் வைத்து அதனுடன் மரத்தூள், அல்ஃப் அல்ஃபா என்ற ஒருவகையான புல், வைக்கோல் ஆகிய பொருள்களையும் இட்டு வைக்கப்படும். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணுயிரிகள் உருவாகி, உடல் சிதைவுறத் தொடங்கும். 30 நாள்களில், அந்த உடல் செடி அல்லது மரத்துக்கு இடுவதற்கான உரமாக மாறிவிடும்.

ஓர் உடலைத் தகனம் செய்வதன்மூலம் 1.4 டன் கார்பன் வெளியேறும். இந்த முறையைப் பயன்படுத்துவதன்மூலம், அதை முற்றிலும் தடுக்க முடியும். இது, எளிய முறையைப் போன்று தோன்றினாலும் நான்கு ஆண்டுகள் அறிவியல் ஆராய்ச்சிக்குப் பிறகே இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

Planet earth
Planet earth
Pixabay
பால், சர்க்கரை, பழச்சாறு; உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டியவை எவை?

13 ஆண்டுகளுக்கு முன்பாகவே, இதுபோன்ற எண்ணம் எனக்குள் உதித்தது. எனினும், அது செயல்பாட்டுக்கு வர இத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது. நான் இறந்த பிறகு, இத்தனை ஆண்டுகள் என்னைப் பாதுகாத்து, எனக்கு ஆதரவளித்த பூமிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று நினைத்தேன். இப்போது அதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்று பூரிக்கிறார் ஸ்பேட்.

இதுகுறித்த தகவல்கள் வெளியான சில நாள்களுக்குள்ளாகவே 15,000 பேர் இந்த முறையில் தங்கள் உடலைத் தகனம் செய்ய விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம்!

அடுத்த கட்டுரைக்கு