Published:Updated:

`பாடத்திட்டங்கள் இந்த விஷயங்களை உங்களுக்குச் சொல்லியிருக்காதுதான்... ஆனால்..?' - எச்சரிக்கும் கடல்

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள் ( Pixabay )

நீங்கள், நான்கு முறை சுவாசித்தால் அதில் மூன்று மூச்சுக்கு தேவையான ஆக்ஸிஜனை நான்தான் தயாரித்து தருகின்றேன்.

`யாரும் எனக்காகப் பேசல, அதனால இப்போ நானே பேசுறேன்... கவனமா கேளுங்க!' - எச்சரிக்கும் `கடல்'

முதல் பகுதி 👇👇

`யாரும் எனக்காகப் பேசல, அதனால இப்போ நானே பேசுறேன்... கவனமா கேளுங்க!' - எச்சரிக்கும் `கடல்'

ங்களில் எத்தனை பேருக்கு அலையாத்திக் காடுகளைத் தெரியும்? அது வெட்டி விற்க முடியாத காடு என்பதால் நீங்கள் தெரிந்து வைத்திருக்கு வாய்ப்பில்லை. அதை `மாங்குரோவ் காடுகள்' என்றும் கூறுவார்கள். இது எனக்கும் பூமிக்குமான உறவில் உதித்தவை. நதிகள் என்னோடு கலக்கும்போது கருவாம் காடுகள், நானும் நிலமும் நல்லுறவு கொள்ள இயற்கை கொடுத்த கொடைகள். சேறு கலந்த, நதிநீரும் கடல் நீரும் கலக்கும் சதுப்பு நிலம் என்றால் அந்தக் காடுகளுக்கு அலாதிப் பிரியம். உங்களின் தமிழ்நாட்டில், கொள்ளிட வாயில், காவிரி, கடலில் கலக்கும் பிச்சாவரத்தில் இந்தக் காடுகள் இருக்கின்றன.

இந்த மாங்குரோவ் காடுகள் மட்டும் இல்லையென்றால் 2004 சுனாமியில் தமிழ்நாடு இன்னுமும் பெரிய இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை யாரேனும் சிந்தித்துப் பார்க்கவோ, விவாதம் நடத்தவோ ஏன் முன்வருவதில்லை?

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்
Pixabay

இன்னும், என்னிடம் புல்வெளிகளும் உள்ளன என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நதிகள் என்னில் கலக்கும் `லகூன்' எனப்படும் பகுதிகளில், எனக்கடியில் வளரும் ஒருவகை தாவரங்களைத்தான் (பிளான்க்ட்டூன்) கடல் புல்வெளி என்று அழைக்கின்றனர். இந்தத் தாவரங்கள்தான், நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் சுமார் 70 சதவிகிதத்தைத் தயாரித்துத் தருகின்றன. மீதம் உள்ளதில் 28 சதவிகிதத்தை மழைக்காடுகளும், 2 சதவிகிதத்தை பிற வளங்களும் தயாரித்து தருகின்றன.

உங்கள் பாடத்திட்டங்களில், மரங்கள் மட்டும்தான் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. எனவே, மரங்களை வெட்டக் கூடாது எனச் சொல்லி இருப்பார்கள். 28% ஆக்ஸிஜன் வெளியிடும் மரங்களைப் பாதுகாக்க நினைக்கும் நீங்கள், சுமார் 70% ஆக்ஸிஜன் வெளியிடும் என் உயிரினங்கள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை.

உங்களைக்கு ஒன்று தெரியுமா?

நீங்கள், நான்கு முறை சுவாசித்தால் அதில் மூன்று மூச்சுக்கு தேவையான ஆக்ஸிஜனை நான்தான் தயாரித்து தருகின்றேன். சிந்தியுங்கள், ஒவ்வொரு சின்ன உயிரினமும் உயிர்வாழ எவ்வளவு காற்று தேவையானது. எனது இந்தத் தாவரங்கள் வளர தேவையான கனிமங்களை யார் தருகிறார்கள் என்று தெரியுமா? நன்னீரைச் சுமந்து வரும் ஆறுகள்தான். நதிநீரை என்னில் கலக்க விடாமல் தடுப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று இப்போது தெரிகிறதா?

மழைநீர் கடலில் கலப்பது என்பது வீண் அல்ல... ஏன் தெரியுமா?

இந்தத் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பாதிப்படையும். அதனால் என்னில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அங்கு வாழும் மீன்கள், கடல்வாழ் பாலூட்டிகள், விலங்குகள், அனைத்தும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துபோகும். இவை மட்டுமல்ல, இந்த பிளான்க்ட்டூன் என்கின்ற தாவரங்கள் சேதமடைந்தால், மீன்களின் உற்பத்தி குறைந்து, அந்தத் தொழில் செய்பவர்கள் மட்டுமன்றி, அதைச் சார்ந்த ஏராளமான தொழில்கள் பாதிப்படைவதோடு, நல்ல சத்துணவு பற்றாக்குறையும் ஏற்படும். கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரங்கள் நேரடியாகப் பாதிக்கப்படும். இது மிக பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தும். இந்த அழிவைத் தடுப்பது உங்களின் பொறுப்பு இல்லையா?

அடுத்து நதிகள் இணைப்பு பற்றிப் பேசுபவர்களுக்கு சில உண்மைகளை உணர்த்த நினைக்கிறேன். ஒரு நதியை, மற்றோர் நதியுடன் இணைக்கும் போது அதன் அனைத்து சூழலும் மாற்றமடைகிறது, இதன் விளைவு மிகவும் ஆபத்தானது. மக்கள் நலம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தால் இந்த பாதிப்புகளை கண்டிப்பாகக் கவனத்தில் கொள்வார்கள் என நம்புகின்றேன். அவர்கள் நோக்கம் என்பது வெறும் அரசியலுக்கானதாக இருந்தால், இதையெல்லாம் யோசிக்க வாய்ப்பில்லை. எதிலும் அறிவியல் பார்வை இல்லாதவர்களுக்கு இதில் மட்டும் எப்படி வரும் அறிவியல் கண்ணோட்டம்?

உலக அனுபவங்களும், இயற்கை விதிகளும் நதிகள் இணைப்பு இயற்கைக்கு மாறான பேரழிவுத் திட்டங்கள் என்பதை உணர்த்துகின்றன. இருந்தும், தவறான அனுமானங்களை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்படுகின்ற, இந்த நதிகள் இணைப்பு வாதங்கள் தொலைநோக்குப் பார்வையற்ற, மனிதர்களின் சுயநல நோக்கம் கொண்டவையாக உள்ளன.

காவிரி ஆறு
காவிரி ஆறு
`யாரும் எனக்காகப் பேசல, அதனால இப்போ நானே பேசுறேன்... கவனமா கேளுங்க!' - எச்சரிக்கும் `கடல்'

ஐயா ஆராய்ச்சியாளர்களே, அறிவாளிகளே, நீங்கள் நினைப்பது போல, நதிகள் குழாய்களில் ஒடும் நீரல்ல, வேண்டிய இடத்துக்கு ஏற்ற, இறக்க, இழுக்க. ஒவ்வொரு நதியும், அதற்கே உரிய பிரத்யேக, நீரியல், நிலவியல் பண்புக்கூறுகளும், சூழல் அமைவும் கொண்டவை. ஒவ்வொரு நதியும் வெவ்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளைக் கொண்டவை. பார்வைக்கு அவைகள் மேலோட்டமான நீரோட்டங்களாகத் தெரியலாம், அவற்றுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான நீர் ஓட்டங்கள் அதன் அடியிலும் ஓடுகின்றன. நதிகளுக்கடியில், நிலமட்டத்தில் உள்ளது போன்றே, ஏரிகளும், குளங்களும், குட்டைகளும் உள்ளன. அவற்றை இந்த நதி ஓட்டமே இணைக்கிறது.

அதை ஆங்கிலத்தில் `அக்குப்பயர்' என்பார்கள். நமது நிலத்தடி நீரின் ஆதாரங்கள் இவைதான். எனவே, நதிகளை இணைக்கிற கால்வாய்களுக்கும் உண்மையான நதிகளுக்கும் நிறைய வேற்றுமை உண்டு என்பதைப் புரிந்துகொண்டு உங்களின் திட்டங்களைப் பரிசீலிக்க வேண்டுகிறேன். ஒவ்வொரு நாட்டின், சூழ்நிலைக்கும், நில அமைப்புக்கும் ஏற்பவே நதிகள் உருவாகி உள்ளன.

பூமியின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவே நதிகள் உருவாகியுள்ளன. அதை நீங்கள் மாற்ற முயற்சி செய்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். உங்களுக்கு நீர் வேண்டும் என்பதற்காக இயற்கையோடு விளையாடாதீர்கள். ஒரு மனிதனின் உடலில் ஓடும் ரத்த ஓட்டத்தைப் போன்றவை நதிகள். எப்படி ரத்தக் குழாய்கள் நல்ல ரத்தத்தைக் கொடுத்து, கெட்ட ரத்தத்தை எடுத்துச் செல்கிறதோ, அதைப் போல, மழையின் மூலம் நன்னீர் கொடுத்து, நதிகள் மூலம் கழிவுகளை எடுத்துச் செல்ல உதவுகிறது இயற்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்களோ நதிகளைத் தடுத்து, கழிவுகளைத் தேக்கி நாட்டை நாரடிக்கிறீர்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று நதிகளை இணைத்து, அதன் கீழ்ப்பகுதியின் இயற்கைத் தன்மையை அடியோடு அழிக்க எண்ணுகிறீர்கள். பேராசை பெரும் நஷ்டம் என்ற பழமொழி உங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

நதிகள் ஓடி கலக்கும் நிகழ்வில் அவை ஓடும் வழி நெடுக ஆயிரக்கணக்கான லட்சக்கணக்காக உயிரினங்கள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் தாவர உயிரினங்களுக்கு அடிப்படை ஆதராமாக உள்ளன. உள்ளுர் மீன் பிடிப்பு தொடங்கி ஏராளமான தொழில்கள் இதை நம்பியே உள்ளன. கடலில் கலக்கும் நதி நீரை குறுக்கே அணைகளைக் கட்டி கால்வாய்களின் மூலம் திருப்பி விட்டால், இதில் அழிந்து போவது உயிரினங்கள் மட்டுமன்றி, நாட்டின் நதிகளை ஆதாரமாகக் கொண்டுள்ள ஒட்டு மொத்த சுற்றுச்சூழலும்தான்.

ஆறு
ஆறு

ஒவ்வொரு நதியும், அதன் வழித்தடமும், இயற்கையின் வாழிடம். பெரிய அணைகளையல்ல, குறுக்கே சிறு சிறு தடுப்பணைகளைக் கட்டி தேவையான அளவுக்கு பயன்படுத்துங்கள். ஆனால், இணைக்க முயற்சி செய்யாதீர்கள். நதிகள் கடலில் கலப்பது என்பது தாயின் மார்பைத் தேடி வரும் குழந்தையைப் போன்றது. அது தொப்புள் கொடி உறவு. இது அநாதி கால பந்தம். நதிகள், கடல்களின் ரத்தக் குழாய்கள். இந்த சுழற்சி பலகோடி ஆண்டுகளாக நிகழ்ந்துகொண்டிருப்பது. மனித இனமாகிய நீங்கள் தோன்றுவதற்கு, முன்பிருந்தே நிகழ்ந்துகொண்டிருப்பது. இந்நிகழ்வுகளின், குறுக்கே நிற்க நீங்கள் யார்? மனிதர்களால் நதிகளையும் கடல்களையும் உருவாக்க முடியுமா என்ன? ஒரு மனிதன் அவன் விரும்பியபடி, தன்னைத் தானே கூட உருவாக்கிக் கொள்ளவே இயற்கை அனுமதிக்கவில்லை. இயற்கையில் எல்லா இடங்களிலும் ஒரு கட்டுப்பாடும், ஒரு நீதியும் உள்ளது. நதிகளை இணைப்பதை விட்டுவிட்டு, முதலில் உங்களால் காணாமல் போன நதிகளை முதலில் மீட்டெடுங்கள். ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த இந்த உண்மையை, அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.

நதிகள் இணைப்புக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் உற்றுப் பாருங்கள் உண்மை புரியும்.

இறுதியாக நான் ஒற்றைச் சொல்ல விரும்புகின்றேன். நதி நீர் என்பது நிலத்துக்கும், மனிதனுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல, கடலாகிய எனக்கும் சொந்தமானது. நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம், இயற்கை. புரியாதவர்கள் மீண்டும் புவியியல் பாடத்தைப் படியுங்கள் அல்லது உண்மையான அறிவியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சொட்டு தண்ணீரைக்கூட என்னுள் விடமாட்டேன் என நீங்கள் நினைத்தால் இயற்கை உங்களைச் சும்மா விடாது. எனக்கும் தெரியும், என் பங்கை எப்படிப் பெறுவது என்று. நான் சென்னையில் மட்டுமோ, கடலோரத்திலோ, மழையாகக் கொட்டினால் உங்களால் என்ன செய்ய முடியும்? அதை நீங்களே பலமுறை பார்த்தீர்கள். எனக்கான பங்கைப் பெற நான் எந்த முடிவையும் எடுப்பேன் என்பதைப் பலமுறை உங்களுக்கு, உலகத்துக்கு உணர்த்திவிட்டேன். முடிவு உங்களிடம்தான் உள்ளது. உங்களின் அதிநவீன தொழில்நுட்பங்கள் அன்று சென்னையில் எங்கு போயின? நீங்கள் இயற்கையைச் சூறையாடியதற்கு நான் ஆற்றவேண்டிய எதிர்வினை அது.

கடல்
கடல்

உங்களின் அனைத்துக் கட்டுமானங்களும் என் கோபத்துக்கு முன் தூசி என்பதை பல முறை பல வழிகளில் உணர்த்தி விட்டேன். உங்களின் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளும் முடிவு உங்களின் செயல்பாட்டில்தான் உள்ளது. மீண்டும் எச்சரிக்கிறேன். எனது பங்கை எனக்குக் கொடுங்கள். என்னைக் குப்பைத்தொட்டியாகவும், சாக்கடையாகவும் பயன்படுத்துவதை உடனே நிறுத்துங்கள்.

இன்னும் எவ்வளவோ கூற வேண்டியுள்ளது. இது எனது முதல் எச்சரிக்கை என்பதால், சிலவற்றைக் கேள்வியாக மட்டும் வைக்கின்றேன்.

புவி வெப்பமயமாதலையும், பருவநிலை மாற்றத்தையும், எனது உதவியின்றி உங்களால் தடுக்க முடியுமா? அதிலிருந்து பூமியைக் காக்க முடியுமா?

உங்களின் கழிவு நீருக்கும், நெகிழிக் கழிவுக்கும் நான்தான் வடிகால் என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் உலக கடல் தினம் கொண்டாடி, கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களைப் பாதுகாப்பதாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுதுவதாகவும் கூறும் நீங்கள் எந்த அளவுக்கு கடல் வாழ் உயிரினங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்கள்? உங்களின் கல்வித்திட்டத்தில் இதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள்?

குடிப்பதற்கான நீரை சுத்திகரிப்புச் செய்யும் நீங்கள், நதிகளில் மட்டும் ஏன் சுத்திகரிக்காத கழிவுகளை விடுகின்றீர்கள்?

கடல் வழியாக நடக்கும் பயணங்களும், சரக்குப் போக்குவரத்தும் எந்த அளவுக்கு பொருளாதாரத்துக்கு பங்காற்றுகிறது என்பது உங்களுக்குத் தெரியாது?

முனைவர் வெங்கடாசலம்
முனைவர் வெங்கடாசலம்

உங்களின் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்... தோல், சாயம், ரசாயன மற்றும் உரம் உள்ளிட்ட தொழில்சாலைகளின் கழிவுகளை, நதிகளின் மூலம் கடலில் கலக்க விட்டவர்கள் எத்தனை பேரை தண்டித்துள்ளீர்கள்?

பல கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆதரவாக உள்ள பவளப்பாறைகளைக் கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை.

இப்படி கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம், முதலில் இவற்றுக்கெல்லாம் பதில் தேடுங்கள், கூடவே சிந்தியுங்கள். எனது இந்தப் பேச்சு கிணற்றுத் தவளைகளுக்கானதல்ல, கற்றுக்கொள்ளத் துடிக்கும் இளைஞர்களுக்கானது.

நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய சில நடவடிக்கைகளை இங்கே கூறுகின்றேன். அதையாவது செய்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

மழை நீரின் வடிகால்களை ஒழுங்கு படுத்துங்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். சுத்திகரிக்காத கழிவுகளை நதிகளில் கலப்பதை நிறுத்துங்கள். குறைந்தபட்ச நீர் எப்போதும் நதிகளில் ஓடி என்னில் கலக்க விடுங்கள். உபரி என்று கூறாமல், `கடலின் நீர்' என அழையுங்கள்.

இயற்கையின் நீர் சூழ்ச்சியை மதித்து, இயற்கை விதிகளை உணர்ந்து, என்றும் இப்பூமி வளங்குன்றாது இருக்க, உங்களின் சுயநலனை விடுத்து, அறிவியல் கண்ணோட்டத்துடன் அனைத்தையும் பாருங்கள் என்பதுதான் எனது கடைசி வேண்டுகோள். இல்லை எச்சரிக்கை!

- கட்டுரையாளர்:

முனைவர் வெங்கடாசலம், பேராசிரியர் (ஓய்வு),

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

அடுத்த கட்டுரைக்கு