Published:Updated:

காலநிலை மாற்றம்: `நம் அடுத்த தலைமுறை பாதுகாப்பாக இல்லை!' - குழந்தைகள் குறித்த யுனிசெப் எச்சரிக்கை

Kid (Representational Image)
Kid (Representational Image) ( from Pixabay )

பெரியவர்களோடு ஒப்பிடுகையில், குழந்தைகள் அவர்களுடைய வளர்ச்சிக் காலகட்டத்தில் இருப்பதால், உணவு மற்றும் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், அதீத பருவநிலை நிகழ்வுகள் அவர்களுக்கான உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பூமியில் வாழும் 2.2 பில்லியன் குழந்தைகளில் 1 பில்லியன் குழந்தைகள் காலநிலை நெருக்கடி மற்றும் மாசுபாட்டுப் பிரச்னைகளால் பாதிக்கப்படும் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐ.நா வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான அமைப்பு (UNICEF), வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை, பூமியில் வாழும் மொத்த குழந்தைகளில் பாதி பேர் இந்த ஆபத்தில் இருப்பதாகக் கூறுகிறது.

இந்த அறிக்கைப்படி, கிட்டத்தட்ட இப்புவியில் வாழும் அனைத்து குழந்தைகளுமே ஏதாவதொரு வகையில், வெப்ப அலை, வெள்ளம், சூறாவளி, நோய்த் தாக்குதல், வறட்சி, நீர் மற்றும் காற்று மாசுபாடு என்று ஏதேனும் ஒரு விதமான பாதிப்புக்காவது உள்ளாகின்றனர். அதிலும், இந்தியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவின் துணை நாடுகள் உட்பட மொத்தம் 33 நாடுகளில் வாழும் ஒரு பில்லியன் குழந்தைகள் ஒரே நேரத்தில் மூன்று முதல் நான்கு பாதிப்புகளை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்.

உலக அளவில் நடந்த காலநிலை போராட்டம்
உலக அளவில் நடந்த காலநிலை போராட்டம்
from Pixabay

காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வரைபடங்களையும் அதில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்த வரைபடங்களையும் உள்ளடக்கிய முதல் ஆய்வறிக்கையாக இது கருதப்படுகிறது. இதில், வறுமை, சுத்தமான நீர் கிடைக்காமை, சுகாதாரக் குறைபாடு, கல்வியின்மை போன்ற பிரச்னைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் வாழும் பகுதிகளும் வரைபடமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளும் திறனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குழந்தைகளுக்கு எந்தளவுக்குக் கிடைக்கின்றன என்பதை இவற்றின் மூலம் வெளிக்கொணர இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் முயன்றனர்.

குழந்தைகள் உலக அளவில், ``எங்கள் எதிர்காலம் எங்கே?" என்று அரசுகளைக் கேள்வியெழுப்பத் தூண்டுகோலாக அமைந்த, கிரெட்டா துன்பெர்க் பள்ளி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளன்று இளம் காலநிலை போராளிகளின் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றுப் பேரிடர் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த உலகளாவிய போராட்டங்களை செப்டம்பர் 24-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவும் இளம் காலநிலை போராளிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஐ.நா குழந்தைகள் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரியெட்டா ஃபோர், ``இந்த ஆய்வு, முதல்முறையாக, உலக அளவில் குழந்தைகள் எங்கு, எப்படி காலநிலை மாற்றத்தால் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கிறார்கள் என்பது குறித்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மோசமாகவும் உள்ளது. இதன்மூலம், அனைத்துக் குழந்தைகளுமே ஏதேனும் ஒரு வகையிலாவது காலநிலை நெருக்கடியால் சிக்கலுக்கு உள்ளாவதும் எந்தக் குழந்தையுமே பாதுகாப்பாக இல்லையென்பதும் தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Children (Representational Image)
Children (Representational Image)
from Pixabay

மேலும், ``காலநிலை பேரிடர்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில்தான் குழந்தைகள் இருக்கிறார்கள். பெரியவர்களோடு ஒப்பிடுகையில், குழந்தைகள் அவர்களுடைய வளர்ச்சிக் காலகட்டத்தில் இருப்பதால், உணவு மற்றும் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், அதீத பருவநிலை நிகழ்வுகள் அவர்களுக்கான உணவு உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது" என்றார்.

காலநிலை நெருக்கடி குழந்தைகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், காலநிலை பேச்சுவார்த்தை களிலும் அதுகுறித்த முடிவுகளை எடுப்பதிலும் இளம் தலைமுறை பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. குறிப்பாக, வரும் நவம்பரில் ஸ்காட்லாந்திலுள்ள க்ளாஸ்கோவில் நடக்கவிருக்கும் 26-வது காலநிலை உச்சிமாநாட்டில் இளம் தலைமுறை பிரதிநிதிகளும் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ``26-வது உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் அவர்களுடைய எதிர்காலத்தின்மீது தாக்கம் உண்டாக்கும் என்பதால், இந்தப் பூமியின் மீதுள்ள அவர்களுடைய உரிமை மற்றும் பங்கு இந்த மாநாட்டிலேயே அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்கிறார் ஹென்ரியெட்டா ஃபோர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அறிக்கை குறித்து தன் கருத்துகளைத் தெரிவித்த கிரெட்டா துன்பெர்க், ``நாங்கள் இதற்கு பாதிக்கப்படுபவர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்துக்கான போராட்டத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர்கள். எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இளம் தலைமுறையினர் ஒன்றிணைந்து களத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், உலகம் இன்னமும் காலநிலை நெருக்கடியை அவசரகால பிரச்னையாகக் கையாளத் தொடங்கவில்லை. நாம் இன்னமும் உரிய நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் எடுப்பதை விட்டுவிட்டு, பேசிக்கொண்டேயிருக்கிறோம். இது செயல்பட வேண்டிய காலகட்டம்" என்று கூறியுள்ளார்.

Greta Thunberg
Greta Thunberg
AP
காலநிலை மாற்றம்: ``இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!" - எச்சரிக்கும் IPCC அறிக்கை

தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட, ஸிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த காலநிலைப் போராளி Nkosilathi Nyathi, ``காலநிலை மாற்றத்தால் நான் தனிப்பட்ட அளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். வெப்ப அலைகளும் வெள்ளப் பேரிடர்களும் நான் பள்ளிக்குச் செல்வதைச் சிக்கலாக்கின. எங்கள் ஊரிலுள்ள விவசாயிகள் கணிக்க முடியாத பருவநிலையால் திணறிவருகிறார்கள். குழந்தைகளை இதுபோன்ற முடிவெடுக்கும் தளங்களில் பங்கெடுக்க வைக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் தீர்க்கமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

காலநிலை பிரச்னைகள் இனி வரும் நாள்களில் மிகவும் தீவிரமடையும். ஆனால், உலக அளவில் இதனால் அதிகமான பிரச்னைகளை எதிர்கொள்ளப்போகும் முதல் 10 நாடுகள் வெளியிடக்கூடிய கரிம வாயுவின் அளவு 0.5% மட்டுமே. அறிக்கைப்படி, உலக அளவில் 920 மில்லியன் குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். அதேபோல், 820 மில்லியன் குழந்தைகள் வெப்ப அலை பாதிப்புகளுக்கு, 600 மில்லியன் குழந்தைகள் மலேரியா, டெங்கு போன்ற நோய்த் தாக்குதல்களுக்கு, உள்ளாகும் ஆபத்தில் இருக்கிறார்கள்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
from Pixabay
IPCC ரிப்போர்ட்: `காலநிலை மாற்றம்' டு `காலநிலை ஆபத்து'- விஞ்ஞானிகளின் இறுதி எச்சரிக்கை சொல்வது என்ன?

``ஆபத்துகள் நிறைந்திருந்தாலும், நம்மிடையே இன்னும் நேரம் இருக்கிறது. குழந்தைகளுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் எந்த சமரசமும் இன்றிச் செயல்பட வேண்டும். அதுவே, அவர்களுக்கு காலநிலை பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை வழங்கும். ஆகையால், ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பு, அரசுகளிடம் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உடனடியாகவும் தீவிரமாகவும் ஈடுபட வேண்டும், பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார் ஐ.நா குழந்தைகள் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரியெட்டா ஃபோர்.

26-வது காலநிலை உச்சிமாநாடு அதற்கான தொடக்கமாக இருக்க வேண்டும். நீண்டகாலமாக வெற்று உறுதிமொழிகளும் செயல்படாதத் திட்டங்களுமே விவாதிக்கப்படுகின்றன. இந்த முறை இது மாற வேண்டும்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு