Published:Updated:

`வெள்ளைக் கம்பளம் போர்த்திய புல்வெளிகள்!’- மைனஸ் டிகிரியை நெருங்கும் நீலகிரி

ground frost
ground frost

வானம் மேகமூட்டமின்றி காணப்பட்டால், வெப்பநிலை மைனஸாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை ஆறு மாதம், பனி மூன்று மாதம், வெயில் மூன்று மாதம். இதுதான் நீலகிரியின் கணக்கு. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வறட்சி அல்லது பெருமழை, கடுமையான உறைபனி அல்லது வெப்பநிலை உயர்வு என சமன்கெட்ட காலநிலை, நீலகிரியில் நிலவுகிறது. மாறுபட்ட இந்தக் காலநிலை, ஆய்வாளர்களைக் கவலையில் ஆழ்த்திவருகிறது.

ground frost
ground frost

உறைபனியைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் நவம்பரில் தொடங்கி மார்ச் மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும். இந்தச் சமயங்களில் கடுமையான குளிர் நிலவும். காலை நேரங்களில் தரையில் உறைபனி காணப்படும். இரவு முதல் காலை வரை வெப்பநிலை 0 டிகிரி செல்ஷியஸில் இருந்து -4, - 5 வரை செல்லும். சில இடங்களில் வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள நீரும் உறையும். பனியின் தாக்கத்தால் தாவரங்களும் கருகும்.

இந்த ஆண்டு அக்டோபர் முதல், நீர் பனிப்பொழிவு நிலவியது. நவம்பர் மாதம் பெய்த மழையால், சில நாள்கள் நீர் பனிப்பொழிவும் இல்லாமல்போனது.

ground frost
ground frost

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறைபனி தள்ளிப்போனது. இந்த நிலையில், நேற்று இரவு முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன், சூட்டிங் மட்டம், கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டியது. இதனால் புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளைக்கம்பளம் விரித்தார்ப் போல் காட்சியளித்தன. உறைபனியால் கடும் குளிர் நிலவியது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், குறைந்தபட்ச வெப்பநிலை ‘2’ டிகிரி செல்ஷியஸாகப் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு, 2 டிகிரிக்கு ஊட்டி வெப்பநிலை சென்றது இதுவே முதல் முறையாகும்.

ground frost
ground frost

தலைகுந்தா, பைக்காரா, கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. இன்று காலை, பனிப்பொழிவால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம், வெள்ளைநிறக் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தது. வானம் மேகமூட்டமின்றி காணப்பட்டால் வெப்பநிலை மைனஸில் வர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு