சூழலியல் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பில் முன்னோடி மாவட்டமாக விளங்கி வருகிறது. நீலகிரி மலையின் இயற்கை எழில் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு போன்ற 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லிட்டருக்கும் குறைவான கொள்ளளவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் மற்றும் குளிர்பானங்களுக்கும் தடை உள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகச் சூழலியலுக்குத் தீங்கு விளைவிக்காத மக்கும் பொருள்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துமாறு உள்ளூர் மக்களையும் சுற்றுலா பயணிகளையும் மாவட்ட நிர்வாகம் தெடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையே நீடிக்கறது.
இந்த நிலையில், ஊட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக நெல் உமி, கோதுமை உமி, கரும்புச் சக்கை, வேர்க்கடலை ஓடுகள், தேங்காய் நார், வாழை தாரின் தண்டு, புளியங்கொட்டை போன்ற வேளாண்மைச் சார்ந்த கழிவுகளைக் கொண்டு டீ கப்புகள், ஸ்பூன்கள், தட்டுகள், உணவு அடைக்கும் கண்டெய்னர்கள் போன் பொருள்களாக மாற்றி வருகின்றனர்.

இவற்றை நீலகிரியில் புழக்கத்தில் விட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான முன்னெடுப்பில் அசத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த முன்னெடுப்பு குறித்து பேசிய ஊட்டி இளைஞர்கள், ``சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக நீலகிரி இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் பல்வேறு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை இருப்பதால், மாற்று பயன்பாட்டு பொருள்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டே வேளாண் சார்ந்த கழிவுகள் மூலம் கப்புகள், தட்டுகள் போன்றவற்றை நீலகிரியில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

வேளாண் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்தப் பொருள்களைப் பயன்படுத்தி தூக்கி எறிந்த 24 மணி நேரத்திற்குள் மக்கும் தன்மை கொண்டவையாக இருக்கிறது.வேளாண் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இந்தப் பொருள்களைக் கால்நடைகள் உட்கொண்டாலும் அவற்றிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. வேளாண் கழிவுகளும் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், கொள்முதல் செலவும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை. ஒரு கப்பை ரூ.1-க்கு விற்பனை செய்கிறோம். ஊட்டியில் உள்ள சில உணவகங்கள், சிறு வணிக நிறுவனங்கள் இவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்" என்றார்.