Published:Updated:

`விதிகளை மீறும் தொழிற்சாலைகளைக் கண்காணியுங்கள்! - தமிழக அரசை வலியுறுத்தும் ஓ.பி.எஸ்

``பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொய்வின்றி தனது பணிகளை மேற்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும்." - ஓ.பி.எஸ்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள சிப்காட் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், அவற்றில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிச் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த மாதம் தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்கூட, கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளால் அந்தப் பகுதி கடுமையாக மாசடைந்து காணப்படுவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விதிகளை மீறி இயங்கி வருவதாகவும், அத்தகைய தொழிற்சாலைகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட்
கும்மிடிப்பூண்டி சிப்காட்
சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு; அச்சுறுத்தும் வெட் பல்பு டெம்பரேச்சர்!

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நாட்டின் பொருளாதாரம் மேம்பட ஏதுவாக, தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும், தொழில் அமைதி நிலவ வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசு, சுற்றுச்சூழலைப் பேணுவதிலும், மாசைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினால்தான் நிலைத்த வளர்ச்சிக்கு உகந்ததாக அமையும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுநீர் காற்றிலும் நீரிலும் கலந்து ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் ஆகியவை இயற்றப்பட்டு, அவற்றின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டு, அதை நடைமுறைப்படுத்தும் பணியைத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் மேற்படி சட்டங்களும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளும், தொடர்ந்து தொழிற்சாலைகளால் புறக்கணிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், சுற்றுச்சூழல் விதிகளை மீறிப் பல தொழிற்சாலைகள் செயல்படுவதன் விளைவாக அப்பகுதியில் உள்ள காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுவதாகவும், தொழிற்சாலைகளில் உற்பத்தியின்போது வெளியேறும் புகை பலகட்ட செய்முறைகளுக்குப் பிறகு, உயரமான புகைபோக்கி மூலம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், அதை எந்தத் தொழிற்சாலையும் கடைப்பிடிப்பதில்லை என்றும், மாறாகக் கூரை வழியாகக் கரும்புகை வெளியேற்றப்பட்டு நச்சுப் புகையால் காற்று அசுத்தமாகிறது என்றும், அதன் காரணமாகக் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதைச் சுவாசிக்கும் மக்களுக்கு உடல் ரீதியான பல பிரச்னைகள் ஏற்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

OPS
OPS

`சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' என்னும் பழமொழிக்கேற்ப மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால்தான் தொழில்கள் வளர்ந்து, பொருளாதாரம் மேம்படும். எனவே, தொழில்கள் வளர வேண்டுமானால் பொருளாதாரம் மேம்பட வேண்டும். அதேபோல், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் மற்றும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியம் மேம்பட வேண்டும். இதை உறுதி செய்யும் பொருட்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திலேயே மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் இயங்கி வருகிறது. இருப்பினும் மாசு அதிகரித்து, காற்றின் தரம் குறைந்துகொண்டே வருவது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொய்வின்றி தனது பணிகளை மேற்கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, காற்று மண்டலத்தைத் தாக்காமலிருக்க விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைத் தொழிற்சாலைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என்பதும், விதியை மீறும் இயங்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சென்னை காற்று மாசு
சென்னை காற்று மாசு
`மக்கள் முக்கியமா, அனல்மின் நிலையங்கள் முக்கியமா?' - புதிய வழியைக் காட்டும் ஆய்வறிக்கை

எனவே, தமிழ்நாடு முதல்வர் அவர்கள், இதில் உடனடியாகத் தலையிட்டு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விதிகளைச் சரியாகப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், அப்பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்யவும், விதிகளை மீறிச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பன்னீர்செல்வம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு