Published:Updated:

நம் சுற்றுச்சூழலோடு இணைந்து வளர குழந்தைகளை அனுமதியுங்கள் பெற்றோர்களே! #ChildrensDay

children / குழந்தை

நகர வாழ்க்கை, குழந்தைகளுக்கு ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாலும், இயற்கையோடு இயைந்த வாழ்வை குழந்தைகள் இழந்து நிற்கின்றன...

நம் சுற்றுச்சூழலோடு இணைந்து வளர குழந்தைகளை அனுமதியுங்கள் பெற்றோர்களே! #ChildrensDay

நகர வாழ்க்கை, குழந்தைகளுக்கு ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாலும், இயற்கையோடு இயைந்த வாழ்வை குழந்தைகள் இழந்து நிற்கின்றன...

Published:Updated:
children / குழந்தை

வடகிழக்குப் பருவமழை, தொடர்பு இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொழிகிறது.

இன்று நான், கண்ணாடி ஜன்னலுக்குப் பின்னால் நின்று மழையைப் பார்க்கிறேன். ஈரத்தின் வாசனை வெறுமையாக அடித்தது. மெள்ள நான் என் பழைய நினைவுகளுக்குள் தேடுகிறேன். இன்றைய குழந்தைகள், மழைக்காலங்களின் இனிமையை இழந்து நிற்பது வேதனையைத் தருகிறது.

குழந்தை
குழந்தை

வாரத்தின் இறுதிப் பகுதியான வெள்ளிக்கிழமை மாலை நேரம்.

ஐப்பசி மாத அடைமழையாய்க் கொட்டித்தீர்க்கிறது வடகிழக்குப் பருவமழை. சல்லி மண் போட்டு மெத்திவிட்டிருக்கும் வாசல், பாசிபூத்து பச்சை வண்ணத்தில் வழுக்கும் தன்மையோடு கிடக்கிறது. மாலை நேரம், இருள் கவியத்தொடங்கும்போதே சிம்னி விளக்குகளின் கண்ணாடிகள் துடைக்கப்பட்டுத் தயார்ப்படுத்தப்பட்டு வெளிச்சம் ஏற்றி வைப்பார்கள். மழைக்கால இரவுகளில் விடியவிடிய தவளைகள் கத்தித் தீர்க்கும். மழைக்கால மனது குதூகலப்பட்டுத் தூக்கம் வராமல் தவிக்கும். காலையில் எழுந்தவுடன், ஈரநிலத்தின் விறுவிறுப்போடு மண்ணில் கிளறிச் செல்ல, மணம் சிறுவயதில் கோலம் போட்டபடியே மல்லாந்துகிடக்கிறது.

காலையில் எழுந்தவுடன், பக்கத்துவீட்டுச் சிறுவர்களோடு சேர்ந்து ரோட்டோரத்து ஓடைகளில் ஓடும் நீரில் இலைகளைப் பறித்துப்போட்டு, அவை நீந்திச்செல்வதை ரசிக்கிறோம். இளவெயில் நேரம் முடிந்து, காலை உணவாகப் பழைய சோற்றைக் குடித்த பிறகு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று, அங்கே விட்டுவிட்டு அருகில் உள்ள குட்டைகளில் செந்நிற நீரில் நண்டு பிடிப்பதும் முழங்கால் தண்ணீரில் முங்கிக் குளிப்பதுமாக நேரத்தைக் களிப்போம்.

இன்றைய வாழ்க்கையில், குழந்தைகளுக்கும் மண்ணுக்குமான உறவு முற்றிலும் தடைசெய்யப்பட்டது போலவே தெரிகிறது.

சிறுசிறு பாத்திரங்களில் குட்டைத் தண்ணீரை எடுத்துச்சென்று, அருகில் உள்ள சுண்டெலி வங்குகளில் நீர்விட்டு, எலிகளை வெளியே துரத்தி விளையாடுவோம்.

குட்டை நீரில் தவளைகளின் முட்டைகள் ஏராளமாகப் பரவிக்கிடக்கும். அந்தக் குட்டையில், மதிய நேரம் ஆடு மாடுகளைத் தண்ணீர் குடிப்பதற்காக நிறுத்திவிட்டு, அதன் ஓரத்திலுள்ள நுண்மணலை எடுத்துப் பொம்மைகள் செய்தது இன்றும் நினைவில் நிற்கிறது.

மரநிழல்களில், பெண் குழந்தைகள் ஈரமண்ணில் குழிபறித்து விளையாடுவதும், கால் முழுதும் உள்ளே நுழைத்து, ஈரமண்மூடி வீடு கட்டுவதும், அதைத் தும்பைப் பூக்களால் அலங்கரிப்பதும் அதன் முன்புறம் பனையோலையில் காற்றாடி செய்து சுற்றி விடுவதுமாக, பெண் குழந்தைகள் விளையாடிக் களிப்பார்கள்.

இன்றைய வாழ்க்கையில், குழந்தைகளுக்கும் மண்ணுக்குமான உறவு முற்றிலும் தடைசெய்யப்பட்டது போலவே தெரிகிறது.

குட்டைநீரில் வறண்ட தூசிகள் நிறைந்து காணப்பட்டால், கிளுவை மரத்தில் முள்ளை ஒடித்து, கிளுவை மரத்துப் பாலை முள் நுனியில் சுற்றிக் குப்பைகள் சேர்ந்த குட்டை நீரில் போட்டால், முள் சுற்ற ஆரம்பிக்கும். நீரில் உள்ள தூசிகள் விலக ஆரம்பிக்கும். இதுபோன்ற விளையாட்டுகள், இந்தக் கால குழந்தைகளுக்குக் காணக்கிடைக்காத ஒன்றாகும்.

மண்வாசம்
மண்வாசம்

மணல் வீடு, மண் பானைகள், மழைக்கால ஆட்டுப்பால் தேநீர், சுள்ளிகளைப் போட்டு தீ காய்தல், காளான் பிடுங்கச் செல்லுதல், நீர் பாய்ச்சி விளையாடுதல் போன்றவை நான் சிறுவயதில் அனுபவித்து மகிழ்ந்தவை.

தயிர்க்கடை பூச்சியிடம் மழை எங்கே பெய்கிறது எனக்கேட்டு மகிழ்வோம். தும்பைச் செடிகளைப் பிடுங்கி ஒன்றுசேர்த்து, வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்து விளையாடுவோம்.

மழை ஈரத்தில் கொளுஞ்சிச் செடிகளைப் பிடுங்கி, தலை உரத்திற்காக வாங்கக் காத்திருக்கும் கடைகளில் கொளுஞ்சியைப் போட்டுக் கடலை மிட்டாய்களை வாங்கித் தின்போம். மழை பொழியும்போது, சாரல் மழையில் கோணி சாக்குகளைத் தலையில் போர்த்திக்கொண்டு ஈர மண்ணில் வெறுங்காலில் நடக்கும் சுகம், இனி எப்போதும் இக்கால குழந்தைகளுக்குக் கிடைக்காதோ..!

குழந்தைகள்
குழந்தைகள்

அன்றெல்லாம் அடைமழை பெய்யும். தொடர்ந்து மூன்று நான்கு நாள்களுக்கு மிதமான மழை இடைவிடாமல் பொழியும். அப்போது, வீடுகளில் உள்ள அனைவரும் வட்டமாக அமர்ந்து, புதிதாகப் பிடுங்கப்பட்ட நிலக்கடலைக் காயை உப்பு போட்டு வேகவைத்து உண்பது தனி சுகம். வறுத்த பொரி மற்றும் வரக்காப்பி, மாலை நேரத்து அமிர்தம்.

இன்றைய குழந்தைகள், மழைக்காலங்களில் கவச உடையணிந்து தங்களை ஈரம் படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். நாங்களோ, மழை ஓய்ந்த பிறகு இலைகளில் நிற்கும் மழைத்துளிகளை உலுக்கி, மீண்டும் எங்களை நனைத்துக்கொள்வோம்.

மழையும் மழைநீரும் எங்களுக்கு மாபெரும் கல்விக்கூடம். ஒவ்வொருவரும் விஞ்ஞானியாகி விளையாடி மகிழ்வோம்.

மழைக்காலங்களில் வரும் ஈசல்கள்தான் எண்ணற்ற குழந்தைகளுக்குப் புரதச்சத்து. கரையான் புற்றருகே துணி கட்டி வைத்து, ஈசலைப் பிடித்துக் காயவைத்து, பொரியுடன் கலந்து வறுத்துக் கொடுப்பார்கள். அதுவே, அந்தக் கால குழந்தைகளின் புரதத்தேவையை நிறைவுசெய்பவையாக இருந்தன.

விளையாட்டு
விளையாட்டு
Pinterest

மழைக்காலங்களில் பிடுங்கப்படும் பனங்கிழங்குகள், கட்டாயம் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்படும். பனங்கிழங்கு நார்ச்சத்து மிகுந்தது. இதை, நாங்கள் சுள்ளிகளைப் போட்டு சுட்டு சாப்பிடுவோம்.

நகர வாழ்க்கை, குழந்தைகளுக்கு ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாலும், இயற்கையோடு இயைந்த வாழ்வை குழந்தைகள் இழந்து நிற்கின்றன என்பதே, கனத்த மனதோடு ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை.