Published:Updated:

`இதை நிறுத்த மாட்டேன்; என்னைப்போல் இந்த மரக்கன்றும் வளர வேண்டும்!' - நெகிழும் 5-ம் வகுப்பு மாணவி

பேராவூரணியில் மரம் நடும் விழாவில் தான் வைத்த மரக்கன்றுக்கு பள்ளிக்குச் செல்லும்போது தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வரும் தனியார் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவி
மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவி

பேராவூரணி அடுத்த நாட்டாணிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அப்பாஸ். இவரின் மகள் அஃபியா ஷெரின் இவர் பேராவூரணியில் உள்ள ஜே.சி.குமரப்பா என்ற தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், அஃபியா ஷெரின் கிராமத்தில் புதிதாக பேராவூரணி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டப்பட்டது.

மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவி
மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவி

இந்த வளாகத்தில் அஃபியா ஷெரின் படிக்கும் பள்ளியின் சார்பில் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், அப்பள்ளியைச் சேர்ந்த 50 மாணவ, மாணவியர் வந்து பலவகையான மரக்கன்றுகளை நட்டுச் சென்றனர்.

`தேசிய கொடியை ஏற்றிய மாணவி!’- தூத்துக்குடியில் கௌரவபடுத்திய பள்ளி நிர்வாகம்!

அஃபியா ஷெரினும் தன் பங்கிற்கு வாத மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு அதற்கு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சென்றார். பின்னர், `ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதுமா? மரக்கன்று பிழைத்து விடுமா?' என தன் தந்தையிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், `தொடர்ந்து தண்ணீர் ஊற்றினால்தான் பிழைக்கும்' என கூறியிருக்கிறார். அதன்பிறகு தினமும் காலையில் தன் தந்தையுடன் பள்ளிக்குச் செல்லும்போது வேளாண் வட்டார விரிவாக்க மையத்துக்குச் சென்று, தான் நட்டு வைத்த மரக்கன்றுக்கு ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து ஊற்றி பராமரித்து வருகிறார்.

மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவி
மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் மாணவி

இதுகுறித்துப் பேசிய அஃபியா, ``'தினமும் நான் வைத்த மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன்' என்றேன். அப்பாவும் `சரிம்மா' எனச் சொன்னார். தினமும் காலை கிளம்பி பள்ளி செல்வதற்கு முன் நேராக மரக்கன்று நட்ட இடத்துக்குச் செல்வேன். அங்கு ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துவந்து மரக்கன்றுக்கு ஊற்றுவேன். அதன் பின்னரே பள்ளிக்குச் செல்வேன். இதற்கு என் அப்பாவும் முழு ஒத்துழைப்புத் தருகிறார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நான் இதைச் செய்து வருகிறேன். பள்ளி விடுமுறை நாள்களைத் தவிர அனைத்து நாள்களிலும், நான் இதை தவறாமல் செய்துவருகிறேன்.

Vikatan

ஒரு அடிக்கும் குறைவாக வைக்கப்பட்ட மரக்கன்று இன்று மூன்று அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்து நிற்கிறது. இதைத் தொட்டுப் பார்த்துக் கொஞ்சி மகிழ்கிறேன். என்னைப்போல் இந்தக் கன்றும் மரமாக வளர வேண்டும். இதுதான் என் ஆசை. அத்துடன் எல்லோரும் மரக்கன்று வைப்பதுடன் இல்லாமல் அதை தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் மாலதி கூறுகையில், ``தான் வைத்த மரக்கன்றுக்கு தினமும் தவறாமல் வந்து தண்ணீர் ஊற்றி வரும் மாணவி குறித்து ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

மாலதி
மாலதி

இதைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட நான் மாணவியின் செயலைப் பார்ப்பதற்காக அடுத்தநாள் அலுவலகத்துக்கு சீக்கிரம் வந்தேன். தந்தையுடன் வந்த அவர், தண்ணீர் எடுத்து வந்து ஊற்றத் தொடங்கினாள். அப்போது அவள் முகம் மலர்ந்தது. வளர்ந்து வரும் அந்த மரக்கன்றைச் செல்லமாக தொட்டுப் பார்த்தாள். பின்னர், நான் அந்த மாணவியை அழைத்து பரிசு கொடுத்து பாராட்டி வாழ்த்துக் கூறினேன். `என்னோட இந்தச் செயலை நிச்சயம் நிறுத்தமாட்டேன்' என மாணவி தெரிவித்தது எனக்கு மகிழ்ச்சியையும், இந்தப் பூமி பசுமை பூமியாக மாறும் என்ற நம்பிக்கையையும் தந்தது'' என்கிறார் நெகிழ்ச்சியாக.