Published:Updated:

பெருங்களத்தூரை மிரட்டும் `கரும்புகை'... ஊரடங்கிலும் தீராத சோகம்!

நூதன முறையில் போராட்டம்
நூதன முறையில் போராட்டம்

153 ஏக்கர் அளவில் இருந்த ஏரி, ஆக்கிரமிப்பின் காரணமாக வெறும் 35 ஏக்கர் பரப்பளவில் சுருங்கியது. அதிலும் 12 ஏக்கர் பரப்பளவிற்கு ஏரியில் குப்பைக் கிடங்கு அமைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. இன்னும் சில வருடங்களில் அந்த ஏரி காணாமலேயே போய்விடும்.

பெருங்களத்தூர் என்றாலே கடுமையான போக்குவரத்து நெரிசலும், காலவிரயமும்தான் நம் கண்முன் வந்து நிற்கும். ஊரடங்கு காரணமாக அந்தப் பிரச்னைகள் ஓய்ந்துள்ள நிலையில், அதையும் தாண்டிய பெரிய பிரச்னையில் சிக்கித்தவிக்கிறது பெருங்களத்தூர். தென்சென்னை மற்றும் புறநகர் குப்பைகள் அங்குள்ள ஏரியில் கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் கரும்புகை மண்டலமாக அப்பகுதி மாறியுள்ளது. பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அப்பகுதி மக்கள் மொட்டை மாடியில் ஒன்று திரண்டு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

பெருங்களத்தூர் குப்பைக் கிடங்கு
பெருங்களத்தூர் குப்பைக் கிடங்கு

‘பெரும்குளத்தூர்’ என்பது மருவி, காலப்போக்கில் பெருங்களத்தூர் ஆனது. அந்த அளவிற்குப் பெரிய குளங்கள் அதிக அளவில் இருந்திருக்கின்றன. காலப்போக்கில் நீர்நிலைகள் அழிந்துவிட்டன. 153 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏரி, ஆக்கிரமிப்பின் காரணமாக வெறும் 35 ஏக்கர் பரப்பளவுக்கு சுருங்கிவிட்டது.

அதிலும் 12 ஏக்கர் பரப்பளவிற்கு ஏரியில் குப்பைக் கிடங்கு அமைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. இன்னும் சில வருடங்களில் இருக்கும் ஏரியும் காணாமல் போய்விடும். புதிய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஏரியில், மூன்று வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பாக குப்பைக் கிடங்கு அமைத்தார்கள். மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என தென்சென்னை மற்றும் புறநகர் குப்பைகள் இந்த ஏரியில்தான் கொட்டப்படுகிறது.

பெருங்களத்தூர் குப்பைக் கிடங்கு
பெருங்களத்தூர் குப்பைக் கிடங்கு

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அந்தக் குப்பைகளை அகற்றாமல், இரவு நேரங்களில் நெருப்பைப் பற்ற வைத்துவிடுகிறார்கள். இதனால் சுமார் ஒரு கி.மீ சுற்றளவிற்கு கரும்புகை மண்டலமாக மாறியிருக்கிறது. சுற்றுவட்டார மக்கள் கண் எரிச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என அதிக அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உலக அளவில் காற்றின் மாசு குறைந்துவரும் நிலையில், இதுபோன்ற காரணங்களால் காற்றின் மாசு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அருண் பகத் என்பவரிடம் பேசினோம். “பெருங்களத்தூர் பேரூராட்சியில் பலமுறை புகார் அளித்துவிட்டோம். சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. ‘குப்பை கொட்டுவதுதான் எங்க வேலை. நாங்கள் பற்ற வைப்பதில்லை’ என அலட்சியமாகப் பதில் சொல்கிறார்கள். முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தாலும், அந்தப் புகார் பேரூராட்சி செயல் அலுவலருக்கே திரும்ப வருகிறது. இதனால் அன்றைக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி அணைத்துவிடுவார்கள். ஆனால், அன்று இரவே மீண்டும் குப்பைக் கிடங்கு எறியத் தொடங்கிவிடும். அதிகாரிகளும் எதையாவது சொல்லி அந்த மனுமீது நடவடிக்கை எடுத்ததாகக் காட்டிவிடுவார்கள். தற்போது, கொரோனா அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து வரும் மருத்துவக் குப்பைகளை இங்கே கொட்டுகிறார்கள்.

அருண் பகத்
அருண் பகத்

காற்று மாசு அளவு 250-க்கும் குறைவான அளவில் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலவரப்படி, 935 என்ற அளவில் இருக்கிறது. 250-க்கும் குறைவாக இருந்தால் பச்சை மண்டலம். பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என இதற்கும் தர நிர்ணயம் உள்ளது. தற்போது, சிவப்பு மண்டலத்தில் பெருங்களத்தூர் இருக்கிறது. விட்டைவிட்டு வெளியே வந்ததால் மாஸ்க் அணிந்துதான் வரமுடியும். இதனால் எங்கள் எதிர்ப்பை நூதன முறையில் பதிவுசெய்ய முடிவுசெய்தோம். இதைத் தொடர்ந்து, இப்பகுதியில் உள்ள அனைவரும் நேற்று மாலை தங்கள் வீட்டு மொட்டை மாடியில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் காண்பித்தோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்“ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு