Published:Updated:

`நாம் விரும்பும் நபருடன் இருந்தால் மகிழ்ச்சிதான்!'- வைரலாகும் பென்குயின் புகைப்படம்

பென்குயின்கள்
பென்குயின்கள் ( Tobias Baumgaertner )

இரவுவேளை ஒன்றில் இரண்டு பென்குயின்கள் பாறையில் உட்கார்ந்தபடி ஒன்றை ஒன்று கட்டியணைத்து, ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தது.

கொரோனா லாக்டெளன் காலத்தில் நம்மில் பலர் தங்களது பெரும்பாலான நேரத்தை மொபைல் போன்களிலேயே கழித்து வருகிறோம். இந்த க்வாரன்டைன் நாள்களில் தினந்தோறும் ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகி வந்த நிலையில் தற்போது இரண்டு பென்குயின்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரவுவேளையில் இரண்டு பென்குயின்கள் பாறையில் உட்கார்ந்தபடி ஒன்றை ஒன்று கட்டியணைத்து, ஆறுதல் படுத்திக்கொண்டு மெல்போர்ன் வானத்தில் படர்ந்திருக்கும் வானலைகளை ரசிப்பதுபோல அமைந்துள்ளது அந்தப் புகைப்படம். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் புறநகர்ப் பகுதியான st.கில்டாஸ் என்னும் இடத்தில் டோபியாஸ் பௌம்கிர்ட்னர் (Tobias Baumgaertner) என்னும் புகைப்படக் கலைஞர் எடுத்த அந்த படம் தற்போது உலக மக்கள் பலரையும் உணர்ச்சிமயப்படுத்தியுள்ளது.

அன்பு
அன்பு
Tobias Baumgaertner

இந்த ஒளிப்படத்தைச் சென்ற ஆண்டே க்ளிக் செய்த டோபியோஸ் தற்போதுதான் அதைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிடவே, பலரும் அதைப் பற்றிய தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். ட்விட்டரில் நாய்களின் பெயரில் இயங்கும் பிரபல அக்கௌன்ட்டுகளை வைத்திருப்பவரான மேட் என்பவர், "இரண்டு பென்குயின்கள் மிக அழகாக அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் என் மனதைவிட்டு நீங்காமல் இருக்கிறது" என்று கூறியுள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த படம் 1,41,000க்கு மேலான லைக்குகளையும் 44,500க்கும் அதிகமான ரீ-ட்வீட்களையும் பெற்றுள்ளது.

"தங்கள் அன்பிற்குரிவர்களை அருகில் வைத்திருப்பவர்கள் என்றும் அதிர்ஷ்டசாலிகளே" என்று அந்த படம் குறித்து கூறும் அதைப் பதிவு செய்த புகைப்படக்காரர் அப்படம் பற்றி மேலும் பலவற்றை விவரித்துக் கூறுகிறார்.

இரவு நேரம்
இரவு நேரம்
Tobias Baumgaertner

"அந்த இரவு வேளையில் இரண்டு பெங்குயின்களும் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக அந்தப் பாறையின் மேல் உட்கார்ந்து வானலைகளை ரசித்துக்கொண்டிருந்தன. என்னருகே வந்த தன்னார்வலர் ஒருவர் வலது புறம் இருக்கும் அந்த வெள்ளை நிறத்தில் முதுமையாக காட்சியளிக்கும் பெண் பறவை தனது இணையை இழந்திருப்பதாகவும் இடது பக்கத்தில் இருக்கும் ஆண் பறவையும் இணையை இழந்ததுதான் என்றும் கூறினார். மேலும் அந்த காலனியில் இருக்கும் மற்ற அனைத்துப் பறவைகளும் உறக்கத்தில் மூழ்க இவ்விரண்டு மட்டும் ஒன்றை ஒன்று கட்டி அனைத்து ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தன. வலியே அவர்களை ஒன்றிணைத்துள்ளது" என்கிறார் டோபியோஸ்.

இந்தப் படங்களை எடுக்க சுமார் மூன்று முழு இரவுகளை அந்த பென்குயின் காலனியில் செலவிட்டாராம் டோபியோஸ்.

அடுத்த கட்டுரைக்கு