Published:Updated:

நீலகிரி: சேற்றில் சிக்கிய சினை யானையைத் தாக்கிய புலிகள்... சிசுவுடன் உயிரிழந்த சோகம்!

பெண் யானையின் இறப்பு
பெண் யானையின் இறப்பு

முதுமலையில் சேற்றில் சிக்கிய பெண் யானையை புலிகள் இறையாக்கியுள்ளன. மீதம் கிடந்த யானையின் உடல் பாகத்தை வனத்துறையினர் கூறாய்வு செய்தபோது இறந்து கிடந்த யானையின் கருவிலிருந்து குட்டியின் சடலமும் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வறண்டு கிடந்த முதுமலைப் புலிகள் காப்பக வனப்பகுதிகள், டவ் தே புயலின் கொடையால் பெற்ற ஒருவார கால மழையின் காரணமாகப் பசுமைக்குத் திரும்பியது. வறட்சியால் இடம்பெயர்ந்த யானை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலைக்குத் திரும்புகின்றன. பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

கருவில் இருந்த 15 மாத குட்டி
கருவில் இருந்த 15 மாத குட்டி

இந்த நிலையில், முதுமலைப் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். கரிமலவலா நீரோடைப் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் சென்றபோது, சேற்றில் சிக்கிய நிலையில் காட்டுயானை ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து துணை இயக்குநர், கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நிகழ்விடத்துக்குச் சென்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. இறந்து கிடந்த பெண் யானையின் கருவிலுருந்த குட்டி ஒன்றும் சடலமாக மீட்கப்பட்டது. இது வனத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

கருவில் இருந்த 15 மாத குட்டி
கருவில் இருந்த 15 மாத குட்டி

இந்தத் துயரம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர்,``சினை யானை ஒன்று தண்ணீர் குடிக்க இந்தப் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது சேற்றில் சிக்கி எழ முடியாமல் தவித்து வந்துள்ளது. இந்தப் பகுதிக்கு வந்த புலிகள், யானையைப் பின்புறமாக இருந்து தாக்கி இறையாக்கியுள்ளன" என்றார்.

யானை இறப்பு குறித்து கால்நடை மருத்துவர் தரப்பில், ``இறந்தது சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை. யானை 15 மாதம் சினையாக இருந்துள்ளது. வயிற்றிலிருந்து 15 மாத ஆண் குட்டியின் சடலத்தை மீட்டுள்ளோம். யானையைப் புலிகள் தாக்கியதுக்கான காயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளோம். இந்தப் பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புலிகள் நடமாட்டமும் பதிவாகியுள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே உண்மை காரணம் தெரிய வரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு