Published:Updated:

நடப்பட்ட 1000+ மரங்கள், தினமும் குடத்தில் தண்ணீர்; கிராமத்தின் பசுமைக்காக உழைக்கும் தனி ஒருவன்!

மரங்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்
மரங்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்

கால் கடுக்க சைக்கிள் மிதித்து மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ரமேஷை அன்று ஏளனமாகப் பார்த்துச் சென்ற அதே பொதுமக்கள், இன்று பாராட்டிவிட்டு கூடவே தாங்களும் ஒரு மரங்கன்றை நட்டுவிட்டுச் செல்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கூலாட்சிக் கொல்லையைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். மரங்களின் மீது தீராத காதல் கொண்ட ரமேஷ் கொத்தமங்கலத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான பொது இடத்தில் பொதுமக்கள் பயன்பெற வேண்டி, தன்னுடைய சொந்த முயற்சியால் 1,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து அதைப் பராமரித்தும் வருகிறார். தனது சைக்கிளில் இரண்டு குடங்களைக் கட்டிக்கொண்டு அருகே உள்ள ஐயனார் கோயில் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து காலை, மாலை என இரண்டு வேளையும் அந்த மரங்களுக்கு எல்லாம் உயிர் கொடுக்கிறார்.

அத்தி, மா, பலா, வேம்பு, மருதம், ஆல், அரசு, வன்னி, கிராம்பு என அரிதாகிப்போன பல மரக்கன்றுகளையும் வாங்கி வந்து நடவு செய்திருக்கிறார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இவர் நட்டு வைத்த மா மரம் பூ பூக்கத் தொடங்கிவிட்டது. நாட்டு அத்தி மரம் காய் காய்க்கத் தொடங்கியிருக்கிறது. கால் கடுக்க சைக்கிள் மிதித்து மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ரமேஷை அன்று ஏளனமாகப் பார்த்துச் சென்ற அதே பொதுமக்கள், இன்று பாராட்டிவிட்டு கூடவே தாங்களும் ஒரு மரங்கன்றை நட்டுவிட்டுச் செல்கின்றனர்.

நடப்பட்ட 1000+ மரங்கள், தினமும் குடத்தில் தண்ணீர்; கிராமத்தின் பசுமைக்காக உழைக்கும் தனி ஒருவன்!
342242449056101

கால்நடைகளால் சேதமடைந்த மரக்கன்றுகளின் கூண்டுகளை சீரமைத்துக் கொண்டிருந்த ரமேஷிடம் பேசினோம்.

``கொத்தமங்கலம்தான் எனக்கு சொந்த ஊரு. விவசாயம்தான். 30 வருஷத்துக்கு முன்னால நான் சின்னப்பையனா இருந்தப்ப இந்த இடம் குறுங்காடாக இருக்கும். இந்த இடத்துக்குக்கு பக்கத்து இடத்துல அஞ்சாறு பெரிய மாமரங்கள் இருக்கும். மாமரத்தில இருந்து விழும் பழத்தை நாங்க எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு பொறக்குவோம். இன்னைக்கு கிராமங்கள்லயே மா மரத்தைப் படத்தைப் பார்த்து பிள்ளைங்க தெரிஞ்சிக்கிற நிலைமை வந்திடுச்சு. எப்படியாவது பழைய மாதிரி மரங்களை எல்லாம் வளர்த்து குறுங்காட்டை உருவாக்கிடணும்ங்கிறது ரொம்ப வருஷ ஆசை. அந்த ஆசை 2017-ல்லதான் நிறைவேறுச்சு. என்னோட தம்பி ஒருத்தணும் மரங்கள் வளர்க்க ஆர்வமா இருந்ததால, ரெண்டு பேரும் சேர்ந்து ஐயனார் கோயில் குளத்து ஓரமா 10 மரக்கன்றுகளை நட்டோம். நடவு செஞ்சா மட்டும் போதாது; பராமரிகக்ணும். குளத்துல இருந்து தண்ணீர் தூக்கி ஊத்திக்கிட்டு இருந்தோம்.

ரெண்டு பேரும் வேலையை பாதியாகப் பிரிச்சிக்கிட்டு தண்ணீர் ஊத்துவோம். கொஞ்ச நாள்ல அவன் குடும்ப சூழ்நிலையால வெளி நாட்டுக்குப் போயிட்டான். வேற வழியில்லை. அதற்கப்புறம் எல்லா மரக்கன்றுகளுக்கும் நானே தண்ணீர் ஊற்ற வேண்டிய நிலை வந்திருச்சு. அந்த நேரத்துல குளத்துலயும் தண்ணீர் நிறைய இருந்துச்சு. அதனால, தொடர்ந்து மரக்கன்றுகளை நட ஆரம்பிச்சேன். 3 வருஷத்துக்குள்ள கிட்டத்தட்ட 1,000 மரக்கன்றுகளை நடவு செஞ்சிருப்பேன். கால்நடைகள் மேய்ந்தது, கருகிப்போனதை எல்லாம் தவிர்த்து இப்போ ஒரு 500 மரங்கள் வளர்ந்து நிற்குது. கால்நடைகளுக்கு நம்மளோட உழைப்பு தெரியாது. அதுகளுக்குத் தேவை இலைகள். அதனால், சேதப்படுத்திடும். கால்நடைகள் சேதப்படுத்தினா கவலைப்பட மாட்டேன். ஆனா, மனிதர்கள் சிலர் வேண்டுமென்றே பிடுங்கி எறிஞ்சிருவாங்க.. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கும்.

நடப்பட்ட 1000+ மரங்கள், தினமும் குடத்தில் தண்ணீர்; கிராமத்தின் பசுமைக்காக உழைக்கும் தனி ஒருவன்!
342242449056101
அடுத்தடுத்து மாயமாகும் சந்தன மரங்கள்; என்ன நடக்கிறது நீலகிரியில்?

ஒரே நாளில் எத்தனை மரக்கன்றுகளையும் நடவு செஞ்சிடலாம். ஆனா, தண்ணீர் ஊற்றி வளர்ப்பது ரொம்ப கஷ்டம். ஒரு நாளைக்கு 50 குடம் வரையிலும் சைக்கிள்ல தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு ஊற்ற முடியும். அதுக்கு மேல முடியாது. அதுக்கே மூச்சு வாங்கிடும். ஆனா, ஒரு நாள் தண்ணீர் ஊத்தலைன்னாலும், மரக்கன்று எல்லாம் வாடிப்போயிடும். காலை, மாலைன்னு கிட்டத்தட்ட 6 மணி நேரம் இந்த மரக்கன்றுகளுக்காகவே ஒதுக்கிடுவேன். தண்ணீர் ஊற்றுகிறதுக்கு ரொம்பவே பொறுமை வேணும். யாரையும் கூப்பிட மாட்டேன். அப்படியே கூப்பிட்டாலும் யாரும் வர மாட்டாங்க. எப்பவும் நான் ஒரே ஆளாதான் மரக்கன்றுகளை நட்டுக்கிட்டு இருப்பேன். அப்போ பொதுமக்களே பலர் இவனுக்கு வேலை வெட்டி இல்லாம இதை செஞ்சிகிட்டு இருக்கான்னு சொல்லி கேலியும், கிண்டலும் செஞ்சிட்டுப் போயிருக்காங்க. அதை எல்லாம் கண்டுக்க மாட்டேன்.

இப்போ என்னோட மரங்கள் ஓரளவுக்கு வளர்ந்து நிற்குதுங்க. கேலி, கிண்டல் செஞ்சவங்க எல்லாரும் இந்த இடத்துல மரக்கன்றுகளை நட்டுக்கிட்டு இருக்காங்க. என்னை வாழ்த்துறாங்க. அவங்க வீட்டுல்ல பிள்ளைங்களுக்கு பிறந்த நாள் விழான்னா குடும்பத்தோட வந்து இங்க மரக்கன்று நடுறாங்க. நண்பர்கள் பலரும் இப்போ ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க.

மருந்து, அத்தியாவசியம்னு பல மரங்களைத் தேடி, தேடி வாங்கி வந்து நடவு செஞ்சிருக்கேன். பாலமரம், உத்திராட்சை மரம்னு ஏராளமான ஆன்மீக மரங்கள் இருக்கு. பெரும்பாலும் அரிமளம் பக்கத்துல இருக்க கல்லுக்குடியிருப்பு கிராமத்துல எல்லா மரக்கன்றும் கிடைச்சிரும். நானே நேரடியா போய் வாங்கிக்கிட்டு வந்திடுவேன். பொதுமக்களை மாதிரித்தான் வீட்டிலேயும் அம்மா, அப்பா, மனைவின்னு எல்லாரும் ஏன் தேவையில்லாத வேலையெல்லாம் பாக்குறீங்க, அதனால ஏதாவது கிடைக்கப்போகுதா என்று எல்லாம் சொன்னாங்கதான். ஆனா, மரக்கன்று வளர்க்கிற விஷயத்துல மட்டும் ரொம்பவே பிடிவாதமாக இருந்தேன். இப்போ கொஞ்சம் வறட்சியான காலக்கட்டம். குளத்துல தண்ணீர் இல்லை. கொஞ்ச நாளா, நண்பரோட தோப்புல உள்ள தொட்டியில இருந்துதான் தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு ஊற்றிக்கிட்டு வர்றேன். தோப்பும் 1கி.மீ தூரத்துல இருக்கு.

நடப்பட்ட 1000+ மரங்கள், தினமும் குடத்தில் தண்ணீர்; கிராமத்தின் பசுமைக்காக உழைக்கும் தனி ஒருவன்!
342242449056101
குறிஞ்சிப் பூ, சந்தன மரங்கள், தெருவுக்குத் தெரு அருவிகள்! – காந்தளூர் ஸ்பெஷல்! Long Drive போலாமா - 5

ஒரு நாள் அந்தத் தொட்டியிலயும் அறவே தண்ணீர் இல்லை. வேற வழியில்லை. காசு கொடுத்து டேங்கர் லாரி தண்ணீரை வரவச்சுதான் தண்ணீர் பாய்ச்சுனேன்.

மரக்கன்றுகளைப் பாதுகாக்க மரக் கூண்டுகள் ரொம்பவே அவசியம். மரக்கன்றுகள், கூண்டு செலவுன்னே ஒரு தொகையை செலவழிச்சிருக்கேன். மேய்ச்சல் புறம்போக்குங்கிறதால கூண்டு ரொம்ப அவசியம். என்னைப் பற்றி அறிந்த சுற்றுச்சூழல் அமைச்சர் நேரடியாக வந்து பாராட்டினார். உங்களுக்கு ஏதாவது அவார்டு கொடுக்க வேண்டுமேன்னு சொன்னாரு. ``அவார்டு எல்லாம் வேண்டாம் சார், தண்ணீர் வசதி மட்டும் ஏற்படுத்திக் கொடுங்க; அதுவே போதுமானது" என்றேன்.

எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து போர்வெல் அமைத்துத் தருவதாகக் கூறியிருக்கிறார். அது கிடைத்துவிட்டால் போதும். நிச்சயம் குறுங்காட்டை அமைத்துவிடுவேன். வருங்கால தலைமுறையினருக்காக குறுங்காடு மிகவும் அவசியமான ஒன்று" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு