Published:Updated:

சீமைக்கருவேல மரக்கன்றை வேரோடு பிடுங்கி வந்தால் பரிசு!- குவியும் மரக்கன்றுகள்; ஆர்வம் காட்டும் மாணவர்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சீமைக்கருவேல மரக்கன்றுகள்
சீமைக்கருவேல மரக்கன்றுகள்

சீமைக்கருவேல மரங்களை வேரோடு பிடுங்கிவந்து கொடுத்தால் ரூ.3 தருவதாக கொத்தமங்கலம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அறிவித்ததையடுத்து, அந்தப் பகுதி மாணவர்கள், பெண்கள் உட்பட பலரும் ஆர்வமுடன், பிடுங்கிவந்து கொடுத்து பணத்தை பெற்றுச் செல்கின்றனர். சீமைக்கருவேல மரங்கள் பூமிக்குள் உள்ள நிலத்தடிநீரை உறிஞ்சி நீர்வளத்தை அழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, பூமிக்குள் அதிக ஆழத்தில் வேர்விட்டு வளரக்கூடியது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் விட்டுவைப்பதில்லை.

சீமைக்கருவேல மரக்கன்றுகள்
சீமைக்கருவேல மரக்கன்றுகள்

இந்த மரங்கள் பரவி இருக்கும் இடங்கள் எல்லாம் வறட்சியாகவே காணப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அப்போது, அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலரும் களத்தில் இறங்கி ஆர்வமுடன் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுவந்தனர். அதன்பின்பு சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு என்பது குறைந்துள்ளது. இதற்கிடையே, மீண்டும் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் நற்பணி மன்றத்தினர் கடந்த 6 மாதங்களாக ஆறு, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, நீர் நிலைகளைத் தூர்வாரி உள்ளனர். அதன் பலனாக, தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி நல்ல மழை பெய்துவருவதால், நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. ஆனாலும், புதிது புதிதாக வளரும் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து வருகிறது.

சீமைக்கருவேல மரக்கன்றுகள்
சீமைக்கருவேல மரக்கன்றுகள்

இவற்றை மொத்தமாக அழிக்கும் நோக்கில்தான் தற்போது கொத்தமங்கலம் இளைஞர்கள் இந்த புது முயற்சியில் இறங்கியுள்ளனர். சீமைக்கருவேல மரக்கன்றை வேரோடு பிடுங்கிக் கொண்டுவந்து ஒப்படைத்தால், ஒரு கன்றுக்கு ரூ.3 பரிசு என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து, பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும்  ஆர்வமுடன்  மரக்கன்றுகளைப் பிடுங்கிவந்து கொடுத்து பணத்தைப் பெற்றுச் செல்கின்றனர்.

இதுபற்றி கொத்தமங்கலம் இளைஞர் நற்பணி மன்றத்தினரிடம் பேசினோம், ``கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இங்குள்ள பகுதிகளில் காடுபோல வளர்ந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை அழித்து நீர் நிலைகளைத் தூர்வாரி வருகிறோம். ஆனாலும், பகுதி அளவுக்குத்தான் அழிக்க முடிந்துள்ளது. தொடர்ச்சியாக, ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டும் அழித்து நீர் நிலைகளைத் தூர்வாரி வருகிறோம். நாங்கள் நினைத்த மாதிரி நல்ல மழை பெய்து ஆறு, குளங்கள் நிரம்பி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும்,  சீமைக்கருவேல மரம் நன்கு வளர்ந்துவிட்டால், அதை அகற்றுவதற்குப் பல வழிகளிலும் சிரமம் ஏற்படுகிறது.

சீமைக்கருவேல மரக்கன்றுகள்
சீமைக்கருவேல மரக்கன்றுகள்

எனவே, அது மரக்கன்றாக இருக்கும்போது அகற்றினால், ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றியது. இதையடுத்துதான், சீமைக்கருவேல மரக்கன்றுகளை வேரோடு பிடுங்கிவந்தால் பரிசு என்று அறிவித்தோம். அனைவரும் பரிசு கொடுக்கிறார்கள் என்பதைத் தாண்டி ஆர்வமுடன் பிடுங்கி வந்துகொடுக்கின்றனர். இதுவரையிலும் ஏராளமான மரக்கன்றுகள் வந்துள்ளது. மொத்தமாக சேகரித்து அதைத் தீ வைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒருபுறம் மரங்கள் முழுவதையும் வெட்டி அகற்றுகிறோம். மறுபுறம் மரக்கன்றுகளை வளராமல் அகற்றி வருகிறோம். விரைவில் முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றனர்.