Published:Updated:

உலக யானைகள் தினம்: `ஆனெ வந்துருக்கு..!’ - புதுக்காடு பழங்குடிகளின் மொழி

புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை
புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை

வாழிடத்தையும் பிடிங்கிக்கொண்டு, வழித்தடத்தையும் அடைத்துக்கொண்டேம் நாம். அடிப்படையில் யானைகளை உணர்ந்த பழங்குடிகளே அவற்றின் உண்மைப் பாதுகாவலர்கள். அதற்கு ‌சிறந்த எடுத்துக்காட்டுதான் இந்தப் புதுக்காடு பழங்குடி கிராமம்.

பழங்குடி மக்களிடம் கொரோனா விழிப்புணர்வு குறித்த செய்தி சேகரிக்க குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோர வனத்தில் அமைந்துள்ள புதுக்காடு பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றிருந்தோம்.

புதுக்காடு பழங்குடி கிராமம்
புதுக்காடு பழங்குடி கிராமம்

அழகிய‌ மலைச்சரிவில் 50-க்கும் குறைவான வீடுகளுடன், ஊரைச் சுற்றி காபித் தோட்டங்களும், பலா உள்ளிட்ட இதர காட்டு மரங்களும் நிறைந்திருந்தன.

அடர்ந்த மரங்களின் நிழலால் நண்பகலும் குளிர்ந்த காலையைப் போலவே இருந்தது. பள்ளிகள் விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் ஊரைச் சுற்றி கூச்சலிட்டவாறு விளையாடி‌ மகிழுந்து கொண்டிருந்தனர்.

புதுக்காடு பழங்குடி கிராம
புதுக்காடு பழங்குடி கிராம

பழங்குடி பாட்டி ஒருவர் ஆடுகளை‌ மேய்ச்சலுக்கு ஓட்டிக்கொண்டு போனார். சிமென்ட் நடைபாதையில் பெண் ஒருவர் காபிக் கொட்டைகளை காயவைத்துக் கொண்டிருந்தார். அருகிலேயே தலைப்பாகை கட்டிய‌ ஆண்‌ ஒருவர் விறகைப் பிளந்துகொண்டிருந்தார்.

செவிலியர்கள் சிலர் இவர்களிடம் பேசி சளி, காய்ச்சல் உள்ளவர்கள் குறித்த விவரங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர்.

புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை
புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை

காபி செடிகளுக்கு அருகில் இருந்த வீட்டு வாசலில் அமர்ந்து பெண்‌ ஒருவர் சமையல் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்க, அருகில் இருந்த 5 வயதுச் சிறுவன் திடீரென காபிக் காட்டைப் பார்த்து சத்தம் போட்டான். ``வந்துட்டியா இங்கெல்லாம் குட்டிய கூட்டிக்கிட்டு வரக்கூடாது. நேத்து மாதிரியே போய்க்கோ" எனக் காபிக்காட்டைப் பார்த்து நடந்தான்.

`என்னடா தம்பி ?' எனக் கேட்டதற்கு ``ஆனெ வந்துருக்கு’’ என்றான்.

அவன்‌ கை நீட்டிய திசையில் எட்டிப்பார்த்தால், உடல் முழுக்க புழுதியுடன் சிறிய குட்டியைக் காலுக்கடியில் நிறுத்திக்கொண்டு‌ தாய் யானை ஒன்று நின்றது.

புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை
புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை

``கொம்பன் கீல பாறைக்கிட்ட இருக்கான், இப்ப வரமாட்டான். நைட்டுக்கு வெளிய வருவான்" என அந்த யானைக் கூட்டத்தைப் பற்றியும் அதன்‌ அன்றாடச் செயல்கள் குறித்தும்‌ நம்மிடம் விளக்கினான் பெரிய மனிதனைப் போல.

இதற்கிடையில் அந்தச் சிறுவனின் அம்மா, ``இது மட்டும்‌ இல்லெ. இன்னும் மூணு ஆனெ பின்னாடி வரும் பாருங்கோ குட்டியோட" எனச் சொல்லும்போதே மூன்று யானைகள் அடுத்தடுத்து மேட்டில் மெல்ல ஏறி வந்தன.

புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை
புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை

மீண்டும் அந்தச் சிறுவன் சத்தம் போட்டு, ஏதோ நாய்க்குட்டியை விரட்டுவதைப்போல ஒரு யானையை மேல்நோக்கி விரட்டியடித்தான். ஏன்? எனக்‌ கேட்டேன். ``இந்த ஆனெக்கு நடக்கத் தெரியாது, வீட்டு வழியா நடக்கப்பாக்கும் குறும்பு ஜாஸ்தி பண்ணும். அதான் அப்படிப் போகச் சொன்னேன்" என‌ ஆச்சர்ய பதில்களைச் சொன்னான்.

அதிகரிக்கும் யானை - மனித எதிர்கொள்ளலுக்கு தீர்வு என்ன? - ஒரு விரிவான அலசல்!

வீட்டிலிருந்து 10 அடி தொலைவில் 5 யானைகள் நின்றுகொண்டிருந்தன. பெரியவர்கள் யாரும்‌ யானைகளைக்‌ கண்டுகொள்ளாமல் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிறுவர், சிறுமியரும் சில பெண்கள் மட்டுமே ‌யானையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை
புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை

அதில், ஒரு பெண் சத்தமாகப் பேசத் தொடங்கினார். ``எதுக்கு வந்துருக்கனு தெரியும். மரத்தை ஒடைக்காம பழத்த மட்டும் சாப்புட்டு‌‌ ஒழுங்கா போகணும்" எனச் சொன்னதும் வீட்டின் பின் புறத்தில் காய்த்து தொங்கிய பலா மரத்தை நோக்கி யானைகள் மெல்ல அடியெடுத்து வைத்தன.

தும்பிக்கைக்கும் எட்டாத உயரத்தில் பழங்கள் இருப்பதை துழாவிப் பார்த்த, தாய் யானை ஒன்று மரத்தை நெற்றில் முட்டி லாகவமாக ஆட்டியது. அந்த அதிர்வில் சில பழங்கள் கீழே விழ காலால் மிதித்து குட்டிக்கு கொடுத்துவிட்டு தானும் உண்ணத் தொடங்கியது. நீண்ட நேரம் இந்தச் செயல் தொடர்ந்தது.

சாந்தி
சாந்தி

அதற்கிடையில் நம்மிடம் பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த சாந்தி, ``எனக்கு விவரம் தெரிஞ்சி எங்க ஊருக்கு 30 வருஷமா ஆனெ வருது. ஒரே ஒரு‌ முறை குடிபோதையில ராத்திரி நேரத்துல வந்த ஒருத்தர‌ அடிச்சிருக்கு. அவ்ளோதான் யாரையும் எந்தத் தொந்தரவும்‌ பண்ணாது. எங்களுக்கும் இங்க வர‌ எல்லா ஆனெயும் தெரியும். கொம்பன் மட்டும்‌ கொஞ்சம் கோவமா இருப்பான். மத்தப்படி ஒண்ணும்‌ இல்ல. அதுங்களுக்கும் எங்க எல்லாத்தையும்‌ நல்லா தெரியும். ஊருக்கு புதுசா யாரும் வந்தா அதுங்களுக்கு நல்லாத் தெரியும்" என்றார்.

அருகில் இருந்த மற்றொரு பெண் பேசுகையில், ``அதுங்க சாப்பிட்டது போக மீதிதான் எங்களுக்கு. பாக்கத்தான் பெரிய உசுரு. நம்ம கொஞ்சம் அதட்டுனாக்கூட‌ பயப்படும்‌. குழந்தைங்க மாதிரிதான். பழகிப்பாத்தா தெரியும். சோப்பு, சென்ட் வாசமெல்லமால் அதுக்கு புடிக்காது. எங்க ஊர்ல என்ன விசேஷம்னா, நைட்டு பகல்னு எப்போ, எத்தனை ஆனெங்க வந்தாலும் யாருமே விரட்ட மாட்டோம். நம்ம சொன்னா கேட்டுக்கும். நாங்க பேசுறதை புரிஞ்சிக்கும். இதுங்க இருக்கதால காட்டுக்குள்ள வேற யாரும் வர‌ மாட்டாங்க, எங்களுக்கு இதுங்கதான் பாதுகாப்பு" என்றார்.

புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை
புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை

இந்தப் பகுதிகளில் யானைகள் குறித்து பதிவு செய்துவரும் கனகராஜ், ``இந்தப் பகுதியில் யானை - மனித எதிர்கொள்ளல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானைகளிடம் பாசத்தோடு நடந்து கொள்கின்றனர். காட்டு யானைகளும்‌ இந்தப் பழங்குடிகளின் மொழியைக் கேட்டு செல்லும் அளவுக்கு இணக்கமாக ‌உறவு உள்ளது.

நகர் பகுதிகளில்தான் யானைகள் அட்டகாசம், ஊருக்குள் புகுந்த காட்டு யானை, பயிர்களைத் துவம்சம் செய்த யானைக்கூட்டம் என்ற‌ பழியும், மின்சாரம் பாய்ச்சியும், விஷம் வைத்தும் அதற்கும் மேலான வன்முறைகளால் கொல்லப்படுகின்றன.

புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை
புதுக்காடு பழங்குடி கிராமத்தில் யானை

வாழிடத்தையும் பிடிங்கிக்கொண்டு, வழித்தடத்தையும் அடைத்துக்கொண்டேம் நாம். அடிப்படையில் யானைகளை உணர்ந்த பழங்குடிகளே யானைகளின் உண்மைப் பாதுகாவலர்கள். அதற்கு ‌சிறந்து எடுத்துக்காட்டுதான் இந்தப் புதுக்காடு பழங்குடி கிராமம். பழங்குடிகளை காட்டைவிட்டு வெளியேற்ற துடிக்கும் அரசு எப்போது இதை உணரும் என்றே தெரியவில்லை" என முடிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு