`மோடியைத் தொடர்ந்து ரஜினி..!' - பந்திப்பூர் காட்டில் பியர் கிரில்ஸுடன் `Man vs Wild'

ஏற்கெனவே 'Wild Karnataka' என்ற டாக்குமென்டரிக்காகவும் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதுபோல் தொடர்ந்து வனப் பகுதிக்குள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது ஆரோக்கியமானதுதானா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேன் Vs வைல்டு (Man vs Wild) நிகழ்ச்சியின் சிறப்பு எபிஸோடுகளில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பங்கேற்பது வழக்கம். சென்ற ஆண்டு, பிரதமர் மோடியும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக, ஜனவரி 28 (இன்று) மற்றும் ஜனவரி 30 ஆகிய தேதிகளில் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 28-ம் தேதி ரஜினியும் 30-ம் தேதி பாலிவுட் நட்சத்திரமான அக்ஷய் குமாரும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
``சுல்தான் பட்டேரி மலைப்பகுதி, முல்லிகோள், மதூர் மற்றும் கல்கேரி மலைப்பகுதி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாவுக்கோ வனத்துறைப் பணிகளுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்படும்" என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 'Wild Karnataka' என்ற டாக்குமென்டரிக்காகவும் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. `இதுபோல் தொடர்ந்து வனப்பகுதிக்குள் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது ஆரோக்கியமானதுதானா?' என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.