Published:Updated:

70 ஏக்கர்... 1,000 குறுங்காடுகள்... 5 லட்சம் மரங்கள்! பசுமை படைத்த ராமநாதபுரம்!

சுற்றுச்சூழல்
பிரீமியம் ஸ்டோரி
News
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

வான் மழையை மட்டுமே நம்பியிருக்கும் வறட்சி மாவட்டம் ராமநாதபுரம். மீன்பிடித் தொழிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது விவசாயம். மிளகாய், பருத்தி, நெல் மற்றும் சிறுதானியங்களை வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு மழைநீரே ஆதாரம்.

ஒரு காலத்தில் பருவம் தவறாமல் பெய்த மழை, தற்போது முறையாகப் பெய்வதில்லை. இந்நிலையில், ஆண்டுதோறும் மழை பெறும் வகையில் 1,000 குறுங்காடுகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

பல வகையான மரங்கள் அடங்கிய குறுங்காடு
பல வகையான மரங்கள் அடங்கிய குறுங்காடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ராமநாதபுரம் மாவட்டத்தின் நிலப்பரப்பு 4,175 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் சுமார் 270 கி.மீ. தூரம் நீண்ட கடற்கரை. இந்தப் பகுதிகளில் அதிக மரங்களோ, காடுகளோ இல்லை. இதனால் ஆண்டுதோறும் தேவையான மழை முழுமையாகப் பெய்வதில்லை. திருச்சியிலிருந்து வரும் காவேரி நீர், ஊற்றுகளில் ஊறும் நிலத்தடி நீர் இரண்டும்தான் ஓரளவு குடிநீர்த் தேவையைத் தீர்த்து வருகின்றன. அதுவும் போதுமானதாக இல்லை என்பதால் குடிநீருக்குக் குடங்களுடன் அல்லாடும் நிலை. குடிநீருக்கே இந்நிலை என்றால் விவசாயத்திற்குத் தேவைப்படும் தண்ணீருக்கு எங்கே செல்வது?

ராமநாதபுரத்தின் நீண்டநாள் பிரச்னையான இதற்குத் தீர்வு காணும் வகையில் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ‘குறுங்காடுகள் திட்டம்.’ ஊராட்சிகளில் உள்ள பயன்பாடற்ற நிலங்களைப் பண்படுத்தி, ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒன்று முதல் 2 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் குறுங்காடுகள் உருவாக்கப் பட்டுள்ளன. மாவட்டத்தில் பசுமைச் சூழலை அதிகரித்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், வறட்சியைப் போக்க வான் மழையினைச் சராசரியாகப் பெய்ய உதவும் வகையிலும், இந்தக் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 30 கோடி மதிப்பீட்டில் 1,000 குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குறுங்காடுகளில் வேம்பு, வாகை, புங்கன், நாட்டுப் பூவரசு, புளி போன்றவற்றுடன் கொய்யா, சிறிய நெல்லி, பெரிய நெல்லி, சீத்தா போன்ற பழ மரங்கள் எனச் சுமார் 5 லட்சம் கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ளன. கடந்த ஆண்டுப் பெய்த மழையின் உதவியால் கன்றுகள் நடப்பட்ட 6 மாதங்களுக்குள்ளாகவே, ஒவ்வொரு கன்றும் 8 முதல் 9 அடிவரை நன்கு வளர்ந்து மரங்களாகி வருகின்றன.

குறுங்காட்டைப் பராமரிக்கும் ஊரக வேலைவாய்ப்புப் பணியாளர்கள்
குறுங்காட்டைப் பராமரிக்கும் ஊரக வேலைவாய்ப்புப் பணியாளர்கள்

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் குறுங்காடு வளர்ப்புத் திட்டத்தில் 18,000 மனித வேலை நாள்களில், சுமார் 15,000 பெண்கள் பணியாற்றியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் கருவேலமரங்கள் நிறைந்த 58 ஏக்கர் நிலம் மற்றும் குப்பைகள், கழிவு நீர் நிறைந்த 12 ஏக்கர் நிலப்பகுதிகள் நிலச்சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பசுமைச் சூழலை ஏற்படுத்தும் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் சாதனை நிகழ்வுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. உலகச் சாதனை நிகழ்வுகளை அங்கீகரிக்கும் எலைட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, சீனியர் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ‘ஆயிரம் குறுங்காடுகள்’ திட்டத்தை ஆய்வு செய்து உலகச் சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளன.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்

உலகச் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள குறுங்காடுகள் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், “நிலங்களைப் பண்படுத்தி இயற்கை உரத்தினைக் கொண்டு இந்தக் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 வருடத்தில் இவை பெரும் காடுகளாக மாறும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமைச் சூழல் உருவாகவும், தேவையான மழைப் பொழியவும் இந்தக் காடுகள் உதவும். இன்னும் 20 ஆண்டுகளில் சுமார் 11.50 லட்சம் டன் சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்கும். விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுக் கூடுதலாக 3 முதல் 5 சதவிகித நிலங்களில் குறுங்காடுகள் திட்டம்மூலம் சுமார் 15 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ச்சிக்குரிய மாவட்டங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ராமநாதபுரம் மேலும் வளர்ச்சியை எட்டும்’’ என்றார்.