Published:Updated:

`ரூ.30-க்கு ஒரு லிட்டர்; 80 கி.மீ. பயணிக்கலாம்!' - ராமர் பிள்ளை சொல்லும் மூலிகைப் பெட்ரோல் கணக்கு

ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை

``கழிவுநீரின் மூலம் இதை உற்பத்தி செய்து வருகிறோம். இந்த பெட்ரோல் மூலம் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஒரு லிட்டருக்கு, இரண்டு சக்கர வாகனங்கள் 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யலாம்” என ராமர் பிள்ளை கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. ஐக்கிய நாடுகள் சபை, மத்திய அரசின் கூட்டு திட்டத்தில் பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக தன்னுடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலை பதிவு செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு மாற்று எரிபொருளை அறிமுகம் செய்ததுடன், கடந்த ஜனவரி 29-ம் தேதி முதல் சென்னையில் மூலிகைப் பெட்ரோல் விற்பனையை துவக்கினார்.

இந்நிலையில், வரும் 27-ம் தேதி விருதுநகர், தேனி, தென்காசி மற்றும் மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் விற்பனை செய்திட, விற்பனை முகவர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ராஜபாளையத்தில் நடந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராமர் பிள்ளை பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை

அப்போது பேசிய அவர், ``மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாடு சபைகளின் கீழ் பல திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றான பயோ பீயூல் திட்டத்தை நான் கையில் எடுத்து பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளைத் தயார் செய்துள்ளேன்.

சென்னையில் ஊரப்பாக்கம் பகுதியில் நாள்தோறும் ஒரு லிட்டர் ரூ.30 வீதம் 150 லிட்டர் விநியோகம் செய்து வருகிறோம். இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக மதுரை, தேனி, தென்காசி மறும் விருதுநகர் மாவட்டங்களில் விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தி வருகிற 27-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த மூலிகைப் பெட்ரோல் உற்பத்திக்கு யாரும் தடை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். அந்த உத்தரவின் படி, கழிவுநீரின் மூலம் இதை உற்பத்தி செய்து வருகிறோம். இந்த பெட்ரோல் மூலம் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஒரு லிட்டருக்கு, இரண்டு சக்கர வாகனங்கள் 80 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யலாம்.

அதேபோல் புகையின் அளவும் குறைவதால் மாசும் குறையும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 15,000 லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் பெரிய தொழிற்சாலையை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் 30-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும். நான் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.20, டீசல் ரூ.24க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன்.

 ராமர் பிள்ளை
ராமர் பிள்ளை

கடந்த 21 வருடங்களாக பல திட்டங்களை முயற்சி செய்து, சுமார் 500 கோடி அளவில் உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு மூலிகைகள் தயார் நிலையில் உள்ளது. இந்த மூலிகைப் பெட்ரோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலிகைகளை வளர்க்கவும் விவசாயம் செய்வதற்கும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், இந்த மூலிகைப் பெட்ரோலுக்கு காப்புரிமை தற்போது வரை கிடைக்கவில்லை. காப்புரிமைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு