Published:Updated:

நீலகிரி சீகூர் பீடபூமியில் தென்பட்ட அரிதான ராஜாளி... என்ன சிறப்பு?

செந்தலை அல்லது ராஜாளி கழுகு
செந்தலை அல்லது ராஜாளி கழுகு

அரிதிலும் அரிதான, அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனமான கிங் வல்ச்சர் எனப்படும் ராஜாளி கழுகுகளைக் கூடுகளுடன் முதல்முறையாக சீகூர் பீடபூமியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஆய்வாளர்களிடையே நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகில் தோன்றிய பழைமையான பறவையினங்களில் ஒன்றாகப் பிணந்தின்னி கழுகுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். தென்னிந்தியக் காடுகளில் செந்தலை, வெண் முதுகு, கருங்கழுத்து, மஞ்சள் முகம் ஆகிய நான்கு வகை பாறு கழுகுகள் வாழ்கின்றன. சொற்ப அளவில் உள்ள இவற்றின் கடைசிப் புகலிடமாகத் தற்போது சீகூர் பீடபூமியே [sigur plateau] விளங்கிவருகிறது.

செந்தலை அல்லது ராஜாளி கழுகு
செந்தலை அல்லது ராஜாளி கழுகு

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியக் காடுகளில் மிக எளிதாகக் காண முடிந்த பாறு கழுகுகள், இன்றைக்கு விரல்விட்டு எண்ணும் அளவிலேயே வாழ்கின்றன‌ என்பது அதிர்ச்சியளிக்கும் வேதனையான உண்மை. காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும்‌ ஏன், மனித குலத்துக்குமே பேருதவியாக இருந்துவந்த இந்த பாறு கழுகுகள், காடுகளின் நோய்க் காப்பாளன் அல்லது இயற்கைத் தூய்மையாளன் என அழைக்கப்படுகின்றன.

செந்தலை அல்லது ராஜாளி என அழைக்கப்படும் red headed vulture 30-க்கும் குறைவாகவே இருப்பதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கானுயிர் புகைப்படக் கலைஞரும் செயற்பாட்டாளருமான சந்தானராமன் என்பவர் சீகூர் பீடபூமி பகுதியில் கூடு அமைத்து வாழும் 3 ராஜாளிகளைப் புகைப்படம் எடுத்துள்ளார். இது ஒட்டுமொத்த பாறு கழுகு ஆய்வாளர்களையும் நம்பிக்கையடையச் செய்துள்ளது.

செந்தலை அல்லது ராஜாளி கழுகு
செந்தலை அல்லது ராஜாளி கழுகு

நம்பிக்கை அளிக்கும் இந்தப் பதிவு குறித்து நம்மிடம் பேசிய கானுயிர் ஆர்வலர் சந்தானராமன், "சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய பாறு கழுகுகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ராஜாளி பருந்துகளின் எண்ணிக்கை இன்னும் மோசமாக உள்ளது. வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் சிவப்புப் பட்டியலில் இருக்கும் இவற்றைக் கூடுகளுடன் சீகூர் பீடபூமியில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு ராஜாளிகளைப் பார்த்தோம். அதன் அருகிலேயே இளம் ராஜாளி கழுகு ஒன்றையும் பார்க்க முடிந்தது. அப்படியெனில், பல இடர்பாடுகளையும் கடந்து இவை மீண்டு வருகின்றன. இதை பாசிட்டிவ் அறிகுறியாகவே பார்க்கிறோம்.

செந்தலை அல்லது ராஜாளி கழுகு
செந்தலை அல்லது ராஜாளி கழுகு

ஏனெனில், இவை கூடமைத்து இனப்பெருக்கம் செய்ய ஏற்ற சூழல் நிலவுகிறது என்பதன் வெளிப்பாடாகவே இது உள்ளது. இந்த இடங்களில் எந்தவித இடையூறும் இல்லாமல் சாதகமான சூழல் தொடர்ந்தால் அழிவிலிருந்து ராஜாளிகள் தப்பும்" என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு