Published:Updated:

கோத்தகிரி பகுதியில் கண்டறியப்பட்ட அரியவகை வண்ணத்துப்பூச்சி இனங்கள்! - மகிழ்ச்சியில் ஆய்வாளர்கள்

ரா.சதீஸ்குமார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் டார்க் பைய்ரட் [Dark Pierrot], பாயின்ட்டட் லைன்ப்ளூ [Pointed Line blue] ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் 1978-ம் ஆண்டுக்குப் பின் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டார்க் பைய்ரட் [Dark Pierrot] வண்ணத்துப்பூச்சி.
டார்க் பைய்ரட் [Dark Pierrot] வண்ணத்துப்பூச்சி.

ஆசிய பல்லுயிர்ச் சூழல் மண்டலங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், பல்வேறு வகையான அரிய விலங்கினங்கள், பறவைகள், தாவரங்களின் வாழ்விடமாக இருக்கிறது. மேலும், நீலகிரிக்கே உரித்தான நீலகிரியை மட்டுமே வாழ்விடமாகக் கொண்ட தவளை இனங்கள், பூச்சியினங்கள், அரிய வகை வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவையும் இப்பகுதியில் காணப்படுகின்றன.

பாயின்ட்டட் லைன்ப்ளூ [Pointed Lineblue]
பாயின்ட்டட் லைன்ப்ளூ [Pointed Lineblue]

மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் சுமார் 330 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி நீலகிரி மாவட்டத்தில் 198 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் குஞ்சப்பனை, பர்லியார், கல்லாறு, முதுமலை, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவு காணப்படுகின்றன.

காடழிப்பு, காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவை உலக அளவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துவருகின்றனர். இது மட்டும் இல்லாது உலகில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூட வண்ணத்துப்பூச்சியை நேரடியாகப் பாதிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் வாழிடங்கள் குறைந்துவருகின்றன. இந்தநிலையில் கோத்தகிரி சரிவுப் பகுதிகளில் 1978-ம் ஆண்டுக்குப் பிறகு, இரண்டு அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாயிண்ட்டட் லைன்ப்ளூ [Pointed Lineblue]
பாயிண்ட்டட் லைன்ப்ளூ [Pointed Lineblue]

இது குறித்து வண்ணத்துப்பூச்சி ஆய்வில் ஈடுபட்டுவரும் மனோஜ் கூறுகையில், ``காட்டில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் காணப்பட்டால் வனப்பகுதிகள் செழுமையாக உள்ளது என்பது பொருள். வனவளம் காரணமாக மழைப்பொழிவு சீராக இருக்கும். இதனால் சூழலியல் சங்கிலியில் வண்ணத்துப்பூச்சி முக்கிய இடம் வகிக்கிறது. மழைப்பொழிவுக்கு முந்தைய பிப்ரவரி மாதங்களிலும், வடகிழக்குப் பருவமழைக்கு முந்தைய அக்டோபரிலும் வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்கின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் காணப்படும் Dark Pierrot [Tarucus ananda], Pointed Lineblue [Lonolyce helicon]. இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் கோத்தகிரி சரிவுப் பகுதிகளில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டது. இது ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது. இந்தவகை வண்ணத்துபூச்சிகள் வாழ ஏதுவான சூழல் நிலவுவதாகத் தெரிகிறது” என்றார்.