Published:Updated:

ஆழ்கடல் நடுவே சிட்டிகை உப்பாய் ஒரு மலையாளப் பயணம்! - வாசகர் பகிர்வு #MyVikatan 

கேரளா
கேரளா

`தெய்வத்திண்டே ஸ்வந்தம் நாடான' (Gods Own Country)கேரள மண்ணில் நுழைந்த மறு நிமிடமே !..நாம் இயற்கையின் பெருமாற்றத்தைச் சுற்றுச்சூழலில் சட்டென உணரலாம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

யானை, கடல், மலை, அருவி, குழந்தை இவையாவும் நாடு, மொழி, இனம், மதம், வயது பேதம் தாண்டி அனைவராலும் விரும்பப்படும் இயற்கை பொக்கிஷங்கள். என்னதான் இன்றைய தொழில்நுட்பம் நம் உள்ளங்கையில் இவ்வுலகை அடக்க முற்பட்டாலும் அதையும் கடந்து வழிந்து ஓடும் ரேகைகளாக வேர்விட்டு நம்மை பிரமிப்பூட்டும் அதியசங்கள் ஏராளம்தான்.

Representational Image
Representational Image
Credits : Pixabay

இந்தப் பட்டியலில் யானையையும் கடலையும் மிக அருகே சுவாசிக்கும் ஓர் எதிர்பாராத அனுபவம் சமீபத்தில் கிட்டியது. யானையும் கடலும் என்றவுடன் கடலில், யானையோடு படகில் பயணம் செய்யும் `LIFE OF PI' part -II என்று எண்ண வேண்டாம். இது தனித்தனியே அதனதன் தன்மையில் நாளொரு விதமாகச் சேகரித்த நினைவு நாடாக்கள். இங்கே, இக்கட்டுரையில் என் உள்ளங்கையில் ஏந்திய அந்தக் கடலின் சிறுதுளிகள் மட்டும் உங்களுக்காக !..

சென்ற வாரம் முழுவதும் எவ்வித திட்டமிடலுமின்றி கேரளா செல்லும்படி ஆனது. `தெய்வத்திண்டே ஸ்வந்தம் நாடான' (Gods Own Country) கேரள மண்ணில் நுழைந்த மறு நிமிடமே !..நாம் இயற்கையின் பெருமாற்றத்தைச் சுற்றுச்சூழலில் சட்டென உணரலாம். அது இயற்கையும் மனிதனும் சற்றே அதிக புரிதலோடு கைகோத்து நடைபோடும் தேசம். திரும்பிய திசையெல்லாம் தென்னையும் கம்யூனிசமும் காற்றோடு இசைந்து பச்சையும் சிவப்புமாய் யதார்த்த வாழ்க்கை வாழும் மாந்தர்கள் நிறைந்த அம்மாநிலத்தின் `மலபார் கடலோர' நகரின் ஓரத்தில் இக்கட்டுரை தொடங்குகிறது.

Kerala
Kerala

பல கோடி ஆண்டுகளாய் ஆதவனை தன் மடியில் முடிந்து கொள்ளும் அரபிக்கடல் கரையோரமாக ஜரிகையிட்ட போர்த்துக்கீசிய காலனியின் மிச்சங்கள் அங்கங்கே எட்டிப் பார்க்கும் கோழிக்கோட்டில் சில மீனவ சேட்டா நண்பர்களோடு அரபிக் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றேன். சிறிய நாட்டுப் படகில் கடலில் செல்வதில் உள்ள ஆபத்துகளைப் பலர் பயமுறுத்தலோடு அறிவுறுத்தியதால் ஏற்பட்ட சலனத்தையும் கடந்து கடலின் ஆழத்தைக் கையருகே காணப்போகும் காதலின் உந்துதலில் தள்ளப்பட்டு தள்ளாட்டத்தோடு, தத்தளிக்கும் படகில் 'BeyPore' மீன்பிடி துறைமுகம் அருகே ஏறி அமர்ந்தபோது அந்தி சாயும் நேரம் அருகில்தான் இருந்தது.

சில ஏற்பாடுகளுக்குப் பிறகு ஒருவாறாக நங்கூரம் ஏற்றப்பட்டு எனது பயணம் இனிதே தொடங்கியது. மீன்பிடித் துறை என்பது அலைகளற்ற கடலிலிருந்து சற்றே ஒதுக்கப்பட்ட `Back Water' யார்டு ஆகும். அனைத்துச் சிறிய மற்றும் நடுத்தர மீன்பிடிப் படகுகளும் நித்திரைகொள்ளும் Docking / Parking தளமும் அதுவே. அங்கிருந்து தொடங்கிய பயணத்தில் வழிநெடுகப் படகுகளின் கூட்டமும் அதன்மேலமர்ந்த கடற்பறவைகளான Tern, Egret, Heron, Darter, Eagle, Seagull போன்றனவும் கூட்டங்கூட்டமாக காணக் கிடைத்தன. பெரும்பாலும் இவையாவும் மனிதன் மாற்றிய எக்கோ சிஸ்டத்தின் மாற்றத்திற்கு உட்பட்டு மிச்சங்களையும், எச்சங்களையும் உண்டு வாழும் பாவப்பட்ட ஜீவன்களே.

Representational Image
Representational Image

படகின் திசையையும், Motor -ன் விசையையும் கட்டுப்படுத்த ஒருவர் பின்புறத்திலும், வலையிட்டு மீன்பிடிக்க இருவரும், உதவிக்கு ஒருவரும், வேடிக்கை பார்த்து கேள்விகேட்டு தொல்லைதர நானுமாக ஐந்துபேர் சென்ற படகு 'வல்லம்' என்ற நாடன் வகையைச் சேர்ந்தது. இருபுறமும் செயற்கையாக அமைக்கப்பட்ட கல் அரண்களைக் கரையாகக்கொண்டு இந்த 'Back Water' கேணல் பாதை அமைக்கப்பட்டிருந்தது.

இடது புறம் பெய்பூர் கலங்கரை விளக்கமும், வலப்புரம் புளிமூடு கடற்கரை கற்திட்டும், அதில் தூண்டிலும் கையுமாய் அங்கங்கே அமர்ந்திருக்கும் மனிதர்களுமாய் அந்தப் பாதை சென்றது. அதன் வழியே `கடலின் முகத்துவாரம்' நோக்கி எங்கள் படகு வேகம் பிடிக்கத் தொடங்கியது. அதுவரை பெரிய ஆட்டமில்லாமல் சென்ற படகு முகத்துவாரத்தைக் கடந்து கடலைத் தொட்டு முத்தமிட்ட மறுநொடியே `ராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வீடு வந்த வீரனின் செல்ல மகளாக’ மாறி கடற்தந்தையாய்த் தாவிக்குதித்துக் கட்டியணைத்து குதூகலித்தது. அந்தக் கொண்டாட்டத்தில் கடலுக்கும் படகுக்குமான நலம் விசாரிப்புகள் இடைவேளையின்றி பல Nautical மைல் தொடர்ந்தது.

Kerala
Kerala

காதலையும், curiosity - யும் தாண்டி சிறிய படகில் கடலின் ஆழத்தை நோக்கிச் செல்வதில் சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று மனதும், உடம்பும் உணர்ந்த உப்பான தருணங்கள் அவை. வாழும் காலம் முழுக்க திடபூமியின் மேலே சொகுசாய் நேரம் கழித்த மனிதர்களுக்கு நீர்மேலே நெடுந்தூரம் சென்றால் மட்டுமே மண்ணின் அருமையும், நேசமும், அதுதரும் பாதுகாப்பும் புரியும். சிறிய படகில் கடற்பயணம் என்பதில் திடபூமி அல்லாது சதா சர்வகாலமும் நீரில் தத்தளிக்கும் படகின் பலகையே நமக்கான தரை.

ஆடும் தரை, ஆட்டுவிக்கும் திரை. அதில் நாமெல்லாம் இயற்கையின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் பொம்மலாட்ட பொம்மைகளே !..அதே போல திறந்த வானமே கூரை, எந்நேரமும் கொட்டப்படலாம் இடியாக, மின்னலாக, பெருமழையாக !.. ஆக கால்கீழேயும், கையைச்சுற்றியும் கடல், முடிவுகளற்ற கவிழ்த்த மாய கொட்டாங்குச்சியாக வானம் என பிரமாண்டத்தின் நடுவே நாம் தத்தளிக்கும் ஒற்றை எறும்பாக உணரப்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.

Representational Image
Representational Image

இவையனைத்தையும் கடந்து சந்தேகமில்லாமல் கடல் சத்தங்களற்ற ஒரு பேரழகுதான். பேரலைகள் கடந்து போகும் நிமிடங்கள் - எல்லாத்திசையும் நீர் உள்வந்து நம்மை நலம் விசாரிக்கும் சமயங்கள், இவையாவும் இயற்கை நம்மோடு நேராகப் பேசிச்சிரிக்கும் விசித்திர தருணங்கள். இவ்வாறு சுத்தமான உப்புக்காற்றோடு பல்வேறுபட்ட அனுபவங்களையும் உள்ளிழுத்தவாறு சிற்சில கடல் மைல்கள் கடந்திருந்தன. மீன்பிடிக்கச் செல்லும் சிறுமீனவர்கள் முதல் சிலமணி நேரம், மீன்கள் அதிகம் இருக்கும் பகுதியைத் தேடியலைவார்கள். பெரும்பாலும், இவை மூத்த அல்லது அனுபவம் மிக்க மீனவர்களால் கடல் நீரையும், அவற்றின் ஓட்டத்தையும், அலைகளையும், காற்றின் திசையையும், கடற் பறவைகளையும் கொண்டு கணிக்கப்படும்  'Trial & Error' கணக்கே.

கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் வாணிபம் பொருட்டு உலகத்தின் பல்வேறு கண்டங்களிலிருந்து வந்து சென்ற மக்களால் பயன்படுத்தப்பட்ட 'இந்தியாவின் Spice Route' என்றழைக்கப்படும் மிகத்தொன்மையான கடல்பாதை இது. அந்த சரித்திர பாதையில் கடலில் கரைக்கப்பட்ட ஒரு சிட்டிகை உப்பாக மீன்களைத் தேடி சுற்றிக்கொண்டிருந்தோம். அப்பொழுது வலது புறத்தில் தூரத்தே 'Vasco da gama' 14-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இறங்கிய 'காப்பாடு' துறைமுகத்தையும் காண முடிந்தது. அதே சமயம், இடது பக்கத்தில் தூரத்தே கடலும், வானமும் கட்டிக்கொள்ளும் அடிவானம் (Horizon) என்ற மாய முடிவிலியில் நெருப்புப் பந்தாக வெகுவேகமாக விழுந்து கொண்டிருந்தான் கதிரவன்.

Representational Image
Representational Image

மீன்களுக்கேற்ப வலைகளும் சிறிது, பெரிது, நீளம், தன்மை எனப்பல காரணிக்குட்பட்டு வகைவகையாகப் பிரிக்கப்படுகிறது (விலையோ நூறு முதல் சில லட்சங்கள் வரை நீள்கிறது). நாங்கள் அன்று எடுத்துச் சென்றது சிறிய மீன்வகைகளைப் பிடிக்கும் ஒரு கீ.மீ நீள வலையாகும். மீன் பிடித்த பிறகு மீன்கள் வகைவாரியாக அயிலா, மத்தி, அய்க்கோரா, கல்லேட்டா, கோழி என்று பிரிக்கப்பட்டு விற்பனைக்குச் செல்லும். சில மணி நேரங்களையும் தூரங்களையும் விழுங்கிப் பல முயற்சிகளுக்குப் பிறகு ஓர் இடத்தைத் தேர்வுசெய்து எங்கள் வலையை முழுவதுமாக கடலின் ஓட்டத்தில், அலைகளின் நடுவே மிதக்க விட்டோம். பிறகு, காற்று மற்றும் அலைகளின் உந்துதலுக்கு உட்பட்டு ஊஞ்சலாடிய படகோடு நீண்ட காத்திருப்பு இருட்டினூடே தொடங்கியது.

நன்றாக இருட்டியிருந்த அந்த காரிருள் பிரமாண்டத்தில் சிறிய மின்மினிப் பூச்சியாய் அலைகளின் நடுவே தனியே தள்ளாடிக்கொண்டிருந்தது எங்கள் படகு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடலின் ஊடே கண்சிமிட்டும் வெளிச்சப்புள்ளிகள் வலைகளின் மேல் உள்ள sensor லைட்டுகள் என்பது அப்போதுதான் விளங்கியது. இவ்வெளிச்சப்புள்ளிகளை , நாம் கடற்கரையின் மணலிலிருந்து கடலைக் காதலோடு பார்க்கும் இரவு தருணங்களில் தூரத்தே கண்டிருப்போம்.

Representational Image
Representational Image

பொதுவாக, தினந்தினம் மீன்பிடிக்கச் செல்லும் சிறிய மீனவர்கள் சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் தோதான நேரமாகக் கருதி வலைவிரிக்கக் கடலுக்குச் செல்கிறார்கள். அந்தச் சமயங்களில் நிகழும் ஒளி வேறுபாடுகளின் குழப்பத்தில் மயங்கித் திரியும் மீன்களே கூட்டமாக வலையில் சிக்கிக்கொள்கின்றன.

`மீன்காரனிண்டே சத்ரு' என்று செல்லபயத்தோடு (!??) அழைக்கப்படும் டால்பின் இனத்தைச் சேர்ந்த பழுப்புநிற  'Humpback Dolphin' மீன்கள் இரண்டு உலாவுவதைக் கணப்பொழுது கண்டேன். சிறிது நேரத்தில் மேலும் ஒரு கூட்டாளி மற்றொரு புறமும் சூழ்ந்துகொண்டு படகை வட்டமிடத் தொடங்கியது. சூழ்நிலையின் கனத்தை உணர்ந்த மீனவர்கள் பதற்றத்துடன் சரசரவென்று வலையை வேகமாக உள்ளிழுத்து படகை பின்னே வலையின் தொடக்கத்தை நோக்கிச் செலுத்தினர்.

Representational Image
Representational Image

அதுசரி அதிபுத்திசாலியும் அழகானதுமான டால்பின்-ஐ கண்டு எதற்காக அவர்கள் அச்சப்பட வேண்டும் என்று அவர்களைக் கேட்டேன். `வலை முழுவதும் கடித்து முறித்து அதிலுள்ள மீனுகளயெல்லாம் கழித்துப் போவும், அதினு ஒண்ணுனேயும் பயமில்லா, அதினால் ஞங்ளூடே ஜீவிதத்தில் பல திவசங்கள் கஷ்டபாடுகள் அனுபவிக்கவேண்டி வருன்னு' என்று டால்பின் மீனவனின் எதிரியான காரணத்தை கூறினார்கள்.

வலையை முழுவதும் உள்ளிழுத்த பின்னர் காற்றையும் அலைகளையும் கிழித்துக்கொண்டு கருத்த கடலினுடே வெண்சிறகை வரைந்தவாறு 'பெய்பூர்' கலங்கரை விளக்கின் ஒளியை நோக்கி எங்களது படகு திரும்பிச் சிறகடிக்கத் தொங்கியது.

இப்படியாக, எனது அரபிக்கடல் மீன்பிடி அனுபவம் ஓர் அரை நாள் நீடித்து நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது.

Representational Image
Representational Image

கடல் !.. அது முற்றிலும் வேறு ஓர் உலகம்.. உப்புக்காற்று, மீன் வாசம், மழை, நொடிக்கொரு வானிலை, எல்லைகளற்ற வானம், பேரமைதியான ஆழங்கள் என அதன் கட்டமைப்புகளும் வேறுபட்டவையே !.. இங்கே கடற்பறவை, கரையோர பூனை, கழுகு, காகம், பெருமீன், மனிதன் என அனைவரும் தேடித்தவமிருப்பது மீன்களுக்காக மட்டுமே !.. மகாசமுத்திரத்தின் எல்லைகளற்ற கருணையில் காலம் என்ற சிறு படகில் தத்தளித்துப்  பயணிக்கும் நாம் அனைவருமே ஒரு மிகச்சிறிய மீன்கொத்திப் பறவைதான் !

-பிரசன்னா சண்முகம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு