Published:Updated:

மெட்ரோவா மரங்களா..? - காமன் மேனின் மனக்குரல் #MyVikatan

Bangalore
Bangalore

இதைக்கண்டு வருந்துவதா இல்லை, ஒருநாளைக்கு 4.33 லட்சம் பயணிகள் நேரத்துக்கு பயணிப்பார்கள் அதன் விலைதான் இந்த மரங்கள் என்று கடந்து செல்வதா என அறியாமல் மனம் உள்ளுக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்ற வாரத்தில் வெளிவந்த ஆங்கில நாளிதழ் ஒன்றின் செய்தி எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அதன் அடிப்படையில் தேடிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அந்தச் செய்தி இதுதான், "பெங்களூரு கே.ஆர்.புரத்திலிருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ பாதையால் 1,961 மரங்களை இழக்க வேண்டிவரும் என்றும் 3,541 மரங்கள் பாதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிடும் வரைவறிக்கையில் (EIA Draft ) குறிப்பிடப்பட்டுள்ளது." இதைக்கண்டு வருந்துவதா இல்லை, ஒருநாளைக்கு `4.33 லட்சம்' பயணிகள் நேரத்துக்குப் பயணிப்பார்கள் அதன் விலைதான் இந்த மரங்கள் என்று கடந்து செல்வதா என அறியாமல் மனம் உள்ளுக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது.

Industry
Industry
Pixabay

முதலில் இயற்கையின் பக்கம் நிற்கும் என் மனக்குரல் ஒலிக்கத் தொடங்கியது.

இன்று நடப்பதெல்லாம் `ஆன் லைன் கிளாஸ்'. அன்றோ `ஆல மரத்தடிதான் கிளாஸ்'. அதனடியில் படித்து ஞானம் பெற்றுள்ளேன்; அதன் கிளையில் விளையாடியிருக்கிறேன்; இலையில் பசியாறியுள்ளேன்; பிள்ளையாய் இருக்கும்போது அதன் கிளையில் ஊஞ்சல் கட்டி உறங்கி இருக்கிறேன். இப்போது அதற்கு ஒரு தீங்கென்றால் அதற்காக வாதாடாமல் உறங்கியா கிடப்பேன்?

மரம். இந்தப் பூமிப்பந்தில் 4.1 பில்லியன் ஹெக்டரில் 3.1 டிரில்லியன் (3,10,000 கோடி) மரங்கள் இருக்கிறதாம். அதில் அரை பங்குக்கும் மேல் அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், கனடா ஆகிய நாடுகளில் மட்டும் இருக்கிறதாம். இந்தியாவில் மட்டும், உலக காடுகளின் மொத்த பரப்பில் 1.8 சதவிகிதம், அதாவது 72 மில்லியன் ஹெக்டர் அளவு காடு இருக்கிறது.

உலக காடுகளில் 16 மில்லியன் ஹெக்டர் அளவில் (தோராயமாக 15 கோடி) மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெட்டிச் சாய்க்கப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. காட்டுத் தீ, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களைத் தாண்டி, வளர்ச்சி, வறுமை போன்ற காரணங்களைக் காட்டி காடுகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

Forest
Forest
Karthikeyan.K

இதனால என்ன பிரச்னை? சொல்கிறேன், பிரச்னை காட்டுக்கு மட்டும் இல்லை. காட்டில் 30 லட்சத்துக்கு மேல் உயிரினங்கள் மற்றும் பூச்சியினங்கள் வாழ்கின்றன. அதில் பல இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண்துறை இவ்விவரங்களை வெளியிட்டிருக்கிறது.

காட்டிற்கு பிரச்னை என்றால், மனிதர்களுக்கு இல்லாமலா?

காட்டில் இருக்கும் மரம் மட்டுமல்ல, ரோட்டில், வீட்டில் என எல்லா இடங்களிலும் மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்றன. உலகில் சுமார் 70 லட்சம் மக்கள் ஆண்டுதோறும் சுவாச பிரச்னையால் இறந்துபோகிறார்கள்.

இந்த சுவாச பிரச்னை காற்று மாசினால் ஏற்படுகிறதாம். சுவாசிப்பதற்கான நல்ல காற்றை நமக்கு தரும் மரங்களை இழந்ததால் வந்த வினை பயன் அது. ஒரு மரத்துக்கு 2 லட்சம் இலைகளிலிருந்து 5 லட்சம் இலைகள் வரை உண்டு. அந்த ஒவ்வொரு இலையும் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு நல்ல வளர்ந்த மரத்திலிருந்து 10 பேர் சுவாசிக்கும் அளவு ஆக்சிஜன் கிடைக்கும்.

Delhi
Delhi
Pixabay

உலகத்திலேயே அதிக மாசுள்ள நகரங்களில் ஒன்றாக இருக்கும் டெல்லியில் மட்டும், கடந்த 10 வருடங்களில் 78,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மெட்ரோ, பாலங்கள், நிறுவனங்கள், பெரும் குடியிருப்புகள் என ஒரு நகரம் வளர, அது ஆயிரக்கணக்கான மரங்களைக் காவு கொடுக்கிறது. மரமும் காற்றும் முக்கியம்தான் ஆனால், வளர்ச்சியும் முக்கியம் அல்லவா?

வளர்ச்சியின் பக்கம் இருக்கும் வாதங்களை முன்வைக்கத் தொடங்கியது என் மனக்குரல்...

1960-களில் வளரும் நாடுகளின் மக்கள் தொகையில் 22% சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே நகர்ப்புறங்களில் வசித்தனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48.45% மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சில அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது இயற்கை பாதிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையுடன்கூடிய வளர்ச்சியை அடைவதுதான் இனி லட்சியமாக முடியுமே தவிர, வளர்ச்சி வேண்டாமென மறுப்பதற்கில்லை.

Parambikulam forest
Parambikulam forest
Karthikeyan.K

2019-ம் ஆண்டு இந்தியாவில் 7,000 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காடுகள் அதிகரித்துள்ளதாக (ISFR) காடுகள் கணக்கெடுப்போடு சொல்கிறது. இந்தக் கணக்கெடுப்பு ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கும் நடத்தப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகிறது.

2019-ம் ஆண்டு காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில், இந்திய பிரதமர் நிலைப்படுத்தப்பட்ட வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அதில், "இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 2022-ம் ஆண்டுக்குள் 175ஜிகா வாட்ஸ் ஆகவும் படிப்படியாக 450 ஜிகா வாட்ஸை எட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உலகின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை தரமான எரிபொருள்களை வாங்க முதலீடு செய்யும். இந்நிலையில், சோலார் திட்டங்களுக்கும் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமையும் பல விதங்களில் இந்தியாவுக்கு பயனளிக்கும். அதன் காரணமாகவே அரசு இந்தத் திட்டங்களுக்கு பல மானியங்களை அறிவித்துள்ளது. 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, 2 டிகிரி வெப்பத்தை குறைக்கவும் இந்தியா முயன்று வருகிறது.

Solar panels
Solar panels
Pixabay

பிரான்ஸ் உடன் சர்வதேச சோலார் எரிசக்தி கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இயற்கைக்கு ஊறுவிளைவிக்கும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பல இடங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இப்படி, வளர்ச்சிக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுக்குப் பின்னும், இயற்கையைப் பாதுகாப்பதற்கான முயற்சியும் எடுக்கப்படுகிறது. வளர்ச்சி பணிக்காக நகரங்களில் மரத்தை வெட்டுவதாக இருந்தாலும் பல துறைகளின் ஒப்புதல் பெறப்படுகிறது. ஒவ்வொரு மரத்துக்குப் பதிலாக 10 மரங்கள் நடப்படுகின்றன. மரங்களை வேறிடத்தில் மாற்றி நடும் தொழில்நுட்பமும் சமயங்களில் பயன்படுத்தப்படுகிறது.

இவைமட்டுமல்ல, ஒரு வழித்தடத்தில் மட்டும் மெட்ரோவை பயன்படுத்தும் 4.33 லட்சம் பயணிகள் ஒருவேளை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையோ, இதர தரமற்ற எரிபொருட்களை பயன்படுத்தும் வாகனங்களையோ, பயன்படுத்தும்போது அதிகமான அளவில் மாசு ஏற்படவே வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, அதிகப்படியான வாகனங்களின் எண்ணிக்கை, தரமற்ற எரிபொருள், சீரற்ற சாலைகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்.

Forest
Forest
Pixabay

இப்படி இயற்கையின் மீட்சியும், மனித குளத்தின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இயைந்து இருக்கின்றன. ஆனால், மனிதனோ கடந்த நூறாண்டுக்கால அதிவேக வளர்ச்சியில் மெதுவாக இயற்கையிலிருந்து விலகிச் சென்றுகொண்டே இருக்கிறான். பல்லுயிர்கள் வாழும் இந்தப் பூமி அவனுக்கு மட்டுமே சொந்தமானதாக நினைக்கிறான். இயற்கையும் விட்டபாடில்லை சுனாமியாய், காட்டுத் தீயாய், பெரு வெள்ளமாய் அதன் இருப்பை காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தக் காலநிலை மாற்றத்தாலும், புவிவெப்ப மயமாதலினாலும் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் மூலம் மின் மற்றும் போக்குவரத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய மட்டும் மத்திய தர வருமானம் உடைய நாடுகள் 18 பில்லியன் டாலர்களை (1,800 கோடிகள்) செலவிடுகிறதாம்.

சிட்டுக்குருவி முதல் யானைவரை இந்த வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட காலம் போய் சக மனிதனே இன்னொரு மனிதனின் வளர்ச்சிக்காகப் பாதிக்கப்பட்டால் தவறில்லை என்னும் மன நிலைக்கு வந்திருக்கிறது உலகம்.
நா.உமாசங்கர்

இயற்கை தன்னைத்தானாகவே சீரமைத்துக்கொள்ளும். ஆனால், அதற்கான விலையை நாம் கொடுத்தாக வேண்டும். விதிகளை விதிப்பதும் அதை கடைப்பிடிப்பதும் கடினம்தான். ஆனால், வருங்காலத்தினருக்காக அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். இன்னும் 30 ஆண்டுகளில் பல மில்லியன் மக்கள் சொந்த வீடுகளை வைத்திருந்தாலும், காலநிலை ஏற்படுத்தும் மாற்றங்களால் வறட்சி, வெள்ளம், காற்று மாசு போன்ற காரணங்களால் அவர்கள் இடம் பெயர வேண்டி வரும் என்கிறது ஓர் ஆய்வு.

Forest Fire
Forest Fire

அறிவியலும் தொழில்நுட்பமும்தான், உணவுப் பொருள்கள் முதல் பொருளாதாரம் வரை பெரும்பாலான துறைகளில் தன்னிறைவை பெற்றுத் தந்திருக்கிறது, அவைதான் பரந்த இவ்வுலகை சிறிதாக்கி அனைவருக்கும் சொந்தமாக்கியிருக்கிறது. மனிதனின் வாழ்க்கை தரத்தை மாற்றியிருக்கிறது. அவனின் ஆயுட்காலத்தை கூட்டியிருக்கிறது. ஆனால், அதோடு இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் எனவும் மாற்றியிருக்கிறது.

அதீத வளர்ச்சியால் ஏற்படும் சூழல் பாதிப்பை சீரமைக்க வேண்டியது இன்று அத்தியாவசியமாகியிருக்கிறது. சிட்டுக்குருவி முதல் யானைவரை இந்த வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட காலம் போய் சக மனிதனே இன்னொரு மனிதனின் வளர்ச்சிக்காகப் பாதிக்கப்பட்டால் தவறில்லை என்னும் மன நிலைக்கு வந்திருக்கிறது உலகம். இந்த மனநிலையில் மாற்றமே இன்று நமக்கிருக்கும் ஒரே விடை. வளர்ச்சி முக்கியம்தான், ஆனால் இயற்கை அத்தியாவசியம். வளர்ச்சி என்பது சித்திரமானால், இயற்கை நம் சுவர். நினைவில் கொள்ளுவோம், அளவுக்கு மிஞ்சினால் அறிவியலும் நஞ்சுதான்.

- நா.உமாசங்கர், சந்தூர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு