Published:Updated:

தென்னை, பனை மரங்களில் கூடு கட்டும் அன்றில் பறவை (எ) அரிவாள் மூக்கன்; பறவை சூழ் உலகு - 10

அரிவாள் மூக்கன் ( பட உதவி: குருசங்கர் )

மாலை வேளைகளில் இப்பறவைகள் அடைகின்றபோது உரத்த குரலில் அரற்றும். வீட்டுத் தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளில் உள்ள தென்னை மரங்கள், பனை மரங்கள் போன்றவற்றில் இப்பறவைகள் மாலை வேளைகளில் சத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் காண முடியும்.

தென்னை, பனை மரங்களில் கூடு கட்டும் அன்றில் பறவை (எ) அரிவாள் மூக்கன்; பறவை சூழ் உலகு - 10

மாலை வேளைகளில் இப்பறவைகள் அடைகின்றபோது உரத்த குரலில் அரற்றும். வீட்டுத் தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளில் உள்ள தென்னை மரங்கள், பனை மரங்கள் போன்றவற்றில் இப்பறவைகள் மாலை வேளைகளில் சத்தமிட்டுக்கொண்டிருப்பதைக் காண முடியும்.

Published:Updated:
அரிவாள் மூக்கன் ( பட உதவி: குருசங்கர் )

இந்த வாரம் நாம் காண இருக்கும் பறவை கறுப்பு அரிவாள் மூக்கன், இதை `அன்றில் பறவை' என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Black Ibis அல்லது Red-naped Ibis என்றழைப்பார்கள். இதனுடைய அறிவியல் பெயர் சூடைபிஸ் பேப்பிலோசா. இப்பறவையின் அலகு நெற்கதிர்களை அறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பன்னருவாளைப் போல் இருப்பதால் இப்பறவைக்கு `அரிவாள் மூக்கன்' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

அரிவாள் மூக்கன்
அரிவாள் மூக்கன்
பட உதவி: முரளி

கறுப்பு நிறப்பறவை, தோள் இறக்கைகளில் வெள்ளை நிறத் திட்டு காணப்படும். உச்சந்தலையில் முக்கோண வடிவில் சிவந்திருப்பது இப்பறவையின் தனிச் சிறப்பு. இளம் பறவைகளில் இந்த சிவந்த திட்டு இருக்காது. நீண்ட கழுத்தைக் கொண்டது. அலகு கீழ்நோக்கி வளைந்திருக்கும். கால்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குளங்கள், ஆறுகள் மற்றும் நீரோடைகளின் ஓரங்களில் உள்ள வறண்ட பகுதிகள், தரிசு நிலங்கள் மற்றும் உழவு செய்த வயல்களில் சிறு கூட்டங்களாக காணலாம். கூட்டமாகப் பறக்கின்றபோது `V’ வடிவில் அணியாகப் பறக்கும். நீர் நிலைகளுக்கருகில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் இப்பறவைகள் கூடமைக்கும். வீட்டுத் தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களிலும் இப்பறவைகளின் கூடுகளைக் காண முடிகிறது.

அரிவாள் மூக்கன்
அரிவாள் மூக்கன்
Sankar Subramanian

கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி உலக ஈரநிலங்கள் தினத்தன்று தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிசேக் தாமோர் இ.வ.ப மற்றும் நண்பர் மதிபாலன் அவர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் செட்டிக்குளத்துக்குச் சென்றோம். குளத்தில் சுமார் 30 பனை மரங்கள் இருந்தன. அனைத்து மரங்களிலும் இப்பறவைகள் கூடமைத்து முட்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டோம். கறுப்பு அரிவாள் மூக்கன் கூடு கட்டுவதற்கு பனைமரங்களை அதிகம் தேர்ந்தெடுக்கும். இந்தக் குளத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் நூற்றுக்கணக்கான பனை மரங்களைப் பார்த்துள்ளேன். இப்போது 30-க்கும் குறைவான மரங்களே இக்குளத்தில் உள்ளன. குளங்களில் உள்ள பனை மரங்களை வெட்டாமல் காக்க வேண்டியது நமது கடமை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாலை வேளைகளில் இப்பறவைகள் அடைகின்றபோது உரத்த குரலில் அரற்றும். வீட்டுத் தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளில் உள்ள தென்னை மரங்கள், பனை மரங்கள் போன்றவற்றில் இப்பறவைகள் மாலை வேளைகளில் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும். பத்தமடையில் உள்ள எங்களுடைய வீட்டருகில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் மாலை வேளைகளில் கறுப்பு அரிவாள் மூக்கன் தங்கிக் கொண்டிருக்கிறது.

அரிவாள் மூக்கன்
அரிவாள் மூக்கன்
Sankar Subramanian

அன்றில் பறவைகள் குறித்து தமிழ் இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளன. இப்பறவையின் அலகு வளைந்திருப்பதை கொடுவாய் அன்றில், மடிவாய் அன்றில் என்று தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தலை உச்சி சிவந்திருப்பதை ``எலிதகைந் தன்ன செந்தலை அன்றில்” மற்றும் ``நெருப்பின் அன்ன செம் தலை அன்றில்'' என்ற குறுந்தொகை பாடல்களில் குறிப்பிட்டுள்ளன. இவை அதிக சத்தத்தை எழுப்புவதை ``ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய” என்ற அகநானூற்றுப் பாடலிலும், ``அன்றிலும் பையென நரலும்” என்ற குறுந்தொகை பாடலிலும் பாடப்பட்டுள்ளது.

எனவே, பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த அன்றில் பறவை நமது தமிழ்ச் சமூகத்தோடு இணைந்து வாழ்ந்து வருவதை மேற்கண்ட பாடல்கள் உறுதி செய்கின்றன. என் நண்பர் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ப.ஜெகநாதன் அவர்கள் தன் மகனுக்கு அன்றில் என்று பெயர் சூட்டியுள்ளார். அவருக்கு பறவைகளின் மீது அலாதி பிரியம். நமது தமிழ்ச் சமூகத்தில் பறவைகளின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு சூட்டுவது நெடுங்காலமாகவே உள்ளது.

அரிவாள் மூக்கன்
அரிவாள் மூக்கன்
பட உதவி: முரளி

குயிலம்மா, மயிலம்மா, குயிலி, மயில்வாணன் என்ற பெயர்களை இன்றளவும் கேட்க முடிகிறது. ஆனால், அன்றில் என்ற பெயரை முதன்முதலாக நான் கேட்டபோது அவ்வளவு சந்தோசமாக இருந்தது. கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை திருவிழாவில் தன் மகனுடன் அவர் வந்திருந்தார். என்னிடம் அவருடைய மகனை அன்றில் என்று அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் நண்பர் அருளகம் பாரதிதாசன் அவர்கள் எழுதிய பாறுக்கழுகுகளும் பழங்குடிகளும் என்ற புத்தகத்தின் முதல் பிரதியை சிறுவன் அன்றில் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. அன்றில் பறவையுடன் நாம் கொண்டிருக்கும் சிநேகம் என்றைக்கும் நிலைத்திருக்கட்டும்.

- பறக்கும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism