Published:Updated:

காலநிலை மாற்றத்தால் நிறம் மாறும் பூக்கள்... இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன?

மகரந்தச் சேர்க்கை
மகரந்தச் சேர்க்கை ( Pixabay )

இந்த மாற்றம் அவற்றுடைய மகரந்தச் சேர்க்கையில் உதவுகின்ற பூச்சிகளைக் குழப்புமா... அதனால் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படுமா... இது எந்தளவுக்கு மகரந்தச் சேர்க்கையில் பாதிப்பை உண்டாக்கும்?

உலகளாவிய கரிம வெளியீடு அதிகரித்துக் கொண்டிருப்பதால், காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் தீவிரமடைந்து கொண்டேயிருக்கின்றன. இந்நிலையில், ஏற்படுகின்ற மாற்றங்களுக்குத் தகவமைத்துக் கொள்ளும் விதமாக, மலர்கள் தம் நிறத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகச் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மலர்கள், காலநிலை அவசரத்தின் பாதிப்புகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள, அதிகரிக்கும் சூரியக் கதிர்களிலிருந்து தப்பிக்க, அவற்றுடைய நிறங்களை அடர்த்தியாக்கிக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

பூக்கள்
பூக்கள்
Pixabay

அந்த ஆய்வின்படி, ``உலகளவில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்துமே தத்தம் இனப்பெருக்க முறைகளை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றுடைய வாழிடங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஏற்படுகின்ற மாற்றங்களுக்குத் தகுந்த வகையில் தம் தோற்றங்களிலும் சில மாற்றங்களை உயிரினங்கள் செய்துகொள்கின்றன. இதில், பூக்களும் அடக்கம்."

கரன்ட் பயாலஜி (Current Biology) என்ற உயிரியல் ஆய்விதழில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை இதுகுறித்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில், புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு ஏற்ப, வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதற்கு ஏற்ப, பூக்களில் இருக்கின்ற புற ஊதா நிறமிகளும் அதிகரித்துள்ளன என்று அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

1941-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மலர்களிலுள்ள புற ஊதா நிறமிகள் ஆண்டுக்கு 2 சதவிகிதம் என்ற கணக்கில் அதிகரித்திருப்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. நம்முடைய கண்களுக்குப் புற ஊதாக் கதிர்கள் தெரியாது என்பதால், மலர்களைப் பார்க்கையில் மனிதர்களுக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. ஆனால், மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற தேனீ, வண்ணத்துப்பூச்சி போன்ற உயிரினங்களின் கண்களுக்கு இந்த மாற்றம் தெளிவாகத் தெரியும். அதனால், இது அவற்றுக்குக் குழப்பம் ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் அந்த ஆய்வுக் கட்டுரை முன்வைக்கின்றது.

1977-ம் ஆண்டு (இடது) மற்றும் 1999-ம் (வலது) ஆண்டில் பறிக்கப்பட்ட ஒரேவகையைச் சேர்ந்த இரண்டு மலர்கள்
1977-ம் ஆண்டு (இடது) மற்றும் 1999-ம் (வலது) ஆண்டில் பறிக்கப்பட்ட ஒரேவகையைச் சேர்ந்த இரண்டு மலர்கள்
MATTHEW KOSKI

பூக்களிலுள்ள புற ஊதா நிறமிகள், அவற்றுக்கு ஒரு சன் ஸ்க்ரீனைப் போல் செயல்படுகின்றன. இவை மகரந்தம் மற்றும் அணுக்களை (cells), பாதிக்கக்கூடிய கதிர்வீச்சுகளிடமிருந்து பாதுகாக்கும் வேலையைச் செய்கின்றன. ``குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நிறமிகள் எப்படி மாற்றமடைந்தன என்பதை ஆய்வு செய்வதன் மூலம், சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களைக் கணிக்கமுடியும். ஏனெனில், சூழலியல் மாற்றங்களே அவற்றுடைய மாற்றங்களுக்கும் காரணம்" என்கிறார் அந்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்த ஆய்வாளர்களில் ஒருவரும் ஆய்வுக்குழுவின் தலைவருமான மேத்யூ கோஸ்கி.

ஆய்வுக்குழுவினர், முதலில், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வறண்ட தாவர மாதிரிகளைச் சேகரித்தனர். மொத்தம் 42 வகையான தாவரங்களிலிருந்து 1,238 மாதிரிகளை அவர்கள் சேகரித்துள்ளனர். அதில் 1941 முதல் இதுவரை பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தாவர மாதிரிகளும் அதில் அடக்கம். அவற்றின் நிறமிகளை, புற ஊதாக் கதிர்களைப் படம் பிடிக்கக்கூடிய ஒளிப்படக்கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தார்கள். பூவின் இதழ்களில் நிறமி அளவு காலப்போக்கில் மாறியிருப்பது அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பிறகு, மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பகுதிகளின் உள்ளூர் தட்பவெப்பநிலை மற்றும் ஓசோன் அளவு குறித்த தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.

மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற வண்ணத்துப்பூச்சி
மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற வண்ணத்துப்பூச்சி
Pixabay

தாவரவியல் ஆய்வாளர் மேத்யூ கோஸ்கி இதுகுறித்து வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், ``சில மலர்களில் இந்த நிறமிகளுடைய அளவு அதிகமாகியுள்ளது. ஆனால், ஒருசில வகை தாவரங்களில் இந்த அளவு குறைந்துள்ளது. மலர்களில் சிலவற்றுக்கு ஒருவிதமான மாற்றமும் மற்ற சில வகைகளுக்கு வேறுவிதமான மாற்றமும் எப்படி நிகழ்கின்றது?

இதைப் புரிந்துகொள்ள நாங்கள் காற்றிலுள்ள ஓசோன் அளவு மற்றும் தட்பவெப்பநிலையின் தாக்கத்தை, அவை ஒவ்வொன்றும் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ``இந்த மாற்றங்களுக்கு பூக்களுடைய அமைப்பும்கூட ஒரு காரணம்" என்று கூறுகின்றார் தேவ்ரூபா ரக்‌ஷித். திறந்த, மகரந்தங்களை வெளியே தெரியுமளவுக்கு வைத்திருக்கின்ற மலர்களில், ஓசோன் அளவு குறைவாகவும் கதிர்வீச்சு அதிகமாகவும் இருந்த நேரத்தில் நிறமிகள் அதிகரித்திருக்கின்றன. அதுவே, மகரந்தங்களைச் சின்னஞ்சிறு கொத்துகளாக, இதழ்களுக்கு நடுவே வைத்திருக்கும் மலர்கள் ஓசோன் அளவுக்கு மட்டுமே எதிர்வினை ஆற்றியுள்ளன. அவை, தட்பவெப்பநிலை அதிகரிப்பிற்கு எவ்வித மாற்றத்தையும் சந்திக்கவில்லை.

நிறம் மாறும் பூக்கள்
நிறம் மாறும் பூக்கள்
MATTHEW KOSKI

``இதற்கு முன்பும்கூட பூவிலிருக்கும் இதழ்கள் மகரந்தங்களை, புற ஊதாக் கதிர்களிலிருந்து ஒரு கேடயம் போல் நின்று பாதுகாத்துக் கொண்டிருந்தன. ஆனால், உள்பகுதியில் மகரந்தங்களை வைத்திருக்கும் மலர்களில் புற ஊதாக் கதிர்களை கிரகித்துக் கொள்ளும் நிறமிகள் அதிகமாக இருந்தால், அது மகரந்தங்களை மேலும் சூடாக்கத்தான் செய்யும். ஆகவே, நிறமிகளின் அளவைக் குறைத்துக் கொள்வதன் மூலம் மகரந்தங்களைக் குளுமையடையச் செய்யமுடியும்" என்று குறிப்பிடுகின்றார் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் ஆய்வாளராக இருக்கும் சார்லஸ் டேவிஸ்.

தாவரப் பெருக்கத்திற்கு மிகவும் முக்கியமான பொருளைப் பாதுகாக்க, என்ன விலையை வேண்டுமானாலும் பூக்கள் கொடுக்கும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பூக்கள் கொடுத்துள்ள அத்தகையதொரு விலைதான் இந்த நிற மாற்றம். ஆனால், இந்த மாற்றம் மகரந்தச் சேர்க்கையைப் பாதிக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

இந்த மாற்றம் அவற்றுடைய மகரந்தச் சேர்க்கையில் உதவுகின்ற பூச்சிகளைக் குழப்புமா... அதனால் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படுமா... இது எந்தளவுக்கு மகரந்தச் சேர்க்கையில் பாதிப்பை உண்டாக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, தாவரவியல் ஆய்வாளர் பேராசிரியர் நரசிம்மனிடம் பேசினோம்.

பூச்சிகள்
பூச்சிகள்
Pixabay

அவர், ``உண்மைதான். பூச்சிகள் பூக்களைக் கண்டறிவதே நிறத்தை அடிப்படையாக வைத்துதான். அவற்றுடைய பரிணாமவியல் நினைவுகளில் அது பொதிந்திருக்கும். அந்த நினைவுகளில் இருக்கின்ற நிறம் மாற்றமடையும்போது அவை குழம்பத்தான் செய்யும். ஆனால், ஒரு தாவரத்திற்கு ஒரே பூச்சி மட்டுமே மகரந்தச் சேர்க்கை செய்யாது. அப்போது, ஒரு பூச்சி குழம்பினால் இன்னொன்று இதற்குத் தகவமைத்துக் கொள்ளலாம். மகரந்தச் சேர்க்கை இதனால் பெரியளவுக்குப் பாதிக்காது. பூச்சிகள் விரைவாகவே இதற்குத் தகவமைத்துக் கொள்ளும். அதோடு, நிறத்தை மட்டுமே வைத்து அவை பூக்களைக் கண்டறியாது. அந்த நிறங்களையே அவை, புற ஊதாக் கதிர்களை அடிப்படையாக வைத்துதான் கண்டறிகின்றன.

பூக்களில் புற ஊதாக் கதிர்களின் செயல்பாடுகளைக் கொண்டு கண்டறிவதற்கான உணர்திறன் பூச்சிகளுக்கு உண்டு. அதற்குரிய வேதிம உணர்திறன் கூர்மையாக இருக்கும். ஒரு வண்ணத்துப்பூச்சி அது வழக்கமாக முட்டையிடுகின்ற தாவரத்தில் சென்று முட்டையிடுவதற்கு, அதன் கால்களிலேயே அந்த வேதிம உணர்திறன் இருக்கும். அந்தத் தாவரம் அதன் காலில் பட்டாலே, அது வழக்கமாக முட்டையிடும் தாவரம்தான் என்பதை அந்த வண்ணத்துப்பூச்சி கண்டுகொள்ளும். அந்த மாதிரியான உணர்திறன்கள் அவற்றுக்கு இருப்பதாலும் அந்த வேதிமங்களில் எந்த மாற்றங்களும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும், மகரந்தச் சேர்க்கையில் நாம் அச்சப்பட வேண்டிய அளவுக்கு மாறுதல் வர வாய்ப்பில்லை" என்று கூறினார்.

Hoverfly
Hoverfly
Pixabay

இயற்கையில் நிகழ்கின்ற இந்த மாற்றங்கள், காலநிலை மாற்றம் மேன்மேலும் தீவிரப்படுவதை உணர்த்துகின்றன. மனிதத் தூண்டுதலால் உண்டான தீவிரத்திற்குத்தான் தாவரங்கள் எதிர்செயலாற்றுகின்றன. ஆனால், இன்னும் எத்தனை நாள்களுக்கு அவற்றால் இப்படிப்பட்ட மாற்றங்களின் மூலமாகத் தாக்குப்பிடிக்க முடியும் என்பதே தற்போது எழுகின்ற கேள்வி. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மனிதத் தூண்டுதலால் வேகமெடுத்துள்ள இந்தப் பிரச்னைக்கு மனிதர்கள் விரைந்து செயலாற்றியாக வேண்டிய கட்டாயமும் உருவாகியிருப்பதை இந்த மாற்றம் உணர்த்துகின்றது.

அடுத்த கட்டுரைக்கு