Published:Updated:

`யானை வழித்தடங்களை ஆவணப்படுத்தியதில் முக்கியமானவர்!' - கொரோனாவால் மறைந்த காட்டுயிர் ஆய்வாளர்

முனைவர் ராம்குமார்
முனைவர் ராம்குமார்

வனத்துறைக்கு, யானைகளின் வழித்தடங்களைக் கண்டறிய பெரிதும் உதவியவர். யானைகளின் பாதுகாப்பு மட்டுமன்றி, மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதுக்குமான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.

காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ராம்குமார், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்திய காட்டுயிர் நிறுவனத்தில், யானை வழித்தடங்களைப் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குநரும் திட்டக்குழு தலைவருமான முனைவர் ராம்குமார், யானைகளின் பாதுகாப்புக்காக அதிகம் உழைத்தவர். வனத்துறைக்கு, யானைகளின் வழித்தடங்களைக் கண்டறிய பெரிதும் உதவியவர். யானைகளின் பாதுகாப்பு மட்டுமன்றி, மேற்குத்தொடர்ச்சி மலை முழுவதுக்குமான சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்.

முனைவர் ராம்குமார்
முனைவர் ராம்குமார்

இந்திய காட்டுயிர் நிறுவனத்தோடும் மத்திய அரசோடும் இணைந்து நாடு முழுவதுமுள்ள யானைகளின் வழித்தடங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியில் முக்கியப் பங்காற்றியவர். அது, `ரைட் ஆஃப் பாசேஜ்' (Right of Passage) எனும் ஆவண நூலாக வெளிவந்தது. அதில், இடம்பெற்றுள்ள 108 வழித்தடங்களின் வரைபடங்களை ஆவணப்படுத்தியதில் முனைவர்.ராம்குமாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மயிலை ஏ.வி.சி கல்லூரியில் வன உயிரின அறிவியல் பட்ட மேற்படிப்பை முடித்தவர், கோவை வனக் கோட்டத்தில் நிலவியல் அமைப்பு, யானைகளின் வாழிடம், வழித்தடங்கள், மனித-யானை எதிர்கொள்ளல் ஆகியவற்றில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

டெல்லியில் பல ஆண்டுகளாக இருந்து இந்தியா முழுவதற்குமான காட்டுயிர்கள் தொடர்பான பல ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு மாநாடு வெற்றிகரமாக அமைந்ததில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மேலும் காட்டுயிர்கள் கணக்கெடுப்பு, ஆய்வுப்பணிகள், விழிப்புணர்வுப் பணிகள் எனப் பல ஆண்டுகளாக காட்டுயிர் பாதுகாப்பிற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.

Elephant Corridor
Elephant Corridor

"யானைகளின் பாதுகாப்பிற்காக அவர் மேற்கொண்ட பணிகள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை வாழ் காட்டுயிர்களின் பாதுகாப்பிற்காக அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். காட்டுயிர்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இது ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு