Published:Updated:

மன்னார்வளைகுடா கடலில் கலக்கும் கழிவுகள்; கடல் வளம் அழியும் அபாயம்; எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

மன்னார் வளைகுடா கடலில் கலக்கும் குப்பைகள்
News
மன்னார் வளைகுடா கடலில் கலக்கும் குப்பைகள்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து செல்லும் கழிவுகள், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகப் பகுதிகளில் கலப்பதால் மீன் வளம் மட்டுமல்லாமல், பவளப்பாறைகள் மற்றும் கடல் வளமும் அழியும் சூழல் நிலவுவதாகக் கூறுகிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை செல்கிறது. கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உபரிநீர் கடலுக்கு செல்வதற்காக, ஆங்கிலேயர் காலத்தில் `பக்கிள் துரை’ என்ற ஆங்கிலேய அதிகாரியால் இந்த ஓடை அமைக்கப்பட்டது. காலப் போக்கில் பக்கிள் ஓடை, சாக்கடைக் கால்வாயாக மாறியது. தூத்துக்குடியின் கூவம் என்றழைக்கப்படும் இந்த ஓடையின் இரண்டு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பிறகு, அகற்றப்பட்டது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், பக்கிள் ஓடையை சீரமைக்க உத்தரவிட்டார்.

பக்கிள் ஓடைக்கழிவு
பக்கிள் ஓடைக்கழிவு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதையடுத்து ரூ.32 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திரேஸ்புரம் கடற்கரை முதல் 3-வது மைல் வரை சுமார் 6 கி.மீ தொலைவுக்கு சீரமைக்கப்பட்டது. இந்த ஓடையின் வழியாகவே மழை வெள்ளத்தின்போது மாநகரின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேங்கிய மழை நீரை கடலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது மாநகரின் மொத்தக் கழிவுகளையும் சுமந்து கொண்டு தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகக் கடல் பகுதியில் கலக்கிறது.

இந்தப் பக்கிள் ஓடையில் கழிவு நீர் மட்டுமல்லாமல் அனைத்துக் கழிவுகளும் தேங்கி உள்ளதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள், மீன்பிடிப் படகுகளைக் கடலுக்குள் கொண்டு செல்ல வேண்டுமென்றால் இந்த கழிவுகளில் இறங்கிதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து சூழல் ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். ``ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தின்போது தேங்கும் கழிவுகள் அகற்றப்படுவதும், மீண்டும் கழிவுகள் சேர்வதும் தொடர் கதையாகவே உள்ளது. இந்தப் பகுதியில் கழிவுகள் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயச் சூழல் உள்ளதாகக் கூறும் மீனவர்கள், கடலில் கலப்பதற்கு முன் பக்கிள் ஓடைக் கழிவுகளை முறையாகக் கண்காணித்து அகற்ற வேண்டும் என்கின்றனர்.

பக்கிள் ஓடைக்கழிவுகள்
பக்கிள் ஓடைக்கழிவுகள்

மன்னார் வளைகுடா தேசிய பூங்காவின் முக்கிய அங்கமாக விளங்குபவை இங்குள்ள வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு ஆகிய 21 தீவுகளும்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகளும் வேம்பார் குழுவில் 3 தீவுகளும் கீழக்கரை குழுவில் 7 தீவுகளும் மண்டபம் குழுவில் 7 தீவுகளும் அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் கடல் சூழலில் முக்கியமான அங்கமாக இருப்பதோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு பெரும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இயற்கை சீற்றங்கள் பெரிய அளவில் கடற்கரையைத் தாக்காத வண்ணம் தடுப்பு அரண்களாக இந்தத் தீவுகளும், அதைச் சுற்றியுள்ள பவளப்பாறைகளும் செயல்படுகின்றன. மேலும், இந்தத் தீவுகளைச் சுற்றிய பகுதிகளில்தான் மீன் வளம் அதிகம் இருக்கும் என்பதால் இந்தத் தீவுகள்தான் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளன.

மன்னார் வளைகுடா கடலில் கலக்கும் குப்பைகள்
மன்னார் வளைகுடா கடலில் கலக்கும் குப்பைகள்

கடல் சூழலிலும், கடற்கரைப் பாதுகாப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகள் அண்மைக் காலமாகப் பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. சூழலியல், புவி வெப்பம் உள்ளிட்டவை ஒரு காரணம் என்றால் நகரின் மொத்தக் கழிவுகளும் கடலில் கலப்பதும் மீன் வளங்களை மட்டுமல்ல கடலின் வளத்தையும் அழித்துவிடும் சூழல் உள்ளது” என்றனர்.