Published:Updated:

மன்னார் வளைகுடாவில் பாசிப்படலத்தால் அழியும் பவளப் பாறைகள்; எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

உயிரிழந்த பவளப் பாறைகள்
News
உயிரிழந்த பவளப் பாறைகள்

மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகப் பகுதியில் சுமார் 194 கிலோ மீட்டர் தூரத்தில் படந்துள்ள பச்சைப் பாசிப் படலத்தால் பவளப்பாறைகள் பெரும் அழிவை சந்தித்துள்ளது. இறந்த பவளப்பாறைகளை மறுஉருவாக்கம் செய்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 350 கி.மீ தொலைவில் அமைந்துள்ள 10,500 சதுர கி.மீ கடல் பரப்பளவுப் பகுதி, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகப் பகுதியில் பவளப்பாறைகள், கடல் புற்கள் நிறைந்த பல்லுயிர் பெருக்கத்துக்கு உகந்த பகுதியாகும். இந்தப் பகுதியை `யுனெஸ்கோ அமைப்பு’, கடந்த 2001-ம் ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகமாக அறிவித்தது. இங்கு 4,223 வகையான கடல் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. இதில் 117 வகையான பவளப்பாறைகள், 14 வகையான கடல் புற்கள், 181 வகையான கடல் பாசிகள், 1,147 வகையான மீன்கள், கடல் பசுக்கள், 158 வகை கணுக்காலிகள், 856 வகை மெல்லுடலிகள் உள்ளன. இந்த உயிர்க்கோள காப்பகம் பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

தீவுகளில் படர்ந்துள்ள பாசிப் படலம்
தீவுகளில் படர்ந்துள்ள பாசிப் படலம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்துக்கு `நாக்டிலுகா சைன்டிலன்ஸ்’ (Noctiluca scintillans) என்ற பாசி படலம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு புதிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளார்கள். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை பெய்யக்கூடிய செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மன்னார் வளைகுடா பகுதியில் பாசிப்படலம் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு முதன் முறையாக இந்த பாசிப்படலம் மன்னார் வளைகுடாவில் கீழக்கரைக் கடல் பகுதியில் `வாளை’, `தலையாரி’ ஆகிய தீவுப் பகுதிகளில் கண்டறியப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த வகைப் பாசி படர்ந்ததால் அந்தப் பகுதி முழுவதும் பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. இப்பாசிப் படலம் வேகமாக வளரக்கூடியது. இவை கடலின் மேற்பரப்பில் பச்சைப் பசேலென படர்ந்து இருப்பதால், கடல் நீரிலுள்ள ஆக்சிஜனின் அளவைக் குறைக்கிறது. மீன்களின் செவுள்களையும் பாதிக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு 17 கிலோ மீட்டர் தூரமும், 2020-ம் ஆண்டு 100 கிலோ மீட்டர் தூரமும் பாதிக்கப்பட்டது. தற்போது 2021-ம் ஆண்டு இந்த பாசியின் தாக்கம் இதுவரை இல்லாத அளவு மிகவும் அதிகரித்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 194 கிலோ மீட்டர் தூரத்திற்கு `கடல்பாசி’ படர்ந்து காணப்படுகிறது. இதனால், அதிக அளவில் மீன்கள், இறால், நத்தை, கணுக்காலிகள், கடல் அட்டை, கடல் வெள்ளரி, கடல் பாம்பு உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இறந்த நிலையில் குறிப்பாக `குருசடை’, `மனோலிபுட்டி’, `மனோலி’ ஆகிய தீவுகளில் ஒதுங்கி உள்ளன.

உயிரிழந்த பவளப் பாறைகள்
உயிரிழந்த பவளப் பாறைகள்

பவளப்பாறைகள் வெளிரும் நிகழ்வை போன்று, இந்த பாசிகளும் பவளப்பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. ஆக்சிஜனின் அளவு குறைவதால், கடந்த 2008, 2019-ம் ஆண்டுகளில் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் பவளப்பாறைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. வனத்துறை மற்றும் தூத்துக்குடியிலுள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள், கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பாசியின் பரவல்தன்மை மற்றும் பவளப்பாறைகளின் நிலை குறித்து கடலுக்கு அடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த ஆய்வின் முடிவுகள் குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் பேசினோம். ``ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த `குருசடை தீவு’ பகுதியில் சுமார் 500 சதுர மீட்டர் பரப்பில், 102 பவளப்பாறை கூட்டுயிரிகள், `மனோலிபட்டி தீவு’ பகுதியில் 270 சதுர மீட்டர் பரப்பில் 211 பவளப்பாறை கூட்டுயிரிகள், `மனோலி தீவு’ பகுதியில் சுமார் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 422 பவளப்பாறை கூட்டுயிரிகள் அழிந்துள்ளன. இதில், `அக்ரோபோரா’ வகை பவளப்பாறை அதிக அளவில் அழிவைச் சந்தித்துள்ளன. இதில் 5 செ.மீ., முதல் 160 செ.மீ., வரை அகலம் கொண்ட பவளப்பாறைகளும் அழிந்து உள்ளன.

உயிரிழந்த பவளப் பாறைகள்
உயிரிழந்த பவளப் பாறைகள்

ஏற்கனவே பவளப்பாறைகளுக்கு பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக அமைந்து உள்ள நிலையில் தற்போது இந்த பாசியும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. ஆகையால் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் பவளப்பாறைகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முடிந்த அளவு பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமாக அமைந்துள்ள பவளப்பாறைகளுக்கு இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். இறந்த பவளப்பாறைகளை மறுஉருவாக்கம் செய்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.