Published:Updated:

முகாம் நோக்கி 50 மணி நேரப் பயணம், திடீரென தப்பிச்சென்ற `ரிவால்டோ' யானை... என்ன நடந்தது?

தேடும் வனத்துறையினர்
தேடும் வனத்துறையினர்

இன்று மாலை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த `ரிவால்டோ' யானை தப்பிச்சென்று விட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டலமான மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதியில் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக குறைபாட்டுடன் பல ஆண்டுகளாக ஆண் காட்டு யானை ஒன்று உலவி வருகிறது.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை
நீலகிரி: பாதிப்புடன் வலம்வரும் ரிவால்டோ யானை - புதிய யோசனையுடன் களமிறங்கிய வனத்துறை!

உள்ளூர் மக்களால் `ரிவால்டோ' என்ற பெயரில் அறியப்படும் இந்த காட்டு யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு நடக்கவைத்தே அழைத்துச் செல்லும் சவாலான பணியை வனத்துறையினர் நேற்று முன்தினம் துவக்கினர்.

வாழத்தோட்டத்தில் துவங்கிய இந்த நடை பயணத்தில் வழிநெடுகிலும் இந்த யானைக்கு பழம், கரும்பு, தர்பூசணி போன்றவற்றைக் கொடுத்தே அழைத்துச் சென்று, நேற்று முன்தினம் இரவு மாவனல்லா பகுதியில் வைத்து கண்காணித்தனர்.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை

மீண்டும் நேற்று காலை பயணத்தை துவக்கி, யானையை மெதுவாக நடக்க வைத்து இரவு விபூதி மலை அடிவாரப் பகுதியை சென்றடைந்தனர். வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் இரவு முழுக்க இந்தப் பகுதியில் தீ மூட்டி யானையை‌ கண்காணித்தனர். இன்று காலை மீண்டும் நடை பயணத்தை துவக்கி முகாம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்.

மயக்க ஊசியின்றி பழங்கள் மூலமாகவே கட்டுப்படுத்தும் இந்த புது முயற்சி குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை, ``ஒரு காட்டு யானையை மயக்க ஊசி மற்றும் கும்கிகள் உதவி இல்லாமல், தொடர்ந்து 50 மணி நேரத்துக்கும் மேலாக கட்டுக்குள் வைத்திருப்பது இதுவே முதல்முறை. யானையின் போக்கிலேயே சென்று முன்னோக்கிச் செல்கிறோம்.

ரிவால்டோ யானை
ரிவால்டோ யானை

இரவு பகலாக 20-க்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் தெப்பக்காடு முகாமுக்கு ரிவால்டோவுடன் செல்வோம்" என்றனர். இந்நிலையில் இன்று மாலை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த `ரிவால்டோ' யானை தப்பிச்சென்று விட்டது. இதையடுத்து யானையைத் தேடும் பணியில் வனத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு